இது இரங்கற்பா இல்லை

எங்கள் மனதினுள் நிறைந்திருக்கும்
மானமிகு சுயமரியாதைகாரருக்கு ஒரு நாளும்
மரணமில்லை ;
உன் உடலுக்கு மட்டுமே பிரியாவிடை
உடன்பிறப்புக்கள் தந்திருக்கின்றோம்
உன் மூச்சினை எங்களின்
உயிர்க்கூட்டிற்குள் ஒளித்து வைத்திருக்கின்றோம்,
உன் உணர்வுகளை எங்கள் உதிரத்தில்
கலந்து வைத்திருக்கின்றோம்,
உன் பேச்சின் ஒலி இன்னும்
எங்கள் காதுகளில் இடைவிடாது
ஒலித்துக்கொண்டிருக்கின்றது;
என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே
என நீ ஒவ்வொரு முறையும் உன் கரகரக் குரலில்
உச்சரித்தபோதும் உயிர்த்தெழுந்த கூட்டம் நாங்கள் ;
உன் உயிர்ப் பிரிவை ஏற்கும்
வலிமை எங்களுக்கில்லை
எங்கள் பகுத்தறிவு செயலிழந்துதான் போய்விட்டது ;
இயற்கையின் கோணல் புத்தி
தந்தையை, அண்ணனை பிரித்தபோது
பிறவாத தலைமுறை நாங்கள்;
உன் உருவத்தில் அல்லவா
அவர்கள் உயரத்தை கண்டு வளர்ந்தோம் ;
நீ காட்டிய வழியில் அல்லவா
ஈரோட்டுக் குருகுலத்தின்
காஞ்சி செயல்திறத்தின்
வெற்றித் துடிப்பினை உள்வாங்கி
உணர்வு பெற்றோம் ?
முத்தமிழின் முகவரியே
சங்கத்தமிழ் அமுதை உன்
கவிதை வரிகளில் வெல்லத்தின்
பாகாய் தந்திட்டவன் நீ அல்லவோ ?
இலக்கணத்தின் அணியை
தொல்காப்பியப் பூங்காவாய்
தொடுத்துவனும் நீ அல்லவோ?
குறளுக்கு ஓவியம் தீட்டி
குறளோவியம் கண்டிட்டவன்
நீ அல்லவோ ?
வள்ளுவனுக்கு விண்முட்டச்
சிலையமைத்து கமண்டலங்கள்
அடையாளத்தை உடைத்திட்டவன்
நீ அல்லவோ?
எங்கள் செம்மொழியோனே;
நீதியற்று உனை முதுகில் குத்தி
வழியும் உன் இரணங்களின்
குருதியைச் சுவைத்திட்ட புரூட்டஸ்களையும்
மன்னித்து உன் வாழ்க்கை வரலாற்றை
நெஞ்சுக்கு நீதியாய்
வடித்து வைத்தவனும் நீ அல்லவோ ?
தென்றலைத் தீண்டியது இல்லை நீ
உன் 80ஆண்டுகள்  அரசியல்
சக்கரத்தில் தீயை மட்டுமே தாண்டியிருக்கிறாய்
அறிவோம் !
உன் மீளா உறக்க  படுக்கையைக் கூட
இன எதிரி ஓநாய்களிடம்
போரிட்டு அல்லவா உறுதிப்படுத்திக்கொண்டாய் ?
இனி வங்கக் கடல் அது எங்களுக்கு கலைஞர் கடல்;
உனக்கு பிறகான திராவிடர் ஆரியப்  போரை
நீயே எங்களுக்குத் தளபதியாய் தொடங்கிவிட்டுச்
சென்றிருக்கின்றாய் ;
உனக்குப் பிறகான திராவிடர் – ஆரியப் போரில்
நீயே எங்களுக்கு தளபதியையும்
கைக்காட்டிச் சென்றிருக்கின்றாய்;
படை வீரனே,
நீ இல்லா போர்க்களம்
மனச் சோர்வை தந்திட்டாலும்
உன் பிரிவால் உடைந்திட்ட
எங்கள் இதயத் துண்டுகளை
ஒன்றிணைத்து மீண்டிழுந்து வருவோம் ;
இனி வரப்போகும் கதிரோனின் வரவை
எப்படி நீ இல்லாது வரவேற்கப் போகிறோம்
எனும் வெறுமை எங்கள் மனதை சூழ்கின்றது
எனினும் ;
நீ வடிவமைத்த நவீன தமிழ்நாட்டின்
ஒவ்வொரு சின்னமும், முத்திரையும்
சிலைகளும், கட்டிடங்களும்
உன் இருப்பை இனி ஆயிரமாயிரம்
நூற்றாண்டுகளுக்கு பறைசாற்றிக்
கொண்டிருக்கும் கலைஞரே !
உன் பெயரை ஓயாது கருணாநிதி
என்றே உச்சரித்துப் பழகிய
ஊடகங்கள்கூட கலைஞரின்
சாதனைகள் என்றே பட்டியலிட்டது ;
அதைக் காணத் தான் நீ இல்லை ;
திருநங்கைகள்
மாற்றுத்திறனாளி
என முகவரியற்ற
மக்களுக்கும் சுயமரியாதை தந்திட்டாய்;
மாநில முதல்வர்களும்
தேசியக் கொடி  ஏற்றும் உரிமையை
மாநில சுயாட்சியின் முதல்படியாய் பெற்றாய் ;
மனிதனை மனிதன் இழுக்கும் கைவண்டி ஒழித்தாய்;
மலம் அள்ளும் அருந்ததிய மக்கள் பல்கலையில்
பயின்றிட 3% இடஒதுக்கீடு ஒதுக்கினாய் ;
முதுமையில் வறுமை கொண்டோர்க்கு
கண்ணொலி ஈந்தாய் ;
உழவர் சந்தை படைத்திட்டாய்;
நாட்டிற்குள் இரண்டாம்தர குடிமக்களாய்
நடத்தப்படும் மங்கையர்க்கு
வீட்டிற்குள் சொத்துரிமை வழங்கினாய் ;
சேரியையும் ஊரையும் இணைத்து
சமத்துவபுரங்கள் உன் அறிவாசான் பெயரில் கண்டிட்டாய் ;
விளிம்புநிலை மக்களை என்றுமே உன் உணர்வில்
உள்வாங்கி பணிசெய்தாய்,
ஆதலால் –
உன் சாதனைகள் ஒவ்வொன்ருக்கும்
ஆயிரமாயிரம் முத்தங்கள்
முத்துவேலரின் மைந்தனே ;
போற்றி போற்றி தலைவா போற்றி
80 ஆண்டுகளாய் தமிழ்நாட்டு
அரசியலின் அச்சாணியாய்
சுழன்றிட்ட கன்னல் கனியமுத
தலைவரே போற்றி போற்றி;
உன் மரணத்திலும்
வஞ்சக நரிகளின்
வாலறுத்து மூக்கறுத்து
கதறி ஓடவிட்டோய் போற்றி போற்றி ;
நீ இல்லாத் தமிழ்நாடு வெறுமை என்றபோதும்
நீயே உதிக்கும் கதிரோனின்
ஒளியாய் உவப்பாய் எங்களுக்குள்
என்றுமே இருப்பாய் போற்றி போற்றி;
நவீன தமிழ்நாட்டை
கட்டமைத்த எங்களின் கரிகாற் சோழனே
போற்றி போற்றி ;
தாயுள்ளம் கொண்டு ஆட்சிப்
புரிந்திட்ட திராவிடத் தலைமகனே
போற்றி போற்றி ;
பெரியார் நெஞ்சத்து முள்
அகற்றிய பெரியாரின் பெருந்தொண்டரே
போற்றி போற்றி ;
கலைஞரே
நீ உன் அண்ணனிடம்
இதயத்தை இரவல் பெற்றாய்யன்றோ ?
உன் உடன்பிறப்புக்கள் கேட்கின்றோம்
நீ ஓய்வறியாது சிந்தித்திட்ட மூளையினை
எங்களுக்கு இரவலாக கொடு
உன் சிந்தனையின் வீச்சினைக்
கொண்டே திராவிடத்தின் சுடரை அணையாது
காத்திடுவோம் ;
உழைப்பின் இலக்கணம் நீ
தமிழின் இலக்கியம் நீ
தமிழ்நாட்டின் மூச்சுக்காற்று நீ
சமூகநீதியின் தனி அடையாளம் நீ
உனை காலத்திடம் தொலைத்துவிட்டு
தேறுதல் இன்றி கதறுகின்றோம் ;
உனை நினைத்திடும்போது
கண்ணீர் வற்றவே மறுக்கின்றது;
ஓய்வறியா சூரியன் நீ
ஓய்வெடுக்கின்றாய் ;
ஓய்ந்து விடுவோம்
நாங்கள் என கனவு காணும்
பிணந் திண்ணிகளின்
கதை முடித்து தீமூட்ட
உன் மூச்சுக் காற்றின் வெப்பத்தணலை
கேட்கின்றோம் ;
வாங்கக் கடல் அலைகளே
உன் மடியில் தன் அண்ணனின்
அரவணைப்பில் துயில் கொள்ளும்
எங்கள் பொன்னான தலைவனை
தாலாட்டுங்கள் ;
தமிழ்ப் பண்ணிசைத்து தாலாட்டுங்கள் ;
தமிழ்ப் பண்ணினை மட்டுமே எங்கள்
திராவிடத்தின் முத்து செவிமடுக்கும் மறவாதீர்கள் ;
உனை பேழைக்குள் வைத்து மூடியபோதும்
உன் வசீகரச் சிரிப்பிற்காய்
உன் கரகரப்பு குரலுக்காய்
உன் கையசைப்பிற்காய்
இப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றது
உன் அரக்கர் கூட்டம்;
எப்போதும் உனக்கு விடையளிக்க
எங்களால் முடியாது ;
எங்களின் ஒவ்வொரு அணுக்களிலும்
நீ கலந்தே இருப்பாய்
என்றென்றும்
அன்பு முத்தங்கள்
எங்கள் கலைஞரே !!
-ம.வீ. கனிமொழி