அய்யலம்மா

தெலுங்கானா மக்கள் புரட்சி (1946 – 1951), விடுதலை விளிம்பில்இருந்த நவீன இந்தியாவின் முரண்பாடுகளை உணர்த்திய ஒரு பிறப்படையலாக் குறி. (Birth Mark) . நிலமற்ற, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட ஒரு சமூகம் எவ்வாறு ஆயுத போராட்டத்திற்குத் தள்ளப் படுகின்றனர்,என்பதை உணர்த்தும் ஒரு ஆய்வுப் பாடம். அடிப்படை உரிமை கேட்கும் மக்களை அரசு பயங்கரவாதமும், நிலச்சசுவான்தார்களின் பணப்பலமும் புரட்சி வீரர்களாய் மாற்றிய ஒரு மறக்கப்பட்ட கதை.இக்கதையின் தலைவர், பேசுபொருள் சாக்களி அயலம்மா என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பெண். கிராமத்து சலவை தொழிலாளி. முறையாகக் கல்வி பயிலாதவர். கணவர், ஐந்து குழந்தைகள் என் வாழந்த அயலம்மாவிற்கு ஒரு சிறு எண்ணம். பண்ணை தொழிலாளியாக, அடிமையாக இல்லாமல் ஒரு குறு நில உழவு குடும்பமாக வாழ்வை மாற்றியமைக்கும்ஆவல். உள்ளூரில் 4 ஏக்கர் அளவில் உள்ள ஒரு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து உழவு செய்யத் தொடங்குகிறது அவரது குடும்பம்.

பண்ணை அடிமை தொழிலாளிகளுக்குச் சொந்தமாக உழவு செய்யும் எண்ணம் வந்தால், தனது நிலத்திற்குப் பணியாட்கள் கிடைக்கமாட்டார்கள் எனச் சினம் கொள்கிறார் அந்த ஊரின்பண்ணையார். அயலம்மாவிற்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்று அவர் அந்த மாவட்ட ஜமீன்தார் ராமச்சந்திர ரெட்டியிடம் முறையிடுகிறார். அடிமைகளின் சுய முன்னேற்ற எண்ணம், ஆள்பவர்க்கு ஆபத்து என்பதை உணர்ந்த ராமச்சந்திர ரெட்டி காவல் துறை உதவியுடன் அய்யலாம்மாவின் கணவர் மற்றும் மகன்களைக் ‘கம்யூனிஸ்டுகள்’ எனக் கூறி கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.

கணவரும் மகன்களும் சிறையில் இருந்தாலும், தான் கொண்ட கொள்கையில் தவறாமல் இருக்கிறார் அயிலம்மா. தனி ஆளாக நிலத்தைப் பராமரிக்கிறார். அறுவடை காலமும் நெருங்குகிறது. யாருமில்லாத நிலத்தின் அறுவடையை அபகரிக்கத் திட்டம் தீட்டி 100 ஏவலாட்களையும் 100 பண்ணையாட் களையும் அனுப்புகிறார் ராமச்சந்திர ரெட்டி. நிலத்தில் குடியிருக்கும் அய்யலாம்மாவை அடித்து விரட்ட உத்தரவு.

இவ்வாறு அடுக்குமுறையம், வன்முறையும் கட்டவிழ்க்கப்படும் என முன்னரே அயலம்மா எதிர்பார்த்திருந்தார். ஊர் மக்களைக் கலந்து ஒரு எதிர்ப்பு குழு அமைத்து இருந்தார். பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என மொத்தமாக 28 பேர் அயிலம்மாவின் தலைமையில் முன்னின்றனர். அபகரிக்க வந்த குண்டர்களைத் தடுக்க அவர்களிடம் இருந்ததோ தடி, மிளகாய் பொடி, அரிசி குத்தும் ஒலக்கை மற்றும் கண்களில் புரட்சி கனல். உயிர்க்கு பயந்து ஓடிட தப்பினர் ஜமீந்தாரின் ஏவலாட்கள்.

4 ஏக்கர் நிலத்திற்குச் சிறிய கிராமத்தில் ஏற்பட்ட இந்த எதிர்வினை, சிறுக சிறுக பற்றித் தெலுங்கானா நிஜாம் அரசை கவிழ்க்கும் புயலாக மாறியது. ஊர் தோறும் தொழிலாளர் உரிமை பேச, பண்ணையடிமை முறையை ஒழிக்க, அடுக்குமுறைக்கு எதிராகப் போராட சங்கங்கள் உருவாக்கப் பட்டது. அரசின் பயங்கரவாதத்தை எதிர்க்க ஆயுத போராட்டமாக நிலை மாறியது, சங்கத் கூட்டங்களை அயலம்மா ஒருங்கிணைத்தார்.

முழுப் பலம் கொண்டு போராட்டக் காரர்களை அடக்கத் துணிந்தது நிசாம் அரசு.சிறுவர், பெரியவர், ஆண், பெண் பேதமின்றிச் சந்தேகப்படுவர் அனைவரும் கைது செய்ப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். தனிப்பட்ட வாழ்விலும் அயிலம்மா இப்புரட்சிக்கு கொடுத்த விலை அதிகம். அவரின் பெண் சோனு நரசம்மா இரு சிறுகுழந்தைகளின் தாய். போராட்டத்தை ஆதரித்த காரணத்திற்காக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.ஒரு புறம் விடுதலை பெற்ற இந்தியவில் நிசாம் அரசு சேர மறுக்கிறது . மறுபுறமோ சொந்த மக்களைக் கொடுமை படுத்திப் புரட்சியை ஒடுக்க இரும்புக்கரம். அடக்குமுறைக்கு எதிர்வினையாக இந்திய அரசாங்கம் தனது ராணுவத்தை அனுப்பித் தெலுங்கானாவை இந்தியாவுடன் ஒன்றிணைத்தது நடுவண் அரசு. 1951 அடங்கிய போராட்டம், தெலுங்கானா மக்கள் மத்தியில் இன்றும் நிலை கொண்டு இருக்கிறது. போராட்டத்தின் வெற்றியாக மக்களவை நில சீரமைப்புச் சட்டம் இயற்றப்படுகிறது. ஜமீன்தாரிமுறை ஒழிக்க, முதலடி எடுத்து வைக்கப்பட்டது. அயலம்மா தனது இறுதிக்காலம் வரை கொண்ட கொள்கைக்குப் பிடிப்புடன் இருந்தார். அவரது அளப்பரிய செயல்கள் மக்கள் இசையாக இன்றும் வடிவம் பெற்றுப் போற்றப்படுகிறது.