கடுங்குளிரில் ஒரு பாடம் – சிறுகதை

னவரி மாதத்தின் இறுதிக்கட்டத்தில் குளிரும் குளிர் சார்ந்த இடமுமாக மாறிப்போன மிச்சிகன்  மாநிலம்  . அண்டார்டிக்காவிலும் , மிச்சிகனிலும் ஒரே விதமான குளிர் -34  . பாதரசத்தின் அளவு  கீழே இறங்க இறங்க குளிரின் அளவு மேலே ஏறிக்கொண்டிருந்தது . -50  வரை போக வாய்ப்பிருப்பதாக அலறிக் கொண்டிருந்தன செய்தித்தாள்கள் .  polar vortex  என்று தினுசாக ஒரு பெயரை சொன்னார்கள் . விளக்கத்தை தேடினால் , வட துருவத்தில் இருக்கும்  காற்று மண்டலத்தில் அழுத்தம் அதிகமாகி உள் பக்கம் நகர்கிறது என்று தொடங்கி பக்கம் பக்கமாய் போயிற்று  , குளிர் காற்று அடிக்கும் என்பதை சுத்தி வளைத்து சொல்கிறார்கள் என்று விட்டுவிட்டேன் .

அரசாங்கத்தால்  அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்ததால்  ,  work from  home  எனச் சொல்லிவிட்டு வீட்டில் இருந்தேன்  ,பின்  நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு குளிரோடு போய் சண்டை போடவா முடியும் ?

காலை ஏழு மணிக்கே மீட்டிங் ஆரம்பித்துவிட webex இல் இணைந்துவிட்டு  , ஆஸ்திரேலியாவில் இருந்து  எதற்கு கத்துகிறான்  எனத் தெரியாமல் ஒருவன் கத்திக்கொண்டிருக்க , சீனாவில் இருந்து ஒரு அம்மையார் பதிலுக்கு கத்திக்கொண்டிருந்தார் , இதுல ஏன்டா என்னை கோர்த்து விடீங்க என எண்ணியபடி   பால்கனியின் கண்ணாடிக் கதவின் மூலம்  வெளியே பார்த்தேன்  .

காற்றின் சீற்றம் கண்ணாடி தாண்டி வர  , இலை உதிர்ந்து போன மொட்டை மரங்களின் ஆட்டமும் ,  பனியால் மூடிக்கிடக்கும் கார்களின் அரசல் புரசலான தோற்றங்களும் , வசந்த காலத்தில் புல்வெளியாக  இருந்து  இப்போது பனிப்போர்வையாய் மாறிப்போன நிலமும் கண்ணில் பட , பார்வைக்கு எட்டிய தூரம் வரை ஒரு மனித நடமாட்டமும்  இல்லை .  அவ்வப்போது காற்றின் அளவு அதிகமானதால்  கூரைகளில் இருந்த பனி  காற்று மண்டலத்தை ,  புகை மண்டலமாய் மாற்றிக்கொண்டிருந்தது .

மிக நீண்ட பொழுதாய்  இன்று இருக்கப்போகிறது என்று எண்ணியபடி ,  75  டிகிரிக்கு  ஹீட்டர் வைத்திருந்தும் , மெல்ல மெல்ல ஒரு நத்தையைப் போல காலின் சுண்டுவிரலில் ஆரம்பித்து , பிற விரல்களுக்கு பரவி கணுக்காலில் ஏற ஆரம்பித்துக்கொண்டிருந்த குளிரை கவனித்துக் கொண்டிருக்கையில் , “Are  u  there mr ….   ?  “ என்ற கேள்வி இடைமறிக்க , “ opps sorry i  was talking on mute “  என சொல்லிவிட்டு  பேச ஆரம்பித்தேன் “ what was the question again ?”. எப்படியெல்லாம் இவர்களிடம் நடிக்க வேண்டி இருக்கிறது ?

ஏழு மணிக்கு என்ன தலை போகுற பிரச்சனை என்பதற்கு , 2022  வருடம் வெளியாகும் காருக்கு  ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு போகும் சிக்னல் ஒன்றை காணவில்லை என்ற பதில் வந்தது . கண்டுபிடித்து தரும் படி சொல்லிவிட்டு நாளைக்கு மறுபடியும் பேசலாம் என வைத்துவிட்டார்கள்  . ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை

“யார் வம்புக்கும் போகாமல் அமைதியாகத்தானே இருந்தேன் , இப்படி கிணத்த  காணோம்னு சொல்லுறாங்களே , இருக்கிற ஆயிரக்கணக்கான  சிக்னல்களில் இந்த எங்கேன்னு தேடுறது , சிக்கனல் ஆர்மபிக்கும் இடம் தெரிஞ்சவாவது நல்லா இருக்கும் , அதுவும் தெரியாது “ என்று பேசிக்கொண்டிருக்கையில்  ஒரு உண்மை உறைத்தது ,  எதிர் புற சுவரில் இருந்த சிலந்தியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்

சிலந்திகள் இது கொஞ்சம் பெரிதுதான் , நல்ல கருப்பு  நிறத்தில் வாட்ட சாட்டமாய் இருந்தது . புரதப் பசி என்று நிறைய சிலந்திகளை சாப்பிட்டிருக்கும் போல,ஒரு மனிதன் பேசியதாலோ , அல்லது குளிரிலோ தெரியவில்லை  அது சுவரோடு சுவராக அசையாமல் ஒட்டிக்கொண்டிருந்தது .

சிறிது நேரம் கவனித்து பார்த்தும் அசைவில்லை , அசைந்தால் மட்டும் அது பேசவா போகிறது என  , வீட்டுற்குள் இன்னொரு குளிராய் படர்ந்திருந்த தனிமையை போக்க,  மடிக்கணினியை பார்க்க கண்களை சிமிட்டி சிமிட்டி  அடுத்த மீட்டிங்க்கு நேரம் ஆகி விட்டது என சொன்னது .

அடுத்த அழைப்பு முன்னதைவிட பயங்கரமான பிரச்சனை ,  காருக்குள்   சில பகுதிகளை வைக்க இடம் இல்லை , செய்த டிசைன் தவறு என்று ஒரு பெரிய கூட்டம் இன்னொரு பெரிய கூட்டத்திடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தது , நல்ல வேளை இது 2024  இல் தான் வெளிவரும் .   “இடம் இல்லைனா பக்கத்து காருல வைங்கடா “ இத சொன்னா நம்மை பைத்தியக்காரனும் பாங்க என்று நினைத்துக்கொண்டு சிலந்தியை பார்க்க , எங்கே இன்னொரு முறை பேசிவிடுவேனோ என்ற அச்சத்தில் அது ஓடி ஒளிந்து கொண்டது .

ஒரு மணி நேரம் மாற்றி மாற்றி பேசிக்கொண்டார்கள் , நம் ஏதாவது வாய் கொடுத்தது சிக்கினால் சின்னாபின்ன மாவோம் என்பதால் , இரண்டு பக்கம் நபர்கள் பேசும்போதும் “ yes  thats  right “ என்பதை  யாரும் பார்க்க முடியாது என்றாலும்  கூட தலையை ஆட்டி ஆட்டி சொன்னேன் .

நிறைய  பேசிவிட்டதால் பசிக்க ஆரம்பிக்க , எப்போதோ அரைத்த மாவில் , தனது கரும்பற்களை காட்டி சிரித்துக்கொண்டிருந்த தோசைக்கல்லின் மேல் , பல விசித்திரமான வடிவங்களில் தோசை ஊற்ற ஆரம்பித்தேன் . “ஓடின தானே உனக்கு தோசை கிடையாது” என்று சொன்னது சிலந்திக்கு கேட்டதா என தெரியவில்லை .

இன்னைக்கு நாள் இப்படியே தனிமையில் பேசியே போய்விடுமோ என்று இருக்கையில் , கண்ணில் பட்டது   “Alaskan  huskey  “ பியர் பாட்டில்கள் . சிலந்தி தான் போய் விட்டது மதியத்திற்கு மேல் இந்த huskey  நாயுடன் பொழுதை களிக்கலாம் என்ற உற்சாகத்தில் தோசைகளை தட்டில் போட்டுவிட்டு வந்து அமர மறுபடியும் மீட்டிங் .

இது ஆகாது  என “As i am suffering from fever “  மின்னஞ்சல்  அடித்துக்கொண் டிருக்கையில்   இரண்டாவது கைபேசியில் வந்தது நண்பரின் அழைப்பு .

“நீங்க  work  from home ஆ ? “

“ஆமாங்க “

“நானும்தான் சியர்ஸ் “ .

“சூப்பருங்க , இந்த குளிர்ல வெளியாவா  போக முடியும்  “

“நானும்  குளிர பத்தி  பேசத்தான் கால் பண்ணினேன் , வெளியே -34  குளிர் அப்ப நான் தண்ணிய வெளிய ஊத்துனா அது ஐஸ்   ஆகணுமில்லே ?  தண்ணியாதான் ஓடுது “  நம்மை ஏமாத்துறாங்க பாஸ் என்றார் .

என் அறிவுக்கண்ணை திறக்க    இப்படி ஒரு அறிவாளி நண்பர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என மெய்சிலிர்த்துப்போனேன் .

“நீங்க கேட்டது  சரிதான் தலைவா , ஒண்ணு பண்ணலாம்  ஒரு பாட்டில்ல தண்ணிய  புடிச்சு வெளிய வெச்சு பாக்கலாம் நீங்களும் வைங்க , எதுக்கும் நம்ம whatsup  குரூப்ல இத போட்டு விடுங்க” என்றேன் .

அவர் வெகு சிரத்தையாக குழுவில் இந்த கேள்வியை கேட்க ,  வெளிய நான்  வைத்த பாட்டிலை புகைப்படம் எடுத்து அனுப்பினேன் .

ஆங்காங்கே   இருந்த நண்பர்கள் அவர்கள் வீட்டிற்கு வெளியேயும்  தண்ணியை   வைக்க சூடு பிடித்தது களம் . எல்லாரும் வீட்டில் இருந்து வேலை செய்கிறேன் என்று வெட்டியாகத்தான் இருந்திருக்கிறார்கள்  என்பதை அறிந்து  ஒரு பெரிய நிம்மதி வந்தது .

“பாஸ், இதை தண்ணினு சொன்னா டம்ளர் கூட நம்பாது” என்ற வந்த விமர்சனங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல்  ஒரு சிறிய பிளாஸ்டிக் குவளையில்  அதைவிட சிறிதாக தண்ணீர் ஊற்றி ,

“மேல கொஞ்சம் பனி மாதிரி வந்திருக்கிறது “ என்று கள நிலவரம் அனுப்பிக்கொண்டிருந்தார்  போன் செய்த நண்பர் .

 

நான் வைத்த பாட்டில் அப்படியே  இருக்க  , அதை சோகத்தோடு  பார்த்தேன் .

குழு நிலவரம் இப்படி இருக்க , இந்த குளிரிலும் அலுவலகத்திற்கு போன இன்னொருவர்  நீரை மேல ஊற்றினால் பனியாக மாறும் youtube  காணொளியை போட , குளிரை புறந்தள்ளி வீறுகொண்டு எழுந்தது தமிழர் படை .

வாளி வாளியாக அனைவரும்  தண்ணீரை  மேல ஊற்றியதில் , குளிர் இன்னும் இரண்டு டிகிரி கீழ போக , மேல போன தண்ணீர் அப்படியேதான் கீழே இறங்கியது .

“நம்ம எங்கோ தப்பு பண்ணுறோம் பாஸ் , பால்கனியில் இருந்து ஊத்தினாதான்  பனியாகும் , நிலத்தில் நின்று வீசுவதால்  தண்ணிக்கு    டைம் கிடைக்க மாட்டேங்குது , அதுக்குன்னு ஒரு நேரம் கிடைக்கணும்  பாருங்க”

என்று இன்னொருவர் கொளுத்தி போட  , வாளித்    தண்ணீர் அவரவர் பால்கனியில் இருந்து  மறுபடியும் வானம் நோக்கி பறக்க ஆரம்பித்தது.

அப்படியும் தண்ணீர் தண்ணீராகத்தான் இருந்தது .

ஒரு வேளை சுடுதண்ணீர் ஊத்தணுமோ என்ற மெசேஜ் வந்ததுதான் தாமதம்  , அடித்து பிடித்துக்கொண்டு அடுப்பை பற்ற வைத்ததில்  சூடானது  whatsup  குழு .

சக்ஸஸ் சக்ஸஸ் என்று காணொளிகள் பறக்க சுடுதண்ணீர் ஊற்றினால் , கிழே விழுமுன் அது  புகையாகி போகும்  காணொளிகள் நாலாப்பக்கம்   இருந்து வரத்தொடங்கின  .

ஒருவர் மட்டும் சுடுதண்ணீரை பைப்பில் பிடித்து ஊற்றினேன் வரவில்லை , , ஏன் எனக்கு மட்டும் வரவில்லை  என்று புலம்பினார் , உடுக்கை இழந்தவன் கை போல , அடுப்பில் கொதிக்க வைத்த சுடுநீர் என்று வந்த  மெசேஜ் அவரின் இடுக்கண் களைந்தது .

இன்னொரு நண்பர் ஒருவர்  “அதற்கும் மேல” போய் தன் மனைவியை தண்ணீர் வீசச்  சொல்லி , “slow motion  “இல்   அருமையாக வீடியோ எடுத்து பகிர்ந்து கொண்டதுடன் கடமை தவறாமல் தன்  “whatsup  status “ ஆகவும் வைத்துக் கொண்டார் .

சாதித்து விட்ட பெருமிதத்தில் வெளியே வைத்த பாட்டிலை பார்க்க  “டபுள்  சக்ஸஸ்” .   தண்ணீர் முழுவதும் உறைந்து போய் பாட்டில் புடைத்துக்கொண்டு இருந்தது . புகைப்படம் எடுப்பதற்காக உள்ளே எடுத்து வைத்தேன் .

ஒரு புதிருக்கு விடை கண்டுபிடித்து விட்டோம் என “huskey “ உடன் கலந்துரையாடலை துவக்கினேன் .

குளிருக்கு மிக இதமாய் உள்ளே போக ஐந்தாவது பாட்டில் பாதி இருக்க ஞாபகம் வந்தது   , கண்டுபிடிக்க வேண்டிய சிக்னல் .

என்ன கொடுமை என்று கணினியை தேடினால் அதில் சார்ஜ் இல்லை ,  குறுக்கும்  நெடுக்கும் தேடுகையில்  மேலாளரின் அழைப்பு.

அவருடைய வீட்டில் சண்டையா எனத்  தெரியவில்லை மனுஷன் என்ன சொல்லியும் கேட்காமல் நாளை காலைக்குள் சிக்னல் வேண்டும் என்றார் ,

இண்டு இடுக்கில் தேடியும் சார்ஜ்ர் கிடைக்காததால்  காற்றில்    குத்தியும் , உதைத்தும் சண்டை போட, “எதுக்கு இவ்வளவு டென்ஷன்” என்ற குரல் என்னை அப்படியே நிறுத்தியது .

சுற்றும் முற்றும் பார்க்கையில் , தனது எட்டு கண்களை உருட்டி உருட்டி  பார்த்தபடி நகர்ந்து வந்தது சிலந்தி.

பறந்து வந்து சோபாவில் ஏறிக்கொண்டேன் .

“மறுபடியும் கேக்குறேன் எதற்கு இவ்வளவு டென்ஷன் /அவசரம் ?”

“நீ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுறேன் பக்கத்துல வராத , அவசரம்னா கேட்ட ?”

“ டென்ஷன் ஆகாம என்ன செய்யுறது உனக்கென்ன சாப்பாடு உன்னை தேடி வருது  எனக்கெல்லாம் அப்படியா “

 

“சாப்பாடு வரது இருக்கட்டும் , ஓடி ஓடி  தண்ணி ஊத்தி என்ன கத்துகிட்ட ? “

சிலந்தியின் கேள்வி சுத்தமாக  புரியவில்லை  .”தண்ணி   ஊத்துறதில என்ன கத்துகிறது ? குளிர் அதிகமா இருக்குனு தெரியுது “

கீழே வந்த நூல் ஒன்றில் தன் எட்டு கால்களையும் அசைத்து இறங்கிய சிலந்தி  , சுற்றி சுற்றி சிரித்தது  .

“என்ன சிரிப்பு எங்கே நீ சொல்லு பாக்கலாம் ? என்ன கத்துகிட்ட ? “

“மிக முக்கியமான பாடம் இன்னைக்கு , என்னதான் சுடு தண்ணியாட்டம் , கொதிச்சாலும்  ஒரு நொடியிலே  உருத்தெரியாம வாழ்கை போயிடும் ,  இதே அமைதியா இருந்தா  உறையறதுக்கும் நேரமாகும் , உறைந்தாலும் திரும்ப பழைய நிலைக்கு வந்திடலாம் “

“யோசிச்சு பாரு  “  என்று சொல்லியபடி சிலந்தி மேல ஏற ஆரம்பிக்க , எனக்கு இறங்க ஆரம்பித்தது .

உள்ளே வைத்த பாட்டிலில் சலனமில்லாமல் இருந்தது தண்ணீர் . அதை அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்கையில்  , மழை அடித்தபின் , பொங்கி வரும் ஆற்றில் , துள்ளி வரும் மீனை போல , மனதில்  மின்னி மறைந்தது  அந்த சிக்னல்  தொடங்கும் இடம் , கூடவே தோள்பையில்  இருக்கும்  சார்ஜ்ஜரும்.

– வினோத் சந்தர்