தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கண்டன அறிக்கை !!

  • Post category:General

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கண்டன அறிக்கை !!

காப்பர் எடுக்கும் தொழிற்சாலையான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி தமிழக மக்கள் நெடுநாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம்மக்களின் போராட்டம் 100 நாட்களை எட்டிய நிலையில் ஒரு ஊர்வலத்தை நிகழ்த்த திட்டமிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிடும் போராட்டமாக அறிவித்திருந்தனர். இன்று மே 22  2018 அன்று காலை 11 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத்தை வழியிலேயே தடுத்து நிறுத்தாமல், அவர்களை உள்ளே நுழையவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாக்கப்பட்டதாகவும்,  அலுவகத்தின் ஒரு பகுதி கொளுத்தப்பட்டதாகவும், வாகனங்களை எரித்ததாகவும் கூறி அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு துப்பாச்சூடு நடத்தியுள்ளது தமிழக காவல்துறை. 

மனிதாபிமானத்திற்கு பெயர் போன தமிழகத்தில் இலக்கை நோக்கி துல்லியமாக சுடுவதில் பயிற்சி பெற்ற (sniper) காவல் பிரிவினரை கொண்டு போராட்ட மக்களின் தலை, மார்பு, இடுப்பு போன்ற பகுதிகளில் சுட்டு குழந்தைகள், பெண்கள், மாணவமணிகள் என எல்லோர் மீதும் வெறியாட்டம் நடத்தி இருக்கிறது காவல்துறை. அதனோடு நிற்காமல் சிகிச்சை பெற்றுவந்த போராட்ட மக்களை மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கி காட்டுமிராண்டிகளைவிட மோசமாக நடத்து கொண்டனர், வீடுகளையும் விட்டுவைக்க வில்லை என்பது அங்கிருந்து வரும் கூடுதல் தகவல்.

இதற்கு தமிழக அரசோ போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்துவிட்டனர் என்றும், அவர்களிடம் இருந்து மக்களை காக்கவேண்டும் என்றே துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது என்று மனிதாபிமானமற்ற முறையில் பதில் அளிக்கிறது.

மேலும் நிவாரணம் என்ற பெயரில் கொல்லப்பட்ட ஒரு உயிரின் மதிப்பு 10 லட்சம் என்ற விலையையும் நிர்ணயம் செய்துள்ளது ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இவர்களின் தலைமையிலான தமிழக அரசு. 

இப்படி நடுவண் அரசின் கைக்கூலிகளாய் , பெருமுதலாளிகளுக்கு விசுவாசமாய் இருந்து முதுகெலும்பற்று, காட்டாட்சி  நடத்தும் தமிழக அரசையும், அதை ஆட்டுவிக்கும் மத்திய அரசையும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.

@பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா