ஆண்ட பரம்பரை

எட்டு மணி ரயிலைப் பிடிப்பதற்காக நடையும் ஓட்டமுமாக ரயில் நிலையம் வந்து சேர்ந்தான் அகிலன். நடைபாதையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு ரயில் வரும் திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தவனை “மாப்ள” என்ற அழைத்துக்கொண்டு தோளில் கைவைத்தவனைத் திரும்பி பார்த்தான்.
இவன் திரும்பியதும் சிரித்துக்கொண்டே ‘மாப்ள எப்படி இருக்க’ என்று இவனைப் பார்த்து கேட்க, யார் என்று சரியாகத் தெரியாமலே ‘நல்லா இருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கண்களைச் சிறிது சுருக்கினான் அகிலன் .
என்னடா என்ன தெரியலையா ? நான் தான் அன்பு … 12 ஆவது வரை ஒண்ணாபடிச்சோமே என்றான்.
ஓ …அன்பு நீயா… சாரி டா , சட்டுன்னு நினைவுக்கு வரவில்லையென்று சொல்லிவிட்டு நீ எப்படி இருக்க என்று கேட்டான்.
நான் நல்லா இருக்கன் மாப்ள, சரி நீ எப்ப சென்னைக்கு வந்த? ஏன் என்கிட்ட சொல்லவேயில்லை? என்ன வந்து பார்க்கவுமில்லை , சரி வீட்டில் எல்லா எப்படி இருக்காங்க? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றான் அன்பு.
நீ இங்க இருப்பதே எனக்கு இப்ப தான் தெரியும் , இதுல எங்க நான் உன்கிட்ட சொல்லிட்டு வருவது என்று சொல்லிவிட்டு , நீ இங்க என்ன பண்ற என்று கேட்டான்.
நான் பிசினஸ் பண்றன் மாப்ள, நீ என்ன பண்ற என்றான் அன்பு .
நான் சாப்ட்வெர் கம்பெனில வேலை பாக்குறன்டா என்று சொல்லிவிட்டு , சரி என்ன பிசினஸ் பண்ற என்று கேட்டான்.
அதைவிடு மாப்ள… அதுவா இப்ப முக்கியம் என்று சொல்லிவிட்டு , சனிக்கிழமை இங்க தான் இருப்பியா என்றான் அன்பு.
ஆமாம்டா இங்க தான் இருப்பன் , என்ன விஷயம் என்றான்.
நல்லதா போச்சு , சரி நீ நம்ம சங்க கூட்டத்துக்கு வந்துவிடு என்றான்.
அகிலனுக்கு ஒன்றும் புரியாமல் ரயில் வருகிறதா என்று எட்டிப் பார்த்துக்கொண்டே எந்தச் சங்கம்டா என்றான்.
நம்ம சாதி சங்கம் தான் மாப்ள என்றான்.
என்னது சாதி சங்கமா …அட கொடுமையே .. நீ இன்னுமா திருந்தவில்லையென்று அன்புவை பார்த்து முறைத்தான்.
என்ன மாப்ள இப்படிச் சொல்லிட்ட, நான் முக்கியப் பொறுப்பில் இருக்கன். நம்ம சாதிக்காரர்கள் எல்லாரும் ஒன்றுகூடுவோம் , நீயும் வா மாப்ள என்றான் அன்பு.
ஒன்றுகூடி என்னடா பண்ண போறீங்க என்று அகிலன் கேட்ட கேள்வியைப் பொருட்படுத்தாமல் போன மாத கூடச் சென்னையில் மிகப்பெரிய மாநாடு நடத்தினோம், நம்ம சாதி தலைவர்கள் எல்லாரும் வந்தார்கள். சென்னையே மிரண்டு போச்சு, இனி நம்ம தான் மாப்ள எல்லாம் என்று பெருமிதப்பட்டுக்கொண்டான்.
மாபெரும் மாநாடா ? இங்க எப்படா நடந்துச்சு என்று அகிலன் கேட்ட கேள்வியைக் காதில் வாங்காமல் இனி தமிழ்நாடே நம்ம கையில்தான் மாப்ள என்றான் அன்பு.
ஏண்டா நான் பேசுவதைக் காதில் வாங்காமல் உன்பாட்டுக்கு பேசாதடா என்று அகிலன் சொல்லியதற்குச் சரி மாப்ள என்று சொல்லிவிட்டு . இன்றைக்குத் தமிழ் நாட்டிலேயே நம்ம சாதி தான் பெரிய சாதி மாப்ள என்றான்.
பெரிய சாதியா ?என்ன எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் சாதியாடா என்று சொல்லி சிரித்த அகிலனை பார்த்து , மாப்ள… என்று முறைத்துவிட்டு இனி எல்லாரும் நமக்குக் கீழதான் தெரியும்ல என்றான்.
காமெடி பண்ணாதடா என்று சொல்லிவிட்டு நான் உங்க ஆட்டத்துக்கெல்லாம் வரவில்லை என்னை ஆள விட்றா சாமியென்று அன்புவை பார்த்து பெரிய கும்பிடு போட்டான் அகிலன்.
உன்ன மாதிரி சாதிகெட்ட பயலுங்கனாலதான் ஆண்டா சாதியா இருந்த நாம இப்ப இப்படி இருக்கோமென்று கோபத்துடன் சொன்னான் அன்பு.
ஆண்ட சாதியா ? அடேய் …எங்கடா ஆண்டீங்க என்று நக்கலுடன் அகிலன் கேட்க
வரலாற்றை எடுத்துப் படி மாப்ள, தமிழ்நாடு முழுவதும் நம்ம தான் ஆண்டு இருக்கிறோம். ராஜராஜன் சோழன் கூட நம்ம சாதிக்காரன் தான். நம்ம வரலாற்றைத் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள் மாப்ள என்றான்.
அப்படி என்ன வரலாற்றை மறைச்சிட்டாங்க  என்றான் அகிலன்.
ஆமாம் மாப்ள, நீண்ட வரலாறு கொண்ட சாதி நம்ம சாதி ,நம்ம சாதி பெருமையெல்லாம் வெளிய வந்திவிடக்கூடாதென்று தான் கீழடி ஆராய்ச்சியைக்கூட நிறுத்திட்டாங்க , தெரியும்ல என்றான் அன்பு.
அப்படியா !!! என்று சிரித்துக்கொண்டே கேட்ட அகிலனை பார்த்து உன்ன மாதிரி சாதி உணர்வு இல்லாத ஆளுங்களாலதான் நாம இப்படி இருக்கோம் என்றான் அன்பு.
எனக்கு எந்த உணர்வும் வேண்டாம்டா , நான் மனுசனா இருக்கன் நீயும் மனுசனா இருந்தா அது போதும் என்றான்.
நீ இரு மாப்ள, ஆனால் இனி நம்ம சங்கம் சும்மா இருக்காது, நம்ம சாதி வரலாற்றை மீட்டெடுத்துட்டோம். நம்ம தான் ஆண்டபரம்பரைன்னு நிரூபிச்சாச்சு. இனி நம்ம சாதி இல்லாமல் இங்கு ஒண்ணுமேயில்லை எல்லாரும் நம்ம கிட்ட தான் வந்து ஆகவேண்டும் , நாம தான் வீரபரம்பரை, ஆண்டசாதி  என்று உணர்ச்சிகரமாகச் சொல்லிகொண்டுருக்க …
அதோ இருக்கிறான் பார், பிடி பிடி என்று கத்திக்கொண்டு நான்கு பேர் இவர்களை நோக்கி வேகமாக ஓடிவந்தனர் … அவர்களைப் பார்த்ததும் அங்கிருந்த தப்பிக்க முயன்ற அன்புவை சுற்றிவளைத்து பிடித்துக்கொண்டனர்.
அன்புவின் கைகளை இறுக்கமாகக் கட்டி இழுத்துக்கொண்டு சென்றவர்களிடம் எதற்காக இவனை இழுத்துசெல்கிறீர்கள் என்று கேட்டான் அகிலன்.
அதுவா சார், இவன் எந்நேரமும் சாதி, சாதின்னு சாதி வெறிபிடிச்சு மனநிலை பாதிக்கப்பட்டுச் பக்கத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் அட்மிட்டாகி இருக்கிறான். அங்கிருந்து எப்படியோ தப்பிச்சிட்டான் அதான் பிடிச்சுன்னுபோறோம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தனர்.
படித்து,வேலைக்குப் போய் நல்ல வாழ்க்கை வாழவேண்டியவன் சாதி வெறியால் இப்படி ஆகிவிட்டானே என்று அன்புவை பார்த்து வருத்தப்பட்ட அகிலனை பார்த்து மாப்ள சனிக்கிழமை கூட்டத்துக்கு வந்திரு … ஆண்டபரம்பரை மாப்ள ..இனி நம்ம தான் எல்லாம் என்று கத்திக்கொண்டே இருந்த அன்புவின் சத்தம் சில நொடிகளில் மெல்ல மறைந்தது.