அண்ணா – அரசியல் தலைவரல்ல அவர், அண்ணன் !!

1950-60 களில் துணைக்கண்டத்தின் கல்விபெற்றோர் விழுக்காடு முப்பதுக்கும் கீழே.

வர்ணாசிரமத்தின் மேலடுக்கு தாண்டி மிக குறைந்த விழுக்காட்டினரையே கல்வி பற்றிய புரிதல் எட்டியிருந்த நேரம்.

ஆனால், சென்னை மாகாணத்தில் அப்போது ஒரு புதிய இளைஞர் படை உருவாயிருந்தது. அவர்கள் தேநீர் கடைகளிலும், முடிதிருத்தும் நிலையங்களிலும்,

சந்தையின் பக்கங்களிலும் குழுமி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முறையான பள்ளிக்கல்வியை பெறாதவர்கள்.

விவசாயமும் இன்னபிற கூலி தொழில்களும் செய்து வருகிறவர்கள்.

அவர்களின் உரையாடல்கள் பகுத்தறிவு பேசுகின்றன. இலக்கியங்களை அவர்கள் தரம் பிரிக்கிறார்கள்.

பெரும் புலவர்களைப்போல் மொழியை கையாள்கிறார்கள். உலகநாடுகளின் அரசியல் வரலாறுகளை, புரட்சிகளை, அதன் பின்னிருந்த சூழல்களைப் பேசுகிறார்கள்.

ஒவ்வொருவரும் கவிஞராக அல்லது பேச்சாளர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் ,பத்திரிக்கையின் ஆசிரியர்களாகவும் இருக்கின்றனர். சிலர் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.

நீங்கள் தேனீர் கடையில் அமர்ந்திருக்கிறீர் களா அல்லது ஒரு பல்கலைக்கழகத்தின் விவாத அரங்கில் இருக்கிறீர்களா என்று மலைத்துப் போவீர்கள்.

அத்துணைபேரும் அடிக்கடி மேற்கோள் காட்டுகிற மனிதர் ஒருவர். அந்த இளைஞர்கள், அவரை அரசியல் தலைவராக அல்ல. குடும்பத்தின் மூத்தசகோதரனை பற்றிப் பேசுவதுபோல்

பேசுகிறார்கள். அவர்தான் அண்ணா!! காஞ்சிபுரத்தின் ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்து பின்னாளில் தமிழகத்தின் அண்ணனாக மாறிவிட்டிருந்த அண்ணா என்கிற அண்ணாதுரை.

இந்தியா போன்று கல்வியறிவில் பின்தங்கிய, பழமைவாதங்களும் மதநம்பிக்கைகளும், உலகில் எங்குமில்லாத ஜாதி என்கிற அடிமைத்தனமும் வேர் விட்டிருக்கிற நிலத்தில்

ஒரு முற்போக்கான தத்துவத்தை, மக்களின் ஏற்றுக்கொண்ட தத்துவமாக, அரசியல் கொள்கையாக மாற்றியதில் அண்ணாவை போல் வெற்றி பெற்றவர் யாரும் இல்லை என்று சொல்லலாம்.

சுதந்திரத்திற்குபின் துணைக்கண்டம் முழுவதும் காங்கிரசின் இந்திய தேசிய அரசியலுக்கு மாற்றாக, பல்வேறு இன மொழி பண்பாட்டு தனித்தன்மைகளை உடைய மக்களுக்கு நீதி செய்யும்

வகையில், வலிமைவாய்ந்த முற்போக்கு அரசியலே இல்லை என்பதான நிலை. பொதுஉடைமைக் கொள்கையாளர்கள் இப்போதுபோல் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாமல் இருந்த

தருணம். பெரியார் சமூக நீதியை,மொழி உரிமையை அரசியல் உரிமையை, காங்கிரஸ் பெற்றுத்தரப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார். கல்வி, அரசியல், அதிகார உரிமைகள் அனைத்து தரப் பினருக்கும் சென்றடைய வேண்டும் என்ற கொள்கை கொண்டு, எந்த தியாகத்திற் கும் தன்னை உட்படுத்தி கொள்ளத் தயங்காத பெரியா ருக்கு, வாக்கு அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில் தயக்கம் இருந்தது.

பெரியார் நீதிக்கட்சியை ஆதரித்தார். நீதிக்கட்சி வலிமை இழந்தபோது மாற்று அரசியல் முயற்சிகளை மேற்கொண்டார்.

வேறு வழியில்லாதபோது, தான்எதிர்த்த காங்கிரசில் இருந்தே காமராஜரை ஆதரிக்கிறார். இயக்கஅரசியலில் இருந்துகொண்டு ஆட்சி அதிகாரத்தின் எல்லா ஒடுக்குமுறைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி போராடிக்கொண்டே இருந்தார். இந்த இடத்தில் தான் பெரியாரிடம் தத்துவார்த்த அரசியலைப் பயின்ற அண்ணா, பெரியாரின் அதே இலக்கிற்கான பயணத்தில்  துணிந்து மாற்றுவழியை கண்டடைகிறார்.

திராவிடம் என்கிற சமத்துவ சமூகநீதிக் கொள்கை, ஒரு குழுவின் குரலாக இருக்கும்வரை அது மக்களுக்கான தேவையை நிறைவு செய்யமுடியாதென்று, தனி இயக்கம் காண்கிறார்.

அது தான் திராவிட முன்னேறக் கழகம். தனக்கான இளைஞர் படையை அவர் கட்டியமைக்கிறார். தனது உரைகள் எழுத்துகள் கலை வடிவங்கள் அனைத்தும் கொண்டு தம்பிகளை  உருவாக்குகிறார். மக்களிடம் போ,மக்களோடு வாழ்ந்திரு,மக்களிடம் கற்றுக்கொள், மக்களை காதலி,மக்கள் பணியாற்று,மக்களோடு திட்டமிடு எனச் சொல்லி அவர்களை தலைவர்கள்  ஆக்குகிறார்.  தன் தம்பிகள் உலகறிவு பெற்றிட வேண்டும் எனும் நோக்கில், தான் படித்த மேற்குலக புதுமைகளை எல்லாம் அழகு தமிழ் கடிதங்களாக்குகிறார்.

தன் தொண்டர்களை அடிமைகளாய் அல்லாமல், அறிவார்ந்தவர்களாய் அந்தக்கடிதங்கள் மூலம் செதுக்கினார். தம்பிகள் தன்னை மிஞ்சியவர்களாக வளர்வது காண்கிறார்.

முரண்பட்டாலும், நம் தலைவர் பெரியார்தான், தான் தலைவர் அல்ல.தளபதி தான் என்பதை உணர்த்துகிறார்.

தந்தை பெரியாருக்கு பக்கத்தில் அண்ணாதுரை அண்ணனான தருணங்களில் ஒன்று அது.

ஒரு பக்கம் புனிதமென்று தமிழர்கள் ஏமாந்து நம்பிக்கொண்டிருந்த அனைத்தையும் ஒன்று விடாமல் உடைத்துப் போட்டுக்கொண்டே இருக்கிறார் பெரியார்.

இன்னோர் பக்கம் பிறப்பிலிருந்து இறப்பு வரை எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது பிற்போக்குச் சிந்தனைகள். அவற்றிக்கு உள்ளேதான், தங்கள் பண்பாடும், மொழிவரலாறும் சிக்கிக் கிடப்பதாக

தமிழர்கள் எண்ணி இருந்தனர். அதில் ஓரளவு உண்மையும் இருந்தது. சாமான்யர்கள் பெரியாரை வந்தடைய பெரும் தாவலைச் செய்யவேண்டியதிருந்தது.

அந்தத் தாவலைச் செய்யமுடியாத மலைப்பிலே பெரியாரை ஏக்கமாய்ப் பார்த்துவிட்டு ஒதுங்கிப்போய்க் கொண்டிருந்தன எளியோர் உள்ளங்கள்.

எண்ணிப்பாருங்கள். திருக்குறளில் கூட பெண்ணடிமை கருத்துகள் உண்டு என்கிறார் பெரியார். தமிழர்களோ, கம்பராமாயணத் தின் பக்தியில் லயித்துப்போயிருந்தார்கள்.

கட்டுப்பாடுமிக்க தந்தையிடம் விலகி யிருக்கிற சிறு பிள்ளையின் முரண்பாட்டோடு தான் தமிழர்கள், பெரியாரோடு இருந்தார்கள். இருவருக்கும் இணைப்பாக, அண்ணாவும் அவர்  தம்பிமார்களும்தான் தமிழர்களுக்கு அவர்கள் பண்பாடுகளும் மொழி பற்றும் சிதையாதவற்றை மீட்டுக்கொடுத்தனர்.

கம்பராமாயணத்தை தூர ஏறி, சிலப்பதி காரத்தை கையில் எடு என்று அண்ணாவும் அவர் தம்பிகளும் சொன்னதன் காரணம் அது தான்.

ஆரியம் சொல்லும் தீபாவளி தவிர்த்து, பொங்கல் தமிழர் விழாவாக மீட்டெடுக்கப் பட்டது. பிள்ளையாரை உடைப்பதுமில்லை, பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது மில்லை என்று பகுத்தறிவை சொன்னார். இப்படியே தான், தமிழர்கள் தாங்கள் இழந்துவிட்டதாகக் கருதிய பொன்னுலகக் கனவை மீட்டு, அதை எதிர்கால புத்துலகத்தின் இலக்கின் வழியில் இணைத்துவிட்டவர் அண்ணா.

பிரிவினை கோரிக்கைகள் தடைசெய்யப் பட்டபோது, அண்ணா உறுதி காட்டியிருந் தால், அந்நேரமே குருதி வழிந்தோடும் களமாக தமிழகத்தை மாற்றிவிடும் சூழல் இருந்தது.

எம் கோரிக்கையின் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. கோரிக்கையை கைவிடுகிறோம் என்று அவர் எடுத்த முடிவு தான், இந்நாளில் ஈழத்துக்கும் தமிழகத்திற்கும் உள்ள வேறுபாடு.

அதுதான் அதிகாரஆவல் உள்ள தலைவனுக்கும், பாசமுள்ள ஒரு அண்ணனுக்கும் உள்ள வேறுபாடு.

அதிகாரத்தின் பிடியை, தனக்கு கீழ்உள்ள தொண்டர் ஒருவர் கையில்கொடுத்து, அவருடைய உத்தரவில் நடக்க ஆவல் கொண்ட தலைவர் வரலாற்றில் யாரும் உண்டா?. அண்ணா செய்தார்.

தம்பி வா, தலைமை ஏற்க வா, ஆணையிடு, அடங்கி நடக்கிறோம் என, தனக்கு அடுத்த நிலையில், தன்னிலும் இளையவரான நாவலர் நெடுஞ்செழியனை அழைத்தபோது, உலகம் கண்டிராத ஒரு உன்னதத் தலைவன் எனத் தமிழகம் அண்ணாவைக் கண்டது.

இந்தியை திணிக்க முயன்ற அன்றைய காங்கிரஸ் அரசு, நீட்டிய துப்பாக்கிகளுக்கும்,  வாட்டிய தீயின் நாக்குகளுக்கும் தங்கள் உயிரை பலியிட்டுக்கொண்டிருந்த தமிழகத்தின் மாணவர்களைப் பார்த்து, ஒரு சகோதரனைப் போல் பதறினார்.

போராட்டத்தை நாங்கள் பார்த்துக்கொள் கிறோம், நீங்கள் உயிர்கொடை செய்வதை நிறுத்துங்கள் என்று மாணவர்களை சமாதானம் செய்து, உயிர்பலிகளை நிறுத்தி போராட்டத்தை கழகத்தின் வாயிலாக முன்னெடுத்தார் அண்ணா.

எந்த பெரியாரோடு முரண்பட்டோரோ, அந்த பெரியாரிடம் தன் தம்பிமார்களோடு தாங்கள் பெற்ற ஆட்சி ஆதிகாரத்தை காணிக்கையாக்கினார்.

இயக்கத்தின் இலக்கு எது, தங்கள் கொள்கைத் தலைவர் யார் என்ற உறுதியை, தம்பிகளோடு தமிழகத்திற்கும் உரக்கச் சொன்ன நாள் அது.

இரண்டாண்டு மட்டுமே ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாடு பெயர்மாற்றம் முதல் சுயமரியாதை திருமண சட்ட அங்கீகாரம் வரை அடுத்துவரும் ஆட்சிகளுக்கு அகலமான பார்வைகளையும்  கொள்கைத் தெளிவையும் கொடுத்துவிட்டுப்போனார்.

இன்றைக்கும் அரசியல் ஆவல் உள்ளோர்களுக்கு, கொள்கையை மக்கள்வயப்படுத்துவது, இயக்கத்தை கட்டமைப்பது, அரசியல்நகர்வுகள் வகுப்பது, ஆட்சி அதிகாரத்தில் தத்துவார்த்த தாக்கத்தை

ஏற்படுத்துவது வரை , பழகிப் படிக்கவேண்டிய பாடமாக, லட்சியமாக அண்ணாவே இருக்கிறார்.

இன்னும் அண்ணாவை பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம், சுருக்கமாக சொல்வதென்றால்,  அவர் எடுத்த அரசியலுக்கு எதிர்அரசியல் இன்று வரை தமிழகத்தில் இல்லை.

இன்றும் தமிழகத்தில் தலைவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள  உறவு முறை அண்ணன் தம்பி, உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம் என்றே தான் இருக்கிறது.

அவர் கண்மூடிய நாளில் சென்னையில் அவர் இறுதி அஞ்சலிக்கு கூடிய மக்கள் கூட்டம் அவரோடு தமிழர்களுக்கு இருந்த பாசப்பிணைப்பை சொல்லும். கோடி மக்கள் திரண்டு தங்கள்

அண்ணனை வழி அனுப்பி வைத்த தருணம் அது.

அண்ணா – அவர் அரசியல் தலைவர் அல்ல. பாசமுள்ள அண்ணன் !!

– சாந்தி நாராயணன்