உன்னுடன் நானும்!

இப்ப என்ன ஆகிடுச்சு
எதுக்கு இந்த அலம்பல்…!?
கொண்டாடத் தான் வேண்டும்…..
ஒன்பது துவாரமும் ஓலக்குரல் எழுப்ப
இழுத்துப் பிடித்து
நடித்துக் கெடுத்து
எல்லைத் தாண்டி
குருதி வழிய
குடலை உருவி
அம்மா……….
எழுந்து மட்டும் நிற்கவில்லை – பாதகர்களே….
இளந்தளிரினையும் எரிக்கும் மனித இழுக்குகளே…..
இணைந்தும் நிற்கிறோம்…..!
கொண்டாடியேத் தீரவேண்டும்…..
தீக்குளித்தால் தீருமோ?
தாயே
தீண்டத்தான் தகுமோ!? –
தனையனே, தமையனே,
ஆசானே, இறையின் அடியேனே…
இனப்பிரிவு இதிலில்லை
இன்னலிற்கோ
வரைமுறையில்லை….
ஆமாம், தப்புத்தான்……
ஆனா, நீ ஏன் “அப்படிப்” போன?
ஊசி இடம் கொடுக்காமத்தான் நூல்
நுழைஞ்சிடுச்சோ?
ஊருக்குள்ள உனக்குத்தான் ஆத்தா
அவமானம்….
பார்த்துப் பக்குவமா
கால, இனிமேலாவது சேர்த்துவச்சு
வாழப் பழகுப் போ…..
கதை கதையாம் காரணமாம்….
கண்ணீரும் காரியவாதிகளின்
கரிசனமும் பழையது…
ஆயின்,
தன் தலைத் தொட்ட துவாரத்தினுள்
இரும்புக் கம்பியினையும்,
கண்ணாடிக் குடுவையினையும்
ஏற்றி
கிழித்து, சிரித்துக் கூடி
கும்மாளமிட்டீர்களே….
என் தாயும், அவள் தாயும்,
உலகின் அனைத்து சிநேகிதிகளும்,
காத்த அமைதி
அகன்று அனலானது….!
இனி,
உதிரம் உறைந்து மறையாது….!
உரசித்தான் பாருங்கள் – பதர்களே,
உரத்துக் கேட்போம்….
நீதி தேவதையின் முன்
நிற்க வைப்போம்….
இணைந்து க் கொண்டாடுவோம்
இத்தருணத்தை…..!
மறவாதீர்கள்!
நீதிக்காக,
அத்துமீறலை எதிர்க்கொண்ட
முக்கால சிநேகிதிகளே,
சிநேகிதர்களே……
இருக்கிறேன்,
உம்முடன் பயணிக்க
உனக்காக நானும்….!