காவியாவின் மாற்றம்

சாளரம் வழியே அசைகின்ற இலைகளைப் பார்த்துக்கொண்டே காவியா யோசித்துக் கொண்டிருந்தாள். எதைப்பற்றி என்று அவளுக்கே தெரியாது. இப்போதெல்லாம் அப்படித்தான். ஆழ்ந்த யோசனைக்கு அடிக்கடி போய்விடுகிறாள். சிணுங்கும் அலைப்பேசி ஒலி அவளின் ஆழ்ந்த யோசனையைக் கலைத்தது.
“ஏய்,காவியா ,இன்னைக்கு ஓய்வா இருந்தா வரியா?மேசிஸ் போகலாம்?” என்றாள் கீதா.
கீதா காவியாவின் அண்டைவீட்டுத் தோழி. திருமணமானவுடன் காவியாவின் கணவர் சந்தருவிற்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க இருவரும் இங்கே வந்து விட்டனர். வந்து 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. வந்த புதிதில் காவியாவிற்கு அனைத்துமே மலைப்பாக இருந்தன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, தான் வேலைக்குப் போக முடியவில்லையே என்ற எண்ணம் காவியாவை வாட்டியது. அப்போது தான் கீதா காவியாவிற்கு அறிமுகமானாள் .
கீதாவின் சொந்த ஊர் மதுரை. இங்கு தொழில்நுட்ப துறையில் வேலை. வேலைக் காரணமாக இங்கு வந்த ஓராண்டு ஆகிறது. கணவரும் அவளின் இரண்டு பெண் குழந்தைகளும் ஊரில் உள்ளனர். பிள்ளைகள் இருவருமே முறையே 9,8 ஆம் வகுப்பு. எனவே பிள்ளைகளின் படிப்பிற்கு இடையூறு ஏற்படுத்தாமல் அவர்களை ஊரிலேயே விட்டு வந்து விட்டாள். இன்னும் ஓராண்டு தானே இங்கு வேலை என பல்லைக் கடித்துக்கொண்டு இருப்பதாக காவியாவிடம் கூறுவாள்.
“ஏய் , என்ன ஆச்சு? போலாமா? என்ன யோசனை?” என்றாள் கீதா
நினைவிற்கு வந்தவளாய் ,” ஆங், ஒன்னும் இல்ல, போலாம் கீதா” என்றாள்
“சரி, பத்து நிமிடத்தில் கீழே காருக்கு வந்திடு ” என்று அழைப்பினை துண்டித்தாள் கீதா.
வேக வேகமாக முகம் கழுவி, உடை மாற்றி பின் கீழ் சென்றாள் காவியா.
“என்ன காவியா ? சோர்வா இருக்க?
“தெரில , காலையில் இருந்தே அப்படித்தான் இருக்கு”
“பீரியட்ஸ் வரப்போகுதா?”
காவியா சற்று நேரம் யோசித்துவிட்டு ,”இல்லையே, இன்னும் 15 நாளாவது இருக்கு” என்றாள்.
“போனில் கூட பதில் பேசாம , ஏதோ யோசிச்சிட்டு இருந்த”
காவியா எதுவும் சொல்லவில்லை. காரில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.
இருவரும் புறப்பட்டு மேசிஸ் சென்றார்கள். மேசிஸ் அமெரிக்காவில் பெரும் உடை அங்காடி. விழாக் காலங்களில் தள்ளுபடி விலையில் பல உடைகள் விற்பனைக்கு வரும்.
கீதாவும் , காவியாவும் உடைகளைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
காவியா இரண்டு டீ-ஷர்ட் எடுத்தாள் . கீதாவோ கடையையே அள்ளுவதுப்போல் நிறைய துணிகள் மகள்களுக்கு எடுத்திருந்தாள் .
“என்ன கீதா, இவ்ளோ எடுத்திருக்க? ஊருக்கு போறியா?”
“இல்லடா , அலுவலுக தோழர் ஒருத்தர் அடுத்த வாரம் மதுரை போறார். அவர்கிட்ட கொடுத்துவிடறதுக்கு தான்”
“சரி, நீ என்ன , ரெண்டு தான் எடுத்திருக்க, போதுமா?”
“எல்லாம் போதும்” என்றாள் சலிப்பாய்.
“சரி வா பில் போட்டுட்டு கிளம்பலாம்”
வெளியே வந்ததும் சாப்பிட போகலாமா என கீதா கேட்டாள் .
“எனக்கு பசிக்கவே இல்லை ”
“உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எதுலயும் பிடிப்பில்லாம இருக்க?”
“தெரில ”
“சரி வா ”
“என்ன கீதா வீட்டுக்கு போகலையா? இங்க எதுக்கு வந்திருக்கோம்? யாருக்கு என்ன பிரச்சனை”
“உனக்காகதான் , இங்க கவுன்சலிங் தருவாங்க , எங்கிட்ட தான் மனம்விட்டு சொல்ல மாட்ற, இவங்க கூட பேசு, உன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்”
“நான் வரல” என்றாள் காவியா கடுப்பாய்
“என்ன இது , சின்ன குழந்தை மாதிரி, இன்றைக்கு கவுன்சலிங் போறது பெரிய செய்தியே இல்ல. எங்க அலுவலுகத்துல கூட மாசம் ஒருமுறை எல்லோருக்கும் கவுன்சிலிங் தராங்க. நம்ம பிரச்னையை அவங்ககிட்ட சொல்லும் போது , எப்படி அதை சமாளிப்பது? என்ன தீர்வுன்னு சொல்லி நமக்கு நம்பிக்கை தருவாங்க. கண்டிப்பா உனக்கு இவங்க ஹெல்ப் பண்ணுவாங்க. அதனால அடம் பண்ணாம வா” என காவியாவை அழைத்துக் கொண்டு போனாள் கீதா.
“கவுன்சிலிங் கொடுக்கிறவங்க பேர் மிஸ்.ரானே . இவங்க என் அலுவலுகத்துக்கு வரவங்கதான். போய் உன் மனக்குறையை சொல்லு ”
“மே ஐ கம் இன்”
“யெஸ் ப்ளீஸ் , கம் இன் காவியா,டேக் யூர் சீட் ,டெல் மீ வாட்ஸ் யூர் பிரோப்ளேம்”
காவியா தன் மனக் குறையை சொன் னாள். அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு சில ஆலோசனைகளைக் கூறி இரண்டு வாரம் கழித்து காவியாவின் கணவரையும் கவுன்சிலிங்கிற்கு அழைத்து வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.
ஒருவாரம் கழித்து காலையில் கீதாவை காவியா அழைத்தாள்
“ஏய், என்ன செய்தி? காலைல கூப்பிட்டுருக்க”
“கீதா இன்னைக்கு , சாயந்திரம் பக்கத்துல இருக்குற உடற்பயற்சி கூடத்திற்கு போய் பதிவு பண்ணிட்டு வரலாமா?”
“என்ன சொல்ற? நீ நான் கூப்பிட்டா லும் வரமாட்டியே ?”
“அப்படியே நூலகத்துக்கும் போயிட்டு வந்துடலாம் ”
“அட அட இன்னைக்கு என்ன ஆச்சு? நான்தான் உன்ன எப்பவும் இங்க வா, அங்க வான்னு வேண்டி வேண்டி கூப்பிடனும், அப்ப கூட வேண்டா வெறுப்பா தான் வருவ , இப்ப இப்படி இந்த மாற்றம்?”
“எல்லாம் மிஸ்.ரானே கொடுத்த கவுன்சிலிங் தான் காரணம். எனக்கு அடிக்கடி சோர்வாக உள்ளது. எதற்குமே பயன்படாமல் இருப்பது போல இருக்கு. படிச்சிருந்தும் சம்பாதிக்க முடியலைன்னு ரொம்ப கோவமா இருக்கு. நம்மள பத்தி கவலபட யாருமே இல்லன்னு தோணுது. நாம எதுக்குமே லாயக்கு இல்லன்னு தோணுது. அந்த நினைப்பு அதிகமாகும் போதெல்லாம், நான் ஏதோ யோசனைக்கு போயிடுறேன்னு”, அவங்ககிட்ட சொன்னேன்.
“அவங்க காது கொடுத்து எல்லாத்தை யும் கேட்டுட்டு, உன் பிரச்சனை பல பெண்களுக்கு வருவது தான். குறிப்பா உங்க இந்தியப் பெண்கள் இந்த நாட்ல சம்பாதிக்க முடியாம வீட்லேயே முடங்கிப்போறாங்க .அந்த முடக்கம் அவங்கள மன அழுத்தத்துல தள்ளி , அதைக் கண்டுக்காம விட்டுட்டா மனச் சிதைவுக்கு போயிடுது. தங்களத்தானே தாழ்த்தி நினச்சு, பரிதாபப்பட்டு மனச கெடுத்துகிறாங்க. உன் சூழ்நிலை எனக்கு புரியுது. இங்க ஐடி படிச்சா சுலபமா வேலை கிடைக்கும், மற்ற படிப்புக்கு கிடக்கிறது அவளோ சுலபம் இல்ல. , அதனால முதல்ல வேலை கிடைக்க நீ உன்ன தயார் படுத்திக்கணும். அதுக்கு மனசு திண்மையா இருக்கணும். உனக்குன்னு நேரம் ஒதுக்கு , உடற் பயிற்சி செய், நல்ல இசை கேளு, ஆடப் பிடிக்கும்னா ஆடு, நல்ல நூல்கள் வாங்கி படி, உனக்கு இந்த ஊர் ஆங்கிலம் பேச கடினமா இருக்குன்னா அதற்கான பயிற்சி எடு. கடந்த காலத்துல எப்படி இருந்தோம்ன்னு நினைச்சு மனச அலட்டிக்கறதால ஒரு பயனும் இல்ல. எதிர்க்காலம் மாறலாம். மாறனும்னா நீ மாறனும். உன் மன- உடல் ஆரோக்கியத்த பாத்துக்கணும். வாழ்க்கை எப்பவுமே நமக்கு சாதகமா இருக்காது. நாம தான் எந்த சூழ்நிலைன்னாலும் பொறுமையா இருந்து நமக்கு வேண்டியதைச் சாதிக்கற வரை போராடனும். மகிழ்ச்சி எந்த தனி நபர் கிட்டையும் , பொருளிலோ இல்ல. உன்கிட்ட தான் இருக்கு. ஆங்கிலத்துல ஒரு பழமொழி இருக்கு “Even if you don’t feel good , get up and do your work, never give up”. மன உறுதியை மட்டும் விட்டுறாதன்னு நிறைய டிப்ஸ் கொடுத் தாங்க, அடுத்த வாரம் சந்துருவையும் அழைச்சிட்டு வரச்சொன்னாங்க.
“அப்பப்ப, இப்பத்தான் பழைய காவியா மாதிரி படபடன்னு பேசுற”
“உனக்கு தான் நன்றி சொல்லணும் கீதா”
“சரி சரி சாயந்தரம் பாக்கலாம்” என அழைப்பை துண்டித்தாள் கீதா.