கல்யாண மந்திரங்கள் அசிங்கமா?

ண்மையில் ஒரு சமூகப் போர் நிகழ்ந் தது; அறிவீர்கள்! தி.மு.கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின், என்றோ பேசிய பேச்சை மீள்கொண்டுவந்து, “ஹிந்துக்களின் புனிதமான திருமணமுறையை அசிங்கப்படுத்தி, உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்” என்று குமுறினார்கள் சமூகத்தில் ஒரு சிலர். சுமந்தராமன் என்ற ‘நடுநிலை’ ஊடகரும், கஸ்தூரி என்ற ‘மாதரசி’ நடிகையும் அவர்களுள் முதன்மை யானவர்கள்.

அவர்களை ஆதரித்தும்/மறுத்தும், பலர் களம் குதித்து வினையாற்றினர். குறிப்பாக, ஹிந்து மதம் சார்ந்த கட்சிகளும், சில சாதிக் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் ‘அமெரிக்காய்’ நாராயணன் என்பாரும், அதிமுக-வின் ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற நாளேடும், தன் பன்னாள் ஆராய்ச்சியுழைப்பால், உலகிலேயே ஜாதிக்கு DNA Strand Model கண்டுபிடித்த முதல் விஞ்ஞானியுமான, தமிழ்நாட்டு அரசின் சம்ஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர், மாண்புமிகு மாபா பாண்டியராஜன் அவர்களும், மு.க.ஸ்டாலினுக்குக் கண்டனக் குரல் எழுப்பினர்.

“ஸ்டாலின் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணியோடு உறவு அறுத்துக் கொள்ள வேண்டும்” என்று முழங்கினார் அமெரிக்காய்.

“ஹிந்து மதத்தை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இனி கிடையாது; ஸ்டாலின் பொது இடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று முழங்கினார், ஸ்ரீலஸ்ரீ மாபா பாண்டியராஜன். இப்படி, எண்ணெய்த் துணியில் நெருப்பு பிடித்துக் கொண்டாற் போல், கருத்துக்களம் தீப்பற்றிக் கொண்டது.

இன்னும் சில நடுநிலையாளர்கள், “மு.க.ஸ்டாலினுக்குச் சம்ஸ்கிருத மொழி தெரியாததால், மந்திரங்களைத் தவறாகப் புரிந்து கொண்டார். இதோ பரம பவித்திரமான உள்ளர்த்தம் / வெளியர்த்தம்” என்று கல்யாண மந்திரங்களுக்குப் பொருள் கூறவும் முனைந்தார்கள். ஆனால், ஆனால்.. போதாக் காலம், அவர்களே போற்றி வணங்கும் ஹிந்து மஹாகுரு ஒருவர் மூலமாகவே வந்து இடித்தது!

“மு.க.ஸ்டாலின் சொன்ன பொருள் சரியே” என்று 12ஆம் நூற்றாண்டு ஸ்ரீவைஷ்ணவ மஹாகுரு, ஸ்ரீ ராமானுஜருக்கே குரு, ஆளவந்தார் வாதிட்டார்! தன் சேக்காளிகளே தன்னைவிட்டு ஓடிவிட, தனியாக மாட்டிக் கொண்டு நிற்கும் வடிவேலு போல், ‘வேணாம்; அழுதுருவேன்’ என்று விழிபிதுங்கியது பக்தர்களின் கூட்டம்!

அப்படி என்ன தான் இருக்கு, அந்தக் கல்யாண மந்திரத்தில்? அப்படி என்ன தான் சொன்னார் அந்த மஹாகுரு? திராவிடத்தின் போலிப் பரப்புரைகளை நம்பாது, நாமே களமிறங்கி, ‘வரிக்கு வரி’ பார்த்து விடுவோமா? வாருங்கள்! தமிழ் – சம்ஸ்கிருதம் இரு மொழிகளுமே அறிந்த Academician என்பதால், சாந்தோக்ய உபநிஷத் / சாம வேதம் அறிந்த என்னோடு, அஞ்சாது படகிலேறுங்கள்!:)

இன்று பெரும்பாலான ஹிந்து வீடுகளில், பிராமணப் (பார்ப்பனப்) புரோகிதர் சொல்லும் விவாஹ (கல்யாண) மந்திரங்கள், ருக் (ரிக்) வேதத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை. ஸூர்யா என்கிற ஒரு தேவப் பெண்ணுக்கு, ஒன்றன் பின் ஒன்றாக, பல தேவர்களுடன் கல்யாணம் நடத்தி வைத்த போது, சொல்லப்பட்டவை அவை! அதையே, இன்று எல்லா மணமக்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

தாலி என்பது தமிழ்ச் சொல்; தாலம் = பனை ஓலையைக் (இழை) குறிக்கும். பனை, தமிழ் நிலத்தின் மங்கலம் ஆதலால், திருமண நிகழ்வின் ஒருநாள் மட்டும், அதை மணமக்கள் இருவருக்குமே அணிவிப்பது மங்கல வழக்காக இருந்தது. (காண்க: அகநானூறு 136, விற்றூற்று மூது எயினனார் எழுதிய ‘மைப்பு அறப் புழுக்கின்’ என்று தொடங்கும் திருமணப் பாடல்; மழை பட்டன்ன, மணல் மலி பந்தர், “இழை அணி சிறப்பின்” – பெயர் வியர்ப்பு ஆற்றி, தமர் நமக்கு ஈத்த “தலைநாள் இரவின்”);

தாலிப் பனையோலை, நாட்பட நாட்படக் கிழிந்து விடும். அதற்கென்று எந்த sentiment-உம் இல்லை! வெறுமனே ஒருநாள் மங்கலம் அது! ஆண்களுக்கும், ஐம்படைத் தாலி உண்டு! வைதீக பிராமணீயம், தென்னகக் குடிகளில் கலந்தபோது, இந்த ஒருநாள் தாலி வழக்கத்தைத் திருடி, அதற்குச் சுமங்கலி sentiment பூசி, புதிதாய் ‘மாங்கல்யம் தந்துஅநேனா’ மந்திரம் உருவாக்கி, பனைத் தாலியைத் தங்கத்தில் ஆக்கி, அதையும் பெண்ணுக்கு மட்டுமே ஆக்கி, பெண்ணை வாழ்நாள் சுமைதாங்கி ஆக்கியது!

மாங்கல்யம் தந்து = தாலிக் கயிற்றினை

அநேனா மம ஜீவன ஹேதுனா = நான் பல நாள் வாழ வேண்டி

கண்டே பத்நாமி = (உன்) கழுத்தில் கட்டுகிறேன்

சுபகே, த்வம் ஜீவ, சரதஸ் சதம் = சுமங்கலியே, உன்னால், என் ஆயுள்100 பலம் ஆகவேண்டும்!

நன்கு உற்றுப் பாருங்கள்! ஆணாகிய ‘நான் வாழ’ என்று தான் இருக்கும்; ‘நாம் வாழ’ என்பதே இருக்காது! பெண்ணாகிய உன்னால், ஆணாகிய நான் சுகப்படவே, இந்தக் கல்யாணம்! அதுவே வைதீகம்!

மேற்படி கல்யாண ஸ்லோகம் எந்த வேதத்திலும் இருக்காது; ஏனென்றால் அது வேதச் சடங்கே இல்லை; தென்னகத்தில் திருடப்பட்ட சடங்கியல்! உங்களை, வைதீக மதத்துக்குக் கவரவேண்டி, பின்னாள் ஒட்டுவேலை! தென்னக மக்களுக்கு, தாலி கட்டுதலே முக்கியமான சடங்காய்ப் பட்டாலும், வைதீகத் திருமணத்தில் அதற்கு மதிப்பே இல்லை! அக்னி வலமும், சப்த பதியும் தான் வேதப் பிரதானம்! இன்றும், The Hindu Marriage Act – 1955 சட்டப்படி, Section 7 சொல்வது:  “A Hindu marriage can be duly performed in accordance with ceremonies that include the Saptapadi, i.e. taking of seven steps jointly before the sacred fire. If Saptapadi is included in the rites and ceremonies, then the marriage becomes complete and binding when the seventh step is taken”.

கல்யாண மந்திரங்களில், தாலி முக்கியமல்ல, வேதமே முக்கியம் என்று பார்த்தோம் அல்லவா? அந்த வேத மந்திரத்துக்குப் பொருள் அசிங்கமானதா? என்றும் பார்த்து விடுவோம். இதோ, மந்திரங்கள்! சம்ஸ்கிருத பாஷையில் அப்படியே கொடுத்துள்ளேன்; அம்மொழி அறியாதோர், நம்முடைய தமிழில் வாசித்துக் கொள்ளவும்.

ருக் வேதம், 10ஆம் மண்டலம், 7ஆம் அனுவாகம், 85ஆம் சூக்தம்.

 

 

 

 

 

 

சோம பிரதமோ விவிதே; கந்தர்வோ விவித உத்தரஹ;

திரிதீயோ அக்னி; இஷ்டே! பதிஸ்தூரி யஸ்தே மனுஷ்யஜாஹ்!

சோமோ ததாத்; கந்தர்வாய; கந்தர்வோ ததாத் அக்னயே;

ரயிம் புத்ராம் ஸ்சா, தாத் அக்னிர், மஹ்யமதோ இமாம்!

மேற்படி மந்திரத்தைத் தான், “நீங்கோ தப்பா புரிஞ்சுண்டேள்! மந்திரத்தில் வருவது, பெண்ணைக் ‘காப்பவன்’ என்ற பொருளில் தான்; கணவன் காப்பதற்கு முன்பே, தேவதைகள் 3 பேர் பெண்ணைக் காக்கிறார்கள்” என்றெல்லாம் தங்களுக்கே சம்ஸ்கிருதம் தெரியாவிட்டாலும், சமாளி-fication செய்கிறார்கள். ஆனால், அந்த மந்திரத்தில் வருகிறதே, ‘விவித / இஷ்ட’ என்னும் சொல்? அதன் ‘அர்த்தம்’ என்ன? என்று வினவுங்கள், ஓடி விடுவர்.

சோம, பிரதமோ விவிதே இஷ்டே = சோமன், முதலில், பலவிதமாக அவளை அனுபவிக்கிறான்

கந்தர்வோ, உத்தரஹ விவித இஷ்டே = கந்தர்வன், அடுத்து, பலவிதமாக அவளை அனுபவிக்கிறான்

அக்னி, திரிதீயோ இஷ்டே = அக்னி, மூன்றாவதாக, அவளை அனுபவிக்கிறான்

மனுஷ்யஜாஹ், பதி ஸ்தூரி யஸ்தே = மனிதன், இவளின் ஆண்டையாக, இறுதியாக இழுக்கப்படுகிறான்!

அருஞ்சொற்பொருள்:

சோம = சோம தேவன் (சந்திரன் அல்லது சோமபான வஸ்து தேவன்)

பிரதமோ = முதலில்

விவித = பல விதமாக

இஷ்டே = இஷ்டப் படுதல்

கந்தர்வ = கந்தர்வ தேவன்

உத்தரஹ = அடுத்ததாக

விவித = பல விதமாக

இஷ்டே = இஷ்டப் படுதல்

அக்னி = அக்னி தேவன்

திரிதீயோ = மூன்றாவதாக

இஷ்டே = இஷ்டப் படுதல்

மனுஷ்ய அஜா = மனிதனாகப் பிறந்தவன்

பதி = ஆண்டை / Master / Lord

ஸ்தூரி = இழுக்கப்பட்டு

யஸ்தே = இப்படியாக!

இப்போது ‘வரிக்கு வரி’ விளங்குகிறது அல்லவா? இஷ்டம், விவிதம், ஸ்தூரி என்பதையெல்லாம் ‘நைசாக’ மறைத்து, குத்துமதிப்பாக ஒரு பொருள் சொல்லிக் கொள்வார்கள், தங்கள் வசதிக்கு; ஆனால் குத்துக்கு என்ன மதிப்பு? இவர்களுக்கு விழும் குத்து தான் மதிப்பு. பதி என்றால் கணவன் மட்டுமே அல்ல, காப்பாளன் என்றும் பொருளாச்சே என்றெல்லாம் பிதற்றுவார்கள். பதிக்கு ஒரே பொருள் தான் = ஆண்டை! (Lord, Master); பெண்ணுக்கு ஆண்டை யார்? அவளை ஆள்பவன்; கணவனோ அல்லது தேவனோ யாரானாலும்; அவ்வளவே!

நமக்குப் புரிகிறது இவர்களின் ‘கஷ்டம்’! பாவம், எவ்வளவு தான் முட்டுக் கொடுக்க முடியும்? அந்நாளில் அசிங்கமாக எழுதி வைத்து விட்டார்கள்; ஆனால் இன்று அதைத் தூக்கி எறியவும் முடியாது! வேதமே, வைதீக தர்மத்துக்குப் பிரதானம். அதை எப்படித் தூக்கி எறிவது? ஸோமன், மித்ரன், அஸ்வின், சவித்ரு..  தங்களின் பழைய கடவுள்களையே தூக்கி எறிந்த கூட்டம், வேதத்தை மட்டும் தூக்கி எறியவே எறியாது! ஏனெனில், வேதமே = ஜாதிக்குப் பிரதானம்!

பகவான் முக்கியமா, ஜாதி முக்கியமா? என்றால், ஜாதியே முக்கியம்! ஹிந்து ஞான மரபில் மட்டும் தானே, பகவானை நம்பாதவன் கூட ஆஸ்திகன்; வேதத்தை மறுப்பனே நாஸ்திகன் என்று சொல்லி வைத்துள்ளார்கள்? அதான், தங்கள் ஜாதி வாழ வேண்டி, தங்களின் பழைய பகவான்களைப் பலி கொடுத்து, ஆதிகுடிகளின் நடுகல் தொன்மங்களான முருகன் திருமால் கொற்றவையை, புது பகவான்களாக ஆக்கிக் கொண்டார்கள்! பகவான் யாராயினும் பரவாயில்லை; ஆனால் பகவானுக்கு வழிசொல்லும் அதிகாரம் = நம் ஜாதிக்கே! இஃதே வைதீகம்!

சேச்சே! இதெல்லாம் திராவிடவாதம்; பொய்ப் பித்தலாட்டம் என்று நம்மை மறுக்கலாம்; ஆனால், அந்தோ பரிதாபம், அவர்களின் மஹா ஆசார்ய புருஷர்களே, இந்த ஸ்லோகங்களுக்கு ‘அர்த்தம்’ எழுதி வைத்துவிட்டுப் போயுள்ளார்கள். குருவை எப்படி மறுப்பது? அபச்சாரம் அல்லவா! சாயனர், கல்யாண மந்திரங்களுக்கு எழுதிய உரையைப் படத்தில் பாருங்கள்! ஸ்ரீ சாயனர் = திராவிட இயக்கமா என்ன?:)

உண்மை என்னவென்றால், பெண்ணை = ருதுப் பொருளாக / போகப் பொருளாக மட்டுமே பார்த்த அசிங்கம்!:(

அதை நான் என் வாயால் சொல்லக் கூச்சமாக உள்ளதால், இதோ இச் சுட்டியில் அறிந்து கொள்க! திராவிடச் சுட்டி அல்ல; பகவத் கீதா சுட்டி தான்!

Woman & Her 4 Serial Husbands = https://www.bhagavadgitausa.com/woman_and_four_serial_husbands.htm

ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? சுவையான கதை தான்!:)

தென்கலை வைணவத்தில் ஓர் கலகக் குரல் எழுப்பிய இராமானுசர்! அவரின் குரு, யமுனைத்துறைவன் என்கிற ஆளவந்தார்! அவர் கல்வி பயின்று வந்த காலத்தே, அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில், அரசவைக்கு வந்து, ஆக்கியாழ்வான் என்ற பண்டிதனை வாதில் வெல்ல வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. சென்றார்!

அவைக்கு வந்திருந்த அரசி, அங்கு சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் என்கிற ஆளவந்தார் அழகிலே/ முகவொளியிலே (தேஜஸ்) மயங்கி, “இப்பையன் நிச்சயம் வெல்வான்” என்று அரசனிடம் கூறினாள். ஆனால் அரசனோ, “இவன் சிறுபிள்ளை; மிகுந்த பண்டிதரான ஆக்கியாழ்வானிடம் தோற்றுவிடுவான்; இல்லையேல், நாட்டில் பாதியை ஆளவந்தாருக்குத் தருகிறேன்” எனக் கூறினான். பதிலுக்கு அரசியும், “இவன் தோற்றால், அந்தப்புரத்திலே சேடியாய்ச் சேவைசெய்வேன்” என்று விளையாட்டாகச் சூள் வைத்தாள்!

சொற்போர் தொடங்கியது! ஆக்கியாழ்வான் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் விடை பகன்ற ஆளவந்தார், பதிலுக்குத் தாமும் 3 கூற்றுகளைக் கூறுவதாகவும், அவற்றை ஆக்கியாழ்வான் மறுக்க வேண்டும் என்றும் கூறினார். “1. உமது தாய் மலடி அல்லள், 2. இந்த அரசன் தர்மவான், 3. இந்த அரசி பத்தினிப் பதிவிரதை” என்று 3 கூற்றுகளைக் கூறி, அவற்றை மறுக்கச் சொன்னார்.

கதி கலங்கி விட்டான் ஆக்கியாழ்வான்! அரசியைப் பத்தினி அல்ல என்று எப்படி மறுப்பது? “சரி, உங்களால் மறுக்க முடியுமோ?” என்று ஆளவந்தாரையே கேட்க, அவர் பின்வருமாறு மறுத்தார்.

“ஆக்கியாழ்வான் தன் தாய்க்கு ஒரே மகன். ஒரே பிள்ளை பெற்றவள், சாஸ்திரப் படி மலடியே. அக்குழந்தைக்குத் துர்மரணம் நேர்ந்தால், அவளைத் தாயென்று கொண்டாட வேறு பிள்ளைகள் இல்லாததால் சாஸ்திரம், அவளை மலடி என்று சொல்லிற்று. எனவே, உனது தாய் மலடியே!

அரசன் தர்மவானாக இருந்தாலும், குடிமக்கள் செய்யும் பாவங்கள், சாஸ்திரப் படி அரசனையே சேரும். எனவே, இந்த அரசன் முழுக்க முழுக்கத் தர்மவான் அல்லன்!

ஒவ்வொரு கல்யாண வைபவத்திலும், சாஸ்திரப்படிச் சொல்லும் வேத மந்திரங்களில், சோம பிரதமோ என்ற ஸ்லோகம் முதன்மையானது! மணமகளாகிய இவளை, சோமன், கந்தர்வன் மற்றும் அக்னி ஆகிய மூன்று தேவர்கள் இஷ்டமாக அனுபவித்த பின்னரே, நான்காவதாக அவர்களிடமிருந்து மணமகன் பெற்று அனுபவிக்கிறான் என்று சாஸ்திர நிர்ணயம் இருக்கிறது! எனவே, இந்த அரசி எப்படிப் பத்தினி ஆவாள்?”

“இப்படி, சாஸ்திரப்படி வாதம் செய்தால், மறுக்க முடியுமே?” என்று சொன்னதும், அவரின் சாஸ்திர ஞானத்தை மெச்சித் தோல்வியை ஒப்புக் கொண்டான் ஆக்கியாழ்வான்! சாஸ்திரம் என்பதால், அரசனும் அரசியும் கோபம் கொள்ளவில்லை; மாறாக, அவரின் ஞானத்தை மெச்சி, நீர் எம்மை ஆள வந்தீரோ? என்று கண்ணீர் வடித்தாள். அன்றிலிருந்து, ஆளவந்தார் எனும் பெயரும் அவருக்கு வழங்கலாயிற்று!

எப்படி இருக்கு கதை?:) திராவிடம் எழுதிய கதை அல்ல! சாட்சாத், ‘குரு பரம்பரா பிரபாவம்’ என்று வைணவ உலகம் கொண்டாடும் புனித நூலில் உள்ளது, இக் கதை!

இதில், ஜகத்குருவான ஆளவந்தாரே, கல்யாண மந்திரங்களுக்கு என்ன பொருள் சொல்கிறார் பாருங்கள்! ஆனால், இன்று குருவையே மீறலாமோ.. பொய்யாகப் பொருள் ஜோடிக்கும் சுமந்தராமன், கஸ்தூரி, அமெரிக்காய் நாராயணன் & மாபியா பாண்டியராஜன்? குருவை மீறின ‘ஆசார்ய பாபம்’ வந்து சேராதோ? குருவை விடவா, இந்த Half Baked மண்டையர்கள் பெரியவர்கள்.. சாஸ்திர நுட்பத்தில்?:)

அறிக: இவர்களுக்குச் சாஸ்திரம் ஒன்றும் தெரியாது! ஆனால், அறியாமலேயே உள்ளூற மதப் பாசம்/ மத வெறி! இந்தக் காலத்துக்கு, அந்தக் கால மந்திரம் அசிங்கமாய் உள்ளது; அதனால் கூச்சத்தால் நெளிந்து, மாற்றிப் பொருள் சொல்லத் துடிக்கிறார்கள் அவ்வளவே! “அசிங்கம் தான்! ஆனால் அசிங்கத்தை, அசிங்கம் என்று சொல்லாதே, அழகு என்று சொல்!” என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. The Emperor & The New Clothes கதையில் வருவது போல், மன்னர் ஆடையில்லாமல் வந்தாலும், ஆகா என்ன அழகான உடுப்பு, என்று சொல்ல வேண்டுமாம்!

சரி, இன்னும் ஒரேயொரு ஸ்லோகத்தைப் பார்த்துவிட்டு, கல்யாணக் கச்சேரியை முடித்துக் கொள்ளலாமா?:)

என்ன சொல்கிறார்கள், இந்தப் போலிப்பொருள் மதவெறியர்கள்? சோமன், கந்தர்வன், அக்னி 3 பேரும் பெண்ணை வெவ்வேறு பருவகாலங்களில் ‘பாதுகாக்கி’றார்கள் என்பது தானே இவர்களின் திரிபு வாதம்? ஏன், ஆணைப் ‘பாதுகாக்க’ மாட்டார்களாமா, இந்தத் தேவர்கள்?:) Hormone-களால் உடல் சூடு ஏற்படும் மூன்றாம் பருவகாலத்தில், பெண்ணைப் பாதுகாக்கவே இந்த மந்திரம் என்கிறார்களே? எனில், சூட்டைக் குறைக்க அக்னியிடமா முறையிடுவது? குளிர்ச்சியான சோமனிடம் (சந்திரன்) தானே முறையிட வேண்டும் மூன்றாம் பருவத்தில்?:) இவர்களின் பொய்ம்மை, இவர்களின் குட்டையே உடைத்துவிடும்! பொய்யைப் பொருந்தச் சொல்வதென்பதே தெரியாதே, புராணக்காராளுக்கு!

ஒரு வளரும் பெண்ணுக்கு, அவள் தந்தையே கதாநாயகன்! அப்பா தராத பாதுகாப்பா, சோமன் தந்து விடுவான்? அம்மா-அப்பா பெற்று வளர்க்கப் படும் பாடுகளை, சற்றேனும் மதித்து, அவர்களையும் மந்திரத்தில் வாழ்த்தலாமே? 1. சோமன், 2. கந்தர்வன், 3. அக்னி, 4. அப்பா, 5. கணவன் என்று வரிசை இருந்தாலும், சரி ஏதோ பாதுகாப்பு மந்திரம் என்று நம்பித் தொலைக்கலாம்! பெண்ணின் அப்பாவை விலக்கிவிட்டு, வேறு 3 ஆண்களும், பிறகு கணவனும் என்றால், இவர்களின் அசிங்கம் இடிக்கிறது அல்லவா? Logic உடைகிறது அல்லவா?

பெண்ணை, தேவர்கள் வெறுமனே ‘பாதுகாக்கி’றார்கள் எனில், அடுத்தடுத்த ஸ்லோகங்கள், “இவளை விட்டுவிட்டு, வேறு யாராவது பெண்ணை இச்சைப்படுத்திக் கொள்!” என்று சொல்வானேன்? அசிங்கம் தானே?

உதீர்ஷ்வாதோ விஸ்வவாசோ, நம ஸேடா மஹேத்வா!

அந்யாம் இச்ச ப்ரபர்வ்யம், சம் ஜாயாம் பத்ராஸ் ச்ருஜ! (ருக் வேதம் 10-85)

ஹே விஸ்வவாசு எனும் கந்தர்வனே, எழுந்திரு! வணங்குகிறேன், இவளை விட்டுவிடு! வேறு யாராவது பெண்ணை இச்சைப் படுத்திப் பிடித்துக் கொள்! நான் கல்யாணம் செய்யப் போவதால், இவளை என்னிடமே விட்டுவிடு!

உதீர்ஷ்வாத பதிவதீ, ஹ்யேஷா விஸ்வவாசும், நம சாகீர்பிரிடே!

அந்யாம் இச்ச பித்ரசதம், வ்யக்தாம் தே பாகோ, ஜனுஷா தஸ்ய வித்தி! (ருக் வேதம் 10-85)

இவள் உடம்பில் வசிக்கும், விஸ்வவாசு எனும் கந்தர்வனே, எங்கள் கட்டிலை விட்டு எழுந்திருடா! உன்னை வணங்குகிறேன், இவளை விட்டுவிடு! திருமணம் ஆகாமல், தகப்பன் வீட்டிலேயே இருக்கும் வேறு யாராவது பெண்ணை இச்சைப்படுத்திப் பிடித்துக்கொள்! எங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதல்லவா? இனி, இவளை விட்டுவிடு!

சோம பிரதமோ மந்திரங்களுக்கு, பெண்ணின் பருவகாலங்களில் ‘பாதுகாக்கி’றான் என்று பொய் சொன்னவர்கள், இந்த மந்திரங்களுக்கு என்ன சொல்ல முடியும்? நேரடியாக இருக்கிறதே, இவளை விட்டுவிடு, என்று? அசிங்கத்துக்கு, ஓரளவு தான் முட்டுக் கொடுக்க முடியும்! சாக்கடையில், எத்தனை மல்லிப்பூ தான் கொட்டி, தீ மணத்தைக் குறைக்க முடியும்? இனியும் வேண்டாம், இந்த அவலம்!

எப்படி, உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் வைக்கத் துவங்கி விட்டீர்களோ,

போலவே, தமிழ் / தன்மானத் திருமண முறைக்கு மாறி விடுங்கள்!

தமிழ்த் திருமணம் செய்வது எப்படி? – மொழிஞாயிறு பாவாணரின் நூலில் காணுங்கள்!

அதையும் தன்மானத் (சுயமரியாதை) திருமணமாய்ச் செய்வது எப்படி? – பெரியாரின் நூலில் காணுங்கள்!

திருமணம் என்பது, நாம் காலமெல்லாம் அன்பு செலுத்தி வாழும் மானம்! அந்த மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை – பண்பும் பயனும் அது!

வள்ளுவமாம் திருக்குறள் ஓதி,

இயற்கை போற்றி,

மங்கல விளக்கு சூழ, மாலை தவழ,

சான்றோர் வாழ்த்தளிக்க,

அதையும் நமக்குப் புரியும் மொழியிலே வாழ்த்தளிக்க,

இருவருமே மணவுறுதிமொழி ஏற்க,

மாலை மாற்றி,

தாலியோடோ (அ) தாலி இல்லாமலோ,

தாலியோடு எனின், பெண்ணுக்கு மட்டுமில்லாமல், ஆணுக்கும் ஏதோவோர் அடையாளம் அளித்துச் சமன்மை பேணி,

மகிழ் திகழ் இல்லறம் போற்றுவோம்!

அதான், தன்மானத் திருமணத்துக்கு (சுயமரியாதைத் திருமணத்துக்கு), சட்ட இசைவு (அங்கீகாரம்) பெற்றுத் தந்து விட்டார்களே நம் பேரறிஞர் அண்ணாவும், பெரியாரும்? இன்னும் தயக்கம் ஏன்?

இத்தனையும் தரவு காட்டிச் சொன்னது எதற்காக? பார்ப்பனீயம், தங்களின் பொய்யை ஒப்புக் கொள்வார்கள் என்பதற்காகவா? அல்ல! தரவுகளால், பார்ப்பனீயம் திருந்தியதாய் வரலாறே இல்லை! நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் ஒரே வழி! இது இடைவிடாத போர்!

எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்

பரவிக் கொண்டே இருக்க வேண்டும்

மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்

நாம் எழுதா விட்டால் பார்ப்பான் எழுதி விடுவான் (பொய்) வரலாற்றை!

நாம் மாற்றா விட்டால் பார்ப்பான் மாற்றி விடுவான் Sentiment பீடித்த நம்மவரை!

நம்மவர்களை, நாம் மாற்றுவோம்! நீங்கள், உங்க சொந்தக்காரத் திருமணங்களுக்குச் செல்லும் போதெல்லாம்.. உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள இளம் நண்பரிடம் / தோழியிடம் பேச்சு கொடுங்கள்;

ஐயர் என்ன சொல்கிறார் தெரிகிறதா? என்று கேட்டு, இந்த “ஸோம பிரதமோ” ஊழலைச் சொல்லுங்கள், சற்று மென்மையாக!:) மணமக்களின் பெற்றோரைத் துன்புறுத்த வேண்டாம், பாவம் அவர்களுக்கே ஆயிரம் அல்லல் இருக்கும். சிரித்த முகத்துடன், அருகில் அமர்ந்திருக்கும் நட்பு/ சொந்தத்திடம் பேச்சுக் கொடுங்கள், இளவட்டப் பெண்கள்/ ஆண்களிடம்; ஓர் இளைஞர் மாறினால், ஒரு சமுதாயமே மாறிவிடும்!

யாரோ, யாரோடி, உன்னோட புருசன்?

ஸோமன், கந்தர்வன், அக்கினியா புருசன்?:)

வேண்டாம், வேண்டாம்டி, பெற்றோரே காவலன்

காதல், காதல் தான், காதலிக்குப் புருசன்!

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, நம் காரியம் யாவினும் கைக்கொடுத்து, “மானத் தமிழ்” மாண்புடன் வாழ்வமடி!

– கண்ணபிரான் ரவிசங்கர் (கரச)