அஞ்சாமலா போய்விடுவர் சமூக அநீதியும் சமூக நீதியும் !

பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தார் தான் படிக்க வேண்டும் என்கிற நிலையினால், எல்லோருக்கும் கல்வி கற்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படாத சூழலினால், வேலை வாய்ப்பிற்கு கல்வி அடிப்படை என்கிற காலம் வந்தபோது எல்லா வேலை வாய்ப்புகளும் குறிப்பிட்ட சில சாதிகளுக்கு மட்டுமே வந்து சேர்ந்தது.

எல்லோருக்குமான அரசாங்கத்தை எல்லா காலமும் வழிநடத்தக்கூடிய நிலையான அதிகார பொறுப்புகளும், பணிகளும் எல்லோருக்குமானதாக இல்லை. “மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்கிற தத்துவத்தின் அடிப்படையிலிருந்து விலகி குறிப்பிட்ட மக்களின் நலனுக்காக, குறிப்பிட்ட மக்களால், குறிப்பிட்ட மக்களே, எல்லா மக்களின் சாட்சியாக நடத்தும் ஆட்சி என்கிற ரீதியில் இந்தியாவில் மக்களாட்சி நடந்து கொண்டிருந்தது

பதவி, வேலை என்பவையெல்லாம் வெறும் சம்பளம் சார்ந்தது மட்டுமல்ல மாறாக அவை அங்கீகாரம் சார்ந்தவை, அதிகாரம் சார்ந்தவை. நாளை அரசு எடுக்கும் ஒரு முடிவு என்னுடைய சமூக நலனை பாதிக்கும் என்கிறபோது அதை பிரதிநிதித்துவப்படுத்த அதிகாரம்  அத்யாவசியம் ஆகிறது

அரசு என்பது எல்லோரையும் உள்ளடக்கியதாக, அதன் அதிகாரம் எல்லோராலும் பகிர்ந்துகொள்ளப்படுவதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் நிலவி வந்த பிறப்பின் அடிப்படையிலான சமூக அநீதியின் விளைவாய், அரசு குறிப்பிட்டவர்களுடையதாகவும், அதிகாரம் ஓரிரு சமூகங்களிடம் குவிந்துள்ளதாகவுமான சூழல் நிலவுகிறது

இந்த சமூக அநீதிக்கான நிவாரணம் தான் சமூகநீதி, மறுக்கப்பட்ட இடங்களை கேட்டுப்பெறும் உரிமை தான் இடஒதுக்கீடு. ஆனால் முழுமையான சமூக நீதி இன்று வரை சரியாய் கிடைக்கவில்லை, அரைகுறையாய் கிடைத்த இடஒதுக்கீடும் அத்தனை சாதாரணமாய் கிடைத்துவிடவில்லை.

நீண்ட பயணங்களும், நொடியில் கிடைத்தவைகளும்

1918 ல் தொடங்கி, 1931 ல் அண்ணல் அம்பேத்கர் முதலாம் வட்டமேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் பற்றி பேசியது, 1931ன் மக்கள் தொகை கணக்கீட்டின் படி 1935ல் வெளியிடப்பட்ட அட்டவணை சாதிகள் பட்டியல், 1942 ல் கேட்கப்பட்ட பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு, 1950 ல் வழங்கப்பட்ட பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு என்று நீண்டு ஓடி  இன்று இருக்கக்கூடிய sc – 15% மற்றும் st – 7.5% என்கிற நிலையை 1982 ல் அடைவதற்கு இந்த நாட்டின் கால்வாசி மக்கள் ஏறக்குறைய 62 ஆண்டுகள் கடும் போராட்டங்கள் நிகழ்த்த வேண்டியிருந்தது

செண்பகம் துரைராஜன், சீனிவாசன் போன்றோரின் வழக்கினால் முத்தையா முதலியார் பெரும் தடைகளுக்கு பிறகு கொண்டுவந்த வகுப்புவாரி உரிமை பறிக்கப்பட்டபோது பெரியார் சமூகநீதி காக்க போர்க்களம் புகுந்ததிலிருந்து எடுத்து பார்த்தால் கூட, 1951ல் நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முதல் சட்டதிருத்தம், 1953ல் முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிசன், 1979ல் மண்டல் கமிசன், 1990ல் விபி சிங் அரசால் மண்டல் கமிசன் அமலாக்கம், 1991-92 ல் இந்திரா சகானி  வழக்கு, 2007 ல் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு என்று இன்றைய நிலையை அடைய இந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலான மக்கள் அரை நூற்றாண்டுக்கும் மேல் போராட வேண்டியிருந்தது.

கமிசனின் பரிந்துரையை அமல்படுத்து வோம் என்று அறிவிக்க பத்தாண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது, உச்சமாக இந்த நாட்டின் மிகப்பெரும்பாண்மையான மக்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை உறுதிபடுத்தியதற்காக ஒரு அரசு வீட்டுக்கு போக வேண்டிய நிலை வந்தது. அரசே ஏற்ற பிறகும் நீதிமன்றத்தில் நீண்ட அரசியல் சாசன அமர்வில் நெடிய போராட்டங்கள் நடத்தினோம், அதன் பிறகும் சட்டத்திலேயே இல்லாத creamy layer, maximum slab 50%, no reservation in promotion என்று ஆயிரம் முட்டுக்கட்டைகளை.

இவ்வளவு ஏன், 1980ல் சமர்பிக்கப்பட்ட பரிந்துரையில் ஒரே ஒரு  அம்சமான கல்வி மட்டும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பதில் 1990களிலேயே வேலைவாப்பில் ஒதுக்கீடு பெற்றும், கல்வியில் பெறுவதற்கு 2007 வரை போராடியிருக்கிறோம். அப்படி போராடியும் 27% மொத்தமாக பெற முடியவில்லை, ஒவ்வொரு ஆண்டும் 9% என்று தவனை முறையில் தான் 27% நெருங்க முடிந்தது

மேலே சொன்னவைகளெல்லாம் இந்த நாட்டில் சமூக அநீதிக்குள்ளான மக்களுக்கு நிவாரணத்திற்கான  போராட்டங்கள், இத்தனை களங்களுக்கு பிறகுதான் இடஒதுக்கீடு எனும் உரிமை அவர்களுக்கு கிடைத்தது ஆனால் இந்த சமூக அநீதியை இழைத்த மக்களுக்கு அந்த சலுகை எத்தனை அவசரத்தில் கிடைத்திருக்கிறது  தெரியுமா? (மறுக்கப்பட்டவனுக்கு கொடுக்கப்படுவது தான் உரிமை, அனுபவித்தவனுக்கு அள்ளிகொடுப்பதற்கு பெயர் சலுகை தான், தனக்குத்தானே அள்ளி வைத்துக்கொள்வதால் அதனை திருட்டு என்று கூட சொல்லலாம்)

ஜனவரி 7, 2019 அன்று மத்திய அமைச்சரவை பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு என்கிற முடிவினை எடுக்கிறது, அதற்கடுத்த நாள் மக்களவையில் அதற்கு தேவையான அரசியல் சாசன சட்டதிருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, எட்டாம் தேதியோடு முடிவடைய வேண்டிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே நீட்டிக்கப்பட்டு, ஒன்பதாம் தேதி மாநிலங்களவையில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுகிறது, ஜனவரி 12ம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாகிறது. கிட்டதட்ட 120 மணி நேரத்தில் எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் பத்து சதவீத இடஒதுக்கீட்டை அவர்களால் பெறமுடிகிறது.

அடிபட்டவன் சிகிச்சை கிடைக்க அறுபது, எழுபது ஆண்டுகள் போராடியும் முறையான சிகிச்சை கிடைக்காத நாட்டில், சிகிச்சை தேவையேப்படாத அடித்தவனுக்கு ஐந்து நாட்களில் எல்லா சிகிச்சையும் திணிக்கப்படுகிறது

1900களின் தொடக்கத்தில் சாகு மகாராசர் இடஒதுக்கீடு போலொரு நடவடிக்கை எடுத்த காலம் தொடங்கி, நீதிக்கட்சியின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை, முதல் சட்டதிருத்தம், மண்டல் கமிசன் அமலாக்கம், அர்ஜுன் சிங் காலத்தில் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வரை எல்லாவற்றையும் எதிர்த்தவர்கள்.

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நடவடிக்கைக்காக வாராது வந்த மாமணி போல் வந்த ஓர் அரசை கவிழ்த்தவர்கள், தீக்குளித்தவர்கள், இந்த நாடு சீரழிய ஒற்றை காரணம் இடஒதுக்கீடு என்று உயிர் போக கத்தியவர்கள் எல்லோரும் ஒரே நாளில், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலையை எடுக்கிறார்கள். இவ்வளவு காலம் இடஒதுக்கீடு தொடர்பில் எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளுக்கும் எதிராக நின்றவர்கள் இதை ஆதரிக்கும் இடத்திலிருந்து தான், இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் உள்ள அபாயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நாங்கள் ஏன் பதறுகிறோம்

உங்கள் இடஒதுக்கீட்டில் கைவைக்காமல், மீதமுள்ள இடங்களிலிருந்து தானே கொடுக்கிறார்கள். அதற்கு ஏன் இவ்வளவு பதறுகிறீர்கள் என்று கேட்கலாம்.

நிச்சயம் பதறத்தான் செய்வோம், முதலில் மண்டல் கமிசனில் இதர பிற்படுத்தப் பட்டோர் என்று அடையாளங்காணப்பட்ட சாதிகளின் மக்கள் தொகை இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 52 விழுக்காடு. ஆனால் நீதிமன்றம் இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 50 விழுக்காட்டிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று சொல்லியதால், ஏற்கனவே இருந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு 22.5 விழுக்காடு போக, 27 விழுக்காடு இதர பிற்படுத்தப் பட்டோருக்கு கொடுக்கப்பட்டது. ஆக 49.5 விழுக்காடு இடங்கள் தான் இடஒதுக்கீடு வரம்புக்குள் வருகிறது. இந்த நாட்டின் 75 விழுக்காடு மக்கள் இந்த 49.5 விழுக்காடு இடங்கள் தான் ஒதுக்கீடு. அதேசமயம் இடஒதுக்கீடு வரம்புக்குள் வராத 50.5 விழுக்காடு  இடங்கள் என்பவை முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமேயான இடங்கள் அல்ல அவை பொதுப்போட்டிக்கான இடங்கள். அந்த 50.5 விழுக்காட்டில் இடஒதுக்கீடு பிரிவினருக்கும் உரிமை உண்டு (குறிப்பு இடஒதுக்கீடு பிரிவினரின் மக்கள் தொகை -75% ஆனால் ஒதுக்கீடு 49.5% தான்). ஆகவே பொதுப்பிரிவில் கைவைப்பது என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் கைவைப்பதும் தான்

அடுத்ததாக, நாளை உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டம் கேள்விக்குள்ளாகும்போது. இடஒதுக்கீட்டின் வரம்பு 50% உட்பட்டு இருக்க வேண்டும் என்று, 1992 நவம்பரில் இந்திரா சகானி  vs ஒன்றிய அரசு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக சொல்லி ரத்து செய்துவிட்டால் சிக்கல் இல்லை. மாறாக எந்த வகையில் வேண்டுமானாலும் கொடுங்கள் ஆனால் 50% உட்பட்டு இருக்க வேண்டும் என்று மட்டும் தீர்ப்பு வழங்கினால். ஏற்கனவே 49.5% மாக இருப்பதை இடஒதுக்கீட்டு பிரிவு மக்கள் 39.5% குறைத்துகொள்வதா

அடிப்படையை சிதைக்கும் நடவடிக்கை

இது எல்லாவற்றையும் விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டின் அடிப்படையை சிதைத்து, மாற்றி கட்டுவதற்கான ஆதிக்க சக்திகளின் காலா கால வெறியின் முதல்முயற்சி.

இடஒதுக்கீடு என்பது பொருளியல் அநீதிக்கான நிவாரணி அல்ல மாறாக அது சமூக அநீதிக்கான சிகிச்சை. கல்வியும், அதிகாரமும் (வேலைவாய்ப்பு) எதன் பெயரால் மறுக்கப்பட்டதோ, அதன் பெயராலேயே அதை வழங்குவது தான் நீதி. இந்த நாட்டின் ஒருவனுக்கு பணம் இல்லை என்பதற்காக கல்வி மறுக்கப்படவில்லை, அது அவன் சாதியின் பெயரால் தான் மறுக்கப்பட்டது ஆகவே சாதியின் பெயரால் தான் இங்கே இடஒதுக்கீடு கொடுக்க முடியும். கொடுக்க வேண்டும்

இது ஒருபுறமிருக்க, 1951 ல் முதல் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்ட போதே, அது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற குரல்கள் எழுகின்றன. ஆனால் பிரிவு 340 ஐ மேற்கோள் காட்டி, அதில் சொல்லப்பட்டுள்ள socially and educationally backward என்பதை சுட்டிகாட்டி அந்த கோரிக்கையை நேரு நிராகரித்தார்

பின்னாளில் பிற்படுத்தப்போட்டோர் ஆணையங்களின் வரையறைகளிலும் socially and educationally என்கிற அடிப்படையே பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகான சட்டங்கள், அரசாணைகள் எல்லாவற்றிலும் இந்த அடிப்படையே பின்பற்றப்பட்டது. 1990களில் வி.பி.சிங் மண்டல் கமிசனை அமலாக்கியபோதும் socially and educationally என்கிற அடிப்படை தான் தொடர்ந்தது.

பின்னாளில் 1991 வாக்கில் நரசிம்மா ராவ் அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக் கான பத்து விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க முற்பட்டபோது, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அதனை ரத்து செய்தது. இடஒதுக்கீட்டு வரலாற்றில் முக்கியமான ஆவணமாக இருக்கக்கூடிய இந்திரா சகானி vs ஒன்றிய அரசு வழக்கின் உச்சநீதிமன்ற அரசியல் சாசண அமர்வுடைய தீர்ப்பில் பிரதான அம்சமே, “social and educational status are the key factors of backwardness” என்பது தான்

அதேபோல மே 1, 2016 அன்று முன்னேறிய வகுப்பு பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் என்கிற பட்டியல் தயாரித்து, அவர்களுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு கொடுக்க அவசர சட்டத்தை குஜராத் அரசு பிறப்பித்தது. அதற்கு எதிராக “this ordinance is against the two major aspects of supreme court’s judgement – 1992” என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், “the ordinance promulgated by the state government is against the spirit of the constitution and fundamental rights” என்று கூறி அந்த அவசர சட்டத்தை ரத்து செய்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது

இப்படி நேரு காலம் தொட்டு, மோடி காலம் வரை நாடாளுமன்றமும், நீதிமன்றங்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய அடிப்படையிலிருந்து, அவை நிராகரித்த அடிப்படைக்கு இடஒதுக்கீட்டை நகர்த்தும் நீண்ட கால செயல்திட்டத்தின் முதல் நடவடிக்கை இந்த உயர்சாதியினருக்கான பத்து சதவீத இடஒதுக்கீடு

பொருளாதார அநீதிக்கான நிவாரணமா இடஒதுக்கீடு

இவற்றையெல்லாம் கடந்து, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் வாழ்வு முன்னேற்றத்திற்கான நடவடிக்கையாக scholorship, fee consession, loan, special economic support போன்றவை தான் இருக்க முடியுமே தவிற இடஒதுக்கீடு தீர்வாக இருக்க முடியாது. இதை நாம் சொல்லவில்லை july 2010ல் சமர்பிக்கப்பட்ட பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட சின்கோ கமிசனின் அறிக்கை சொல்கிறது.

அடிப்படையில் சொற்பமான அளவிலான organised sector வைத்திருக்கக்கூடிய நாட்டில் ஒருவரின் பொருளாதாரத்தை கணக்கிடுவது என்பது மிகக்கடினமான காரியம், அவற்றை துல்லியமாக அளவிடுவதற்கான / கண்டறிவதற்கான நுட்பங்கள் நம்மிடம் இல்லை அப்படியே இருந்தாலும் பொருளாதாரம் நிலையற்றது. ஒவ்வொரு ஆண்டும் கூட மாறுவதற்கான எல்லா சாத்தியங்களும் பொருளாதாரத்திற்கு உண்டு ஆகவே நிலையற்ற ஒன்றின் அடிப்படையில் எப்படி கல்வி மற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றை வழங்க முடியும்

எப்படி வந்தது பத்து சதவீதம்

இதுவெல்லாம் ஒருபக்கமெனில், இந்த சட்டத்தை ஒட்டி எழும் சந்தேகங்கள் அளவற்றது

முதலில் 46 ஆவது பிரிவை, சட்டதிருத்தத்தின் குறிக்கோள் / நோக்கம் பகுதியில் மேற்கோள் காட்டுகிறார்கள். இங்கே கவனிக்கதகுந்தது, “….of sc, st and other weaker sections” என்று தான் குறிப்பிடுகிறார்கள். அதனை எப்படி economically  weaker section in forward க்கு பொருத்தி பார்க்க முடியும்.

அடுத்ததாக, பத்து சதவீதம் என்கிற வரையறை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் economically weak என்பதற்கான தகுதிகளாக சொல்லப்பட்டுள்ள மாதத்திற்கு  67000 வரையிலான வருமானம், ஐந்து ஏக்கர் வரையிலான நிலம், ஆயிரம் சதுர அடி வரையிலான வீடி உள்ளிட்டவைகள் எந்த பரிந்துரையின் அல்லது ஆய்வுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது

உதராணமாக, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்ட உருவாக்க காலத்திலேயே கொண்டு வரப்பட்டது ஆனால் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அப்படி செய்யப்படவில்லை காரணம் 1931 ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி யாரெல்லாம் தாழ்த்தப்பட்டோர், யாரெல்லாம் பழங்குடியினர் என்கிற பட்டியல்1935 – 36 லேயே தயாரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் யாரெல்லாம் பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான தரவுகள் இல்லாததால் நேரடியாக இடஒதுக்கீடு வழங்காமல் ஆய்வு குழு அமைப்பதற்கான ஏற்பாட்டை அரசியலமைப்பு சட்டத்திலேயே செய்தார்கள். அந்த குழுவை அமைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டையும் முன்வைத்து தான் அம்பேத்கர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் (source – ambedkar’s speeches and writings – volume 14, part – 2)

பின்னர் 1953, காலேக்கர் கமிசன் அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டு ஆய்வுக்கு பின் அதன் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டது, பின்னர் கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு பின்னர் 1978 ல் மண்டல் கமிசன் அமைக்கப்பட்டது

மண்டல் கமிசன் இரண்டு ஆண்டுகள் நாடுமுழுக்க அலைந்து திரிந்து தகவல்களை திரட்டியது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டது, 97 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கமிசன் முன்பு ஆஜராக கருத்து தெரிவித்தனர், அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் கடிதம் எழுதி கருத்து கேட்டது மண்டல் கமிசன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், கட்சிகள் அவற்றின் பிரதிநிதிகள் என்று கிட்டதட்ட மூவாயிரம், நான்காயிரம் பேர் கமிசனிடம் நேரில் கருத்து தெரிவித்தனர். அதன் பின்னர் சமூகவியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட நிபுணர் குழு அமைத்து வினாத்தாள் தயாரித்து நாடு முழுக்க உள்ள 406 மாவட்டங்களில், 405 மாவட்டங்களுக்கு சென்று ஒவ்வொரு blockக்கும் இரண்டு கிராமங்கள் என்கிற ரீதியில் அந்த ஊரில் உள்ள அனைவரி டமும் தகவல்களை திரட்டி, எல்லா தகவல்களையும் ஆய்வு செய்த பின்னரே இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலை தயார் செய்தது

இதேபோல எந்த கமிசனின் அல்லது ஆய்வின் அடிப்படை யில் இந்த பொருளாதார இடஒதுக்கீடு கொடுக்கப்பட் டுள்ளது, அந்த சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தகுதி கள் வரையறை செய்யப்பட்டி ருக்கின்றன என்கிற கேள்விகளுக்கு விடையில்லை

மலைக்க வைக்கும் அதிகாரம்

பின்தங்கியோர் என்று வரையறுக்க போதுமான ஆய்வுகளும், தரவுகளும் வேண்டுமானால் அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்கள் பின்தங்கியோர் அல்ல என்பதற்கான எல்லா தரவுகளும் நம்மிடம் உள்ளன

சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் நாடு முழுக்க உள்ள நாற்பது மத்திய பல்கலைகழங்களின் நிலை 1125 பேராசிரியர் பணிகளில் 1071 பேர் முன்னேறிய வகுப்பினர் (95%), 2620 இணை பேராசிரியர் பணிகளில் 2434 பேர் முன்னேறிய வகுப்பினர் (93%), 7741 துணை பேராசிரியர்களில் 5130 பேர் அவர்கள் (66.27%)

இதுதவிற மத்திய அரசின் பிற துறைகளில் இதே அளவு ஆதிக்கம் நிலவுகிறது. ரயில்வே துறையின் முக்கிய பணியிடங்களில் 68%, மத்திய மனித வள மேம்பாட்டு துறையில் – 66%, நாட்டை வழிநடத்தக்கூடிய துறைச்செயலாளர்களில் – 80%, நிதி ஆயோக்கில் -74%, குடியரசு தலைவர் அலுவலகத்தில் – 75%, துணைக்குடியரசு தலைவர் அலுவலகத்தில் – 77%, UPSC – 65%, மத்திய தணிக்கை துறையில் – 67%, 71 பிற துறைகளில் – 63% என்று மிகப்பெரும்பாண்மை இடங்களில் மிகச் சிறும்பாண்மையானவர் களே நிறைந்திருக்கிறார்கள்

அதேபோல் “all india survey on higher education 2014 – 2015, MHRD” தரவுகளின் அடிப்படையில் அகில இந்திய அளவில் உள்ள 14,18,389 பல்கலைகழக பேராசிரியர் பணிகளில் 9,33,616 இடங்களில் முன்னேறிய வகுப்பினரே உள்ளனர்

தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக 1/1/2013 கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய அரசின் 55 துறைகளில் அதிகாரமிக்க பதவிகளில் உள்ளோர் நிலை. குரூப்-A  பணிகளில் 69.13% மற்றும் குரூப்-B பணியிடங்களில் 67.41%

ஆகஸ்ட் 2012, EPW இதழில் வெளியான தகவலின்படி, இந்தியாவின் முதல் 1000 கார்ப்பரேட் நிறுவனங்களில் 92.7% பேர் முன்னேறிய வகுப்பினர். அதேபோல் centre for the study of developing societies என்கிற அமைப்பின் ஆய்வின் படி இந்திய ஊடகங்களில் 88% முக்கிய பொறுப்புகளில் முன்னேறிய வகுப்பினரே உள்ளனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பொது மேலாளர் பதவிகளில் 94.1% மற்றும் துணை பொது மேலாளர் பதவிகளில் 91.65% என்கிற அளவில் fc க்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்

ஆக அரசு, தனியார், ஊடகம் தொடங்கி எல்லா இடங்களில் முக்கிய பொறுப்புகளில் மக்கள் தொகையில் 25% அளவில் மட்டுமே இருக்கும் முன்னேறிய பிரிவினர் சராசரியாக 75 % இடங்களை தங்கள் வசம் வைத்திருக்கின்றனர், இந்த நாட்டின் மக்கள் தொகையில் மிகப்பெரும்பாணையாக 75% அளவில் இருக்கும் இடஒதுக்கீட்டி பிரிவினர் 25% அளவிலான இடங்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். நிலமை இப்படி இருக்க மேலும் பத்து சதவீதத்தை தூக்கி மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் பிரிவுக்கு அரசு கொடுக்கிறது எனில் இந்தியாவின் 75% மக்களை முட்டாள் என்று நினைக்கிறது என்று தானே அர்த்தம்

அஞ்சாமலா போய்விடுவர்

சமூக அநீதிக்கு மருந்தான இடஒதுக்கீட் டின் அடிப்படையையே தகர்க்கும் ஒன்றிய அரசின் இம்முடிவை கடுமையாக கண்டிக்க வேண்டும். மேலும் 50% இடஒதுக்கீட்டையே உறுதி செய்யாமல் 25% இடங்கள் கூட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்காத நிலையில், 75% இடங்களை அனுபவிப்போருக்கு மேலும் பத்து சதவீதம் என்பது obc/sc/st மக்களை துச்சமென நினைக்கும் செயல் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்

ஆயிரமாயிரமாண்டு அநீதிக்கு எதிரான நூற்றாண்டு போராட்டத்தின் விளைவுகளை குழிதோண்டி புதைப்பதற்கான தொடக்க நடவடிக்கையை நீதிமன்றத்தின் வாயிலாகவோ, மக்கள் மன்றத்தின் வாயிலாகவோ தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒருவேளை ஒன்றும் நடக்கவில்லை என்றால், 50% மேல் போகக்கூடாது என்கிற தீர்ப்பில் ஏற்பட்டுள்ள தளர்வை பயன்படுத்தி பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 52% உயர்த்தி ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 75% மேல் மாற்ற வேண்டும். இப்படி ஒரு கோரிக்கைக்காக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அணி திரண்டால் சாத்தியமாகமலா போகும். 25% மக்களின் ஓட்டுக்கு அஞ்சும் அரசும் கட்சிகளும், 75% மக்களின் ஓட்டுக்கு அஞ்சாமலா போய்விடும். அஞ்ச வைக்க ஒன்றுபட வேண்டும். சமூக நீதி களத்தின் வெற்றி எப்போதும் நம்முடையதாக இருக்கட்டும்