த லைப்பைக் கண்டதும் யாரோ Onsite நக்சலைட் நமது குழுவுக்குள் ஊடுருவி Anti – நாத்திக கருத்துக்களை எழுதி விட்டான் என்று எடுத்த எடுப்பில் எந்த விபரீத முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். The Common Sense இதழின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எல்லா விதிகளுக்கும் கட்டுப்பட்டே இருக்கிறது. அதனால் தயக்கமின்றி மேற்கொண்டு படிக்கலாம்.
தந்தை பெரியாரின் கருத்துக்களை மறுப்பவர்கள் எந்தக் காலத்தில் விவாதம் செய்தாலும், அதிலும் குறிப்பாக இப்போது நடக்கும் தொலைக்காட்சி கதறல்களில் அதிகம் குறிப்பிடப்படுவது அவரின் “கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்” என்ற மேற்கோளைத்தான். “ஏன் அப்படி சொன்னார்?, அப்படி எப்படி சொல்லலாம்?” என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் இன்று காணும் காட்சி புதிதன்று. அவர் சொன்னதே ஒரு நாலு வரிதான், அதையும் கூட ஒழுங்காகப் படித்து வராமல் “கடவுளைக் வணங்குபவன் முட்டாள்” என்று தவறாகச் சொல்லி, அதைச் சரி செய்யவே விவாதத்தில் பாதி நேரம் சென்றதெல்லாம் இப்போது தேவையில்லாதது.
அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, ஆட்சிப் பொறுப்புக்கு வரும் கலைஞருக்கு இப்போது எது நடந்தாலும் ஜாலியாக இருக்கும் எடப்பாடியாருக்கும், பன்னீருக்கும் அமைந்த சூழலில்லை. எப்போதும் சவால்கள் வந்துகொண்டே இருந்தன. அதன் ஒரு கட்டமாகக் கட்சிக்கு வெளியில் இருக்கும் உயர் ஜாதியினர் என்று தங்களைக் கருதிக் கொள்கிற சிலர், அதே எண்ணம் கொண்டு தி.மு.க விற்குள் இருக்கும் சிலரோடு கைகோர்த்துக் கொண்டு ஒரு சதியை கட்டவிழ்த்து விட்டார்கள்..
நம் பெரியாரிஸ்டுகளும் டுபாக்கூர்களுக்கு பதிலளிக்க, “பெரியார் சாதி ஒழிப்பைத் தான் தன் வாழ்நாள் முழுவதும் முன்வைத்துப் போராடினார். சாதியின் தோற்றுவாய் புராணங்களில் இருந்தது, புராணங்கள் மதத்தினுள் புதைந்திருந்தது, மதம் கடவுளைக் பாதுகாக்கத் தேவைப்பட்டது. அதனாலேயே பெரியார் இப்படி சொல்லும் படி நேர்ந்தது” என்று இறுதியாகத்தான் கடவுள் மறுப்புக்கு வந்து இந்த வரிகளைச் சொன்னார் என்று பொறுமையாக விளக்குவார்கள்.
1970ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒருநாள் அதிகாலை திடீரென்று சென்னை தியாகராய நகரில் ஒரு வெடிச்சத்தம் கேட்டது. நமக்குத் தெரிந்து பூமிக்கு அடியிலிருந்து ஒரு செடி வரலாம் அல்லது பூமியைப் பிளந்து கொண்டு பூகம்பம் வரலாம் ஆனால் அங்கு வந்ததோ ஒரு பிள்ளையார். அவர் தானாகத் தோன்றியதால் அவருக்கு “சுயம்பு பிள்ளையார்” என்று பெயர் வைத்து, காவல் துறை பாதுகாப்போடு உண்டிய லும் உடன் வைத்து விட்டுவிட்டார்கள். இதுவரை எந்தச் சிக்கலும் இல்லை, ஆனால் அந்த இடத்தில் மசூதி கட்டுவதற்காக முஸ்லிம் லீக் ஏற்கனவே அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.
விவாதத்தின் தொடர்ச்சியாக, “இந்துக் கடவுள்களை மட்டுமே திட்டுகிறீர்களே மற்ற மதத்தைத் திட்டினால் உயிரோடு போக முடியாது தெரியுமா?” என்று அச்சுறுத்தல் அடுத்து வரும். அதற்கும் பெரியாரிஸ்டுகள் சளைக்காமல், “கடவுள் இல்லை என்றால் எல்லாக் கடவுளும் இல்லை என்றுதான் பொருள்” என்றும் மூன்று மதத்தினரும் பெரியாரை ஒன்று சேர்ந்து சந்தித்தபோது, “நீங்கள் அனைவரும் தனித்தனியே மற்ற இரண்டு கடவுள்கள் இல்லை என்கிறீர்கள் நான் கூடுதலாக ஒன்றைச் சேர்த்து அனைத்து கடவுள்களும் இல்லை என்கிறேன்” என்ற விளக்கத்தைக் கொடுத்த நிகழ்வையும் குறிப்பிடுவார்கள்.
மாற்றம் என்ற சொல்லும் சதிகாரர்களின் இலக்கையும் தவிர மற்ற அனைத்தும் உலகில் மாறிக்கொண்டே இருக்கும் என்பதைப் போல அவர்களின் நோக்கம் என்னவென்றால் இந்தத் திடீர்ப் பிள்ளையாரை வைத்து ஒரு மதக் கலவரத்தை தூண்டி ஆட்சியைக் கலைத்து விடலாம் என்பதுதான். அதை உணர்ந்த கலைஞரும் உடனே இந்த சர்ச்சையைப் பற்றி விசாரிக்க ஆணையிடுகிறார். அன்றைய அட்மின் ராஜாக்கள், “நாத்திகர் கருணாநிதி கடவுளைப் பற்றியே விசாரிக்க உத்தரவிடுகிறார்” என்று வழக்கம் போல புலம்பத் துவங்கினர்.
அது பிரேக்கிங் நியூசுகளுக்கு பஞ்சமான காலமென்பதால் பத்திரிக்கையாளர்களுக்கும் ஏதாவது செய்தி தேவைப்பட, அப்போது இருந்த சங்கராச்சாரியாரிடம் எதற்கும் திடீர்ப் பிள்ளையாரைப் பற்றி கருத்துக் கேட்டு விடலாம் என்று எண்ணி அவரிடம் சென்று ஒரு பேட்டி எடுக்கிறார்கள். “கடவுள் சுயம்புவாக தோன்றுவாரா?” என்று கேட்க, அவர் என்ன இல்லை என்றா சொல்லியிருக்கப் போகிறார்..நீங்கள் நினைத்தது போலவே, “பேஷா தோன்றுமே” என்று சொல்லி முடித்திருக்கிறார்.
இந்தச் செய்திகளை எல்லாம் அறிந்த தந்தை பெரியார் பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு செய்தி கொடுக்கிறார். அப்போதுதான் இந்தப் புகழ்பெற்ற வாசகங்களை சொல்லி ஊரெங்கும் கல்வெட்டுகள் வைத்து அதில் இதை பொரித்து வையுங்கள். காரணம் எதுவும் இப்போது கேட்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்து அனுப்பி வைக்கிறார்.
அனைவரும் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பிழையில்லாமல் ஒரு முறை எழுதிவிடலாம்
கடவுள் இல்லை, கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி
—இடைவேளை— போய்த் தண்ணீர் குடித்து விட்டோ, தம் அடித்து விட்டோ அல்லது உச்சா போய் விட்டோ வந்து தொடரலாம்
அப்போது காவல்துறை உதவி ஆணையராக இருந்த வைகுந்த் என்பவர் இந்தச் சுயம்புப் பிள்ளையாரின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். எதிர்பார்த்தபடியே திராவிடர் கழகமும், முஸ்லிம் லீகும் ஒன்றிணைந்து விசாரணையை ஆதரிக்க, ஜனசங்கமும் (அதாவது அன்றைய பாஜக) சங்கர மடமும் எதிர்ப்புத் தெரிவித்தனர். “குலக்கல்விப் புகழ்” ராஜாஜியும் பிற்காலத்தில் இது கலைஞரின் அனுபவமின்மையைக் காட்டுகிறது என்று வைகுந்த்திடம் வருந்தித் தெரிவித்ததாகச் செய்தி.
1975லிருந்து 1977வரை அமுலில் இருந்த அறிவிக்கப்பட்ட எமெர்ஜென்சியோ அல்லது இப்போது இருக்கும் அறிவிக்கப்படாத அவசர நிலையோ அப்போது இல்லாததால் பத்திரிக்கைகள் ஓரளவு சுதந்திரமாகவே செயல்பட முடிந்தது. தந்தை பெரியாரின் கோரிக்கை அவரின் சொற்களோடு எந்தத் தடையும் தணிக்கையுமின்றி வெளிவருகிறது.
பெரியாரின் கடவுள் இல்லை என்ற செய்தியைக் கண்டு பதறிய அல்லது பிரேக்கிங் நியூசை தொடர நினைத்த பத்திரிகையாளர்கள் மீண்டும் சங்கராச்சாரியாரிடம் அதற்கு மறுப்பு வாங்கும் நோக்கத்தில் சென்றனர். குரு மிகவும் டென்ஷனாகி…கடுப்பாகி இந்த ஜகத்துக்கு இப்படி பதிலளித்தார்.
கடவுளைக் கற்பித்தவன் அறிவாளி
கடவுளைப் பரப்பியவன் யோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் நாகரீகமானவன்
இதுவும் பிற்காலத்தில் பல்வேறு versionகளில் தலைவர்களின் சிலைகள் அடியே பொறிக்கப்பட்டது. சங்கிகள் போல சும்மா அடித்துவிடாமல் உண்மையாகச் சில புகைப்படங்கள் எடுத்து சேர்க்க வேண்டும் என நினைத்துத் தேடிய போது கிடைத்த தகவல்கள் சுவையானவை.
பெரியாரின் மேற்கோளோடு கோவை காந்திபுரத்தில் பிள்ளையார் கோயில் அருகே இருந்த கல்வெட்டு சாலை விரிவாக்கத்திற்காக இரண்டு முறை அகற்றப்பட்டிருக்கிறது. நெல்லை லாலா இனிப்புக் கடையும், கோயிலும் சாலை விரிவாக்கத்திற்கு தடையில்லையா என்று கேள்வி உங்களுக்கு எழுந்தால் என்னிடம் பதிலில்லை. அதன் எதிரே ஒரு புறம் சங்கராச்சாரியாரின் மேற்கோளோடு இருந்த பெரியாரின் “நெருங்கிய நண்பரான” ராஜகோபாலாச்சாரியரின் சிலையும் இப்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்காகப் எடுக்கப்பட்டுள்ளது. (ராஜகோபாலாச் சாரியரின் படத்தில் மேற்கோள் தெரியாது. கூகுளில் இவ்வளவுதான் கிடைத்தது.).
சேலத்தில் பெரியார் சிலைக்கு அருகிலேயே உள்ள காமராஜரின் சிலையின் கீழேயும் இந்த மாதிரி வரிகள் பொரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. இந்தக் கல்வெட்டுகளெல்லாம் எப்படி அருகருகே அமைதியாக அமைந்திருப்பது என்பதுதான் வெளிமாநிலத்தவரின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்க முடியும். எல்லாவற்றையும் விட சுவாரசியமான செய்தி என்னவென்றால் தற்போதைய சங்கராச்சாரி தூக்கியெறிந்த ஆப்பிளைக் மிகவும் கரெக்ட்டாக கேட்ச் பிடித்து இந்தச் செயற்கை நுண்ணறிவியல் காலத்திலும் தீண்டாமையை நிலைநாட்டிய திருவாளர் அர்ஜுன் சம்பத்தும் தன் பங்கிற்கு ஆங்காங்கே தன்னுடைய “சொந்தப்” பொன் மொழிகளால் கல்வெட்டியிருக்கிறார்.
“பொய்களோடு, பொய்யானவர் களோடு போராடுவதும் உண்மையைத் தேடுவதும் சில சமயங்களில் வேறு வேறானவை. உண்மையை அறிவது கடினம் அதன் இயல்பினால் அல்ல உங்கள் முதல் அனைத்தையும் பொய்யில் முதலீடு செய்திருப்பதால்” என்ற ஓஷோவின் வாரிகளைப் போல விசாரணை நடந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலைஞர் அறிவித்தபடி இறுதியில் நமச்சிவாய ஏட்டு என்று அழைக்கப்பட்டவர் தான் இதைச் செய்தார், காவல் நிலைய ஆய்வாளர் விசுவநாதன் இந்த உண்மையைத் தெரிந்தே மறைத்தார் என்றும் கண்டறியப்பட்டு அந்தச் சிலை அகற்றப்பட்டது. அந்த விசுவநாதன் என்பவர் தான் முதன் முதலில் “சுயம்பு பிள்ளையார்” என்று பெயர் வைத்தவர் என்பதும் சிறப்புச் செய்தி. இதற்கெல்லாம் மிகவும் குறைந்தபட்ச தண்டனையாக அந்த இருவரும் பணியிடம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டனர். சிலையை அகற்றி விட்டார் என்று கலைஞர் மீது பாய்ந்தவர்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்காகப் பாராட்டவில்லை.
சங்கராச்சாரியாரின் மறுப்புச் செய்தி வந்ததும், மீண்டும் செய்தியாளர்களை அழைக்கிறார் பெரியார். இந்த முறை பெரியாரின் கைகளில் தன்னுடைய செய்தி, சங்கராச்சாரியாரின் மறுப்புச் செய்தி இரண்டும் இருக்கிறது. அப்புறம் மெதுவாக இப்படி ஆரம்பிக்கிறார், “நான் சொன்ன செய்தி தவறா இல்லையா என்கிற விவாதத்தைப் பின்னர் வைத்துக் கொள்ளலாம். இப்போது சங்கராச்சாரி சொல்லியிருக்கிறார் கடவுளைக் கற்பித்தவன் அறிவாளி என்று. அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார் கடவுள் என்பது கற்பிக்கப்பட்டதுதான். அப்போது அந்தப் பிள்ளையார் சுயம்புவாக தோன்றி இருக்க முடியாதே. அதனால் சிலையை அங்கிருந்து தூக்கிக் கடாசி விடுங்கள்”.
நீங்கள் இடைவேளையோடு நிறுத்தியிருந்தால் அது வெறும் நாத்திகம் இதுவரை படித்துத் தெளிவடைந்திருந்தால் – அது பகுத்தறிவு.