கிளியோபாட்ரா எனும் அரசியல் ஆளுமை !

கிளியோபாட்ரா பல ஆயிரம் வருடங்களாக எழுத்தாளர் களுக்கும், கவிஞர்களுக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும், நாடக ஆசிரியர்களுக்கும்  கருப்பொருள். 69 BC-யில் பிறந்ததாக வரலாறு உரைக்கின்றது. கிளியோபாட்ராவின் உண்மை வாழ்க்கையைப்  பதிவு செய்ததை விட, தங்கள் கற்பனையைக் கொண்டு அவரை ஆண்களை -பெரும் அரசர்களை வளைத்துப் போட்ட ஒரு மாயக்காரியாகவே பலரும் அறிந்து வைத்து இருக்கின்றனர். ஒரு ஆண் அரசனாக இருந்து தன் நாட்டையும் – நாட்டு மக்களையும் காப்பாற்றச் செய்யும் மணங்களை ராஜதந்திரங்களாக செப்பிடும் வரலாறு, ஒரு பெண் அரசியாக தன் நாட்டை காப்பாற்ற எடுக்கும் முடிவுகளை – செய்யும் மணங்களை விமர்சித்து அவரை ஆண்களை மயக்கிடும் கீழ்மகளாக சித்தரிப்பதில், வரலாறும் ஆணாதிக்கப் பார்வை கொண்டே வரலாற்றைப் பதிகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கிளியோபாட்ராவை பற்றி வில்லியம் ஷேஸ்பியர் குறிப்பிடும் போது,

“Age cannot wither her, nor custom stale

Her infinite variety: other women cloy

The appetites they feed: but she makes hungry

Where most she satisfies” என்கிறார்

ஆம், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் கிளியோபாட்ரா உலக மாந்தர்களால் அழகி என்றே வர்ணிக்கப்படுகின்றார். அதில் உண்மை இருந்ததோ இல்லையோ ஆனால் கிளியோபாட்ரா பன்முகத் தன்மை வாய்ந்தவர். அவர் காலத்து அரசர்களை விட பெரும் ஆளுமையும், நிர்வாகத் திறனும் வாய்க்கப் பெற்றவர்.

கிளியோபாட்ரா எகிப்து நாட்டை ஆண்ட போதும் அவர் எகிப்தியர் அல்ல. அவர் மெசிடோனியா கிரேக்கர். (Macedonian Greek )

அலெக்சாண்டர் மறைவிற்கு பின் அவரின் தளபதிகள் அவர் வெற்றி பெற்ற நிலங்களைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டபோது, கிளியோபாட்ராவின் முன்னோர்கள் எகிப்தை ஆளும் அதிகாரம் பெற்றனர். அதில்

பிடோலேமி (Ptolemy) வம்ச மரபைச் சேர்ந்தவர் கிளியோபாட்ரா. கிளியோ பாட்ரா என்ற பெயரில் இவருக்கு முன் ஆறு அரசிகள் இருந்திருக் கின்றனர். இவர் கிளியோபாட்ரா VII (7); அலெக்சாண்டரின் சகோதரி பெயரும் கிளியோபாட்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

கிளியோபாட்ரா தலைசிறந்த அரசியல் நிபுணர், ஆட்சியாளர், பேச்சாளர். கிளியோ பாட்ராவின் ஆட்சியில் எகிப்து முழுவதும் மற்றும் கிழக்கு மத்திய கடற்கரை முழுவதும் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது.

அதுமட்டும் அல்ல, அவர் சிறந்த படிப்பாளி. இலக்கியம், வரலாறு, மதம், தத்துவம் என அனைத்து துறைகளையும் கற்று அறிந்தவர். மேடைப்பேச்சு, கணக்கு, இசை, வானவியல், வடிவியல் என அனைத்து துறையிலும் அறிவு பெற்றிருந்தார். அவர் தன் மொழியான கிரேக்கம் தவிர்த்து, எட்டு மொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர். அதில் ஹிபிரயு (hebrew )லத்தீன், பாரத்தியன், எகிப்து மொழிகளும் அடங்கும்.  தன் ஆழந்த அறிவை தன் மக்களுக்கு நல்லாட்சி தந்திட பயன் படுத்தியவர் கிளியோபாட்ரா எனில் அது மிகையல்ல.

தன்னுடைய தந்தைக்கு பின் ஆட்சி பொறுப்பு கிளியோபாட்ராவிடம் வரும் போது அவருக்கு வயது 18. அன்றைய காலகட்டத்தில் பெண்கள் அரசியலில் பெரிதும் ஈடுபடாமல் இந்த வயதில் திருமணம் முடிந்து பல குழந்தைகளைப் பெற்று அவர்களோடு போராடிக் கொண்டிருப்பர். அப்படி ஒரு சூழலில்,  எகிப்து அரசியாக கிளியோபாட்ரா முடிசூடிக்கொள்கின்றார். எண்ணிப் பார்க்கவே வியப்பாக உள்ளதல்லவா?

அன்றைய நாளில் எகிப்திய வழக்கப்படி பெண் அரசியானாள்,  அவள் ஒரு ஆண் குடும்ப உறுப்பினருடன் தான் ஆட்சி செய்ய இயலும். அதனால் தன் தம்பியான, படோலேமியுடன்  (ptolemy XIII -13) ஆட்சி கட்டிலில் அமர்கிறார். பின் அவரை திருமண செய்தும் கொள்கின்றார் அன்றைய நாளில் எகிப்து அரசாட்சியில் (படோலேமிஸ் இடையே) இந்த திருமணங்கள் மிகச் சாதாரணமாக நடந்தன. சிங்கள வரலாற்றை படிக்கின்ற போதும் இது போன்ற சகோதர -சகோதிரி திருமணங்களை அரசியல் காரணங்களுக்காக நடந்துள்ளதை நாம் அறிய முடியும். இவர் அரசியாக ஆட்சி செய்தபோது பல முடிவுகளை அவரின் ஆண் ஆலோசகர்களை, அமைச்சர்களை கலந்து கொள்ளாமல் எடுத்தது  அவரின் அமைச்சர்களுக்கு எரிச்சல் ஊட்டியது. அதனால் அவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு அவரின் தம்பியும் கணவனுமான ptolemy XIII -ஐ  அரசானாக்க முயன்றனர். இதனால் கிளியோபாட்ரா தன் சகோதரி அரசினோவுடன்  (Arsinoe )தப்பிச்சென்று எப்படி ஆட்சியை கைப்பற்றுவது என சிந்தித்தார். அப்போது தான் ஜூலிஸ் சீசரின் ஆதரவு அவருக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. எப்படி அவரை சந்திப்பது என்று நினைத்தவருக்கு அருமையான யோசனை தோன்றியது. தன் வேலையாள் மூலம் ஒரு பெரிய கோணிப்பையில் (துணிகள் வைக்கும் பை) தன்னை அடைத்து ஜூலிஸ் சீசர் தங்கி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சொன்னார். கிளியோபாட்ரா அந்த பையில் இருந்து வெளிவந்து ஜூலிஸ் சீசரிடம் உதவி கோரிய அந்த நொடியே சீசரின் மனதில் இடம் பெற்றுவிட்டார். அதன் பின் தன் சகோதரனை சீசரின் உதவியோடு கொன்று , அரசாட்சியை தன்வயப்படுத்தினார். சீஸருக்கும் இவருக்கும் ஏற்பட்ட உறவில் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். இந்த உறவை ரோமானியர்கள் விரும்பவில்லை. ஆனால் கிளியோபாட்ரா சீசருக்கு போர்க்கப்பல்கள், சிப்பாய்களை வழங்கினார். அதற்கு ஈடாக ஜூலிஸ் சீசர் எகிப்தை தனி அரசாகவே வைத்திருந்தார். அதற்கு காரணம் கிளியோபாட்ராவின் சாதுரியம் தான்.

கிளியோபாட்ரா ஆட்சிக்கு வரும்போது ரோமானிய அரசு ஐரோப்பாவின் பல பகுதிகளையும், வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளையும் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்திருந்தது. ரோமானிய பேரரசு எகிப்தை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வருவதை தடுக்கவே கிளியோபாட்ரா முயன்றார். அந்த முயற்சியின் ஒரு பகுதி தான் ஜூலிஸ் சீஸருடன் உறவும் – குழந்தையும்.  வரலாற்றை எந்த முன்முடிவுகளோடும் அணுகாமல் விருப்பு வெறுப்பு இன்றி ஆணாதிக்கச் சிந்தனையை ஒதுக்கி விட்டு படித்தால் தான் கிளியோபாட்ராவின் இந்த அணுகுமுறையை ராஜதந்திரம் என உணரமுடியும். 44 BC யில் தன் எதிரிகளால் ஜூலிஸ் சீசர் ரோம் நகரத்தில் கொல்லப்பட்டபோது, தன் மகனுடன் மீண்டும் எகிப்து திரும்பினார் கிளியோபாட்ரா.

அதன் பின் ரோமில் ஆட்சி ஆக்டாவியன் மற்றும் மார்க் அந்தோணி இருவரிடம் சென்றது. இவர்கள் மூலம் எகிப்து அவர்களுக்கு சரண் அடைந்து விடக்கூடாது என்று நினைத்த கிளியோபாட்ரா  மார்க் அந்தோணியோடு கூட்டுச் சேர்ந்தார்.  அவரை சந்திக்க தங்க கப்பலில் இசை வல்லுனர்களுடன், சென்றார். அவரின் மிடுக்கான தோற்றம் , இனிய இசை , மார்க் அந்தோணியிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர்களுக்குள் ஏற்பட்ட உறவு அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ந்தது. மார்க் அந்தோணி மூலம் மூன்று குழந்தைகளுக்கு தாயானார் கிளியோபாட்ரா. மார்க் அந்தோணியும் பெரும்பாலான நேரத்தை போர் செய்வதில் செலவிடாமல் அலெக்ஸாண்ட்ரியாவில் கிளியோபாட்ராவோடு செலவழித்தது ரோமானியர்களுக்கு எரிச்சலை தந்தது. இதனை ஆக்டாவியன் கடுமையாக விமர்சித்தான். இருவருக்கும் Actium (இன்றைய கிரீஸ்) போர் நடந்தது. இதில் கிளியோபாட்ரா இறந்து விட்டதாக நினைத்து மார்க் தற்கொலை செய்து கொள்ள, தான் சிறை பிடிக்கப்பட்டு ரோமிற்கு அழைத்துச் செல்லப்படுவதை விரும்பாத கிளியோபாட்ரா பாம்பினை கடிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகின்றது.

ஏன் அவர் தற்கொலை செய்து கொண்டார் ?என்பதற்கு வரலாற்று ஆசிரியர்கள் கூறும் காரணம் ; ஒன்று மார்க்கின் மரணம் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ; இரண்டாவது எகிப்து அடிமையாகி அவர் அடிமையாக ரோமானியத்திற்கு அழைத்துச்செல்லப்படுவதை அவர் விரும்பவில்லை என்பது தான் .

கிளியோபாட்ரா இறக்கும் போது அவருக்கு 39 வயது. 18 ஆம் வயதில் ஆட்சி பொறுப்பில் ஏறி பல்வேறு போராட்டங்களுக்கிடையே ஆட்சி செய்த கிளியோபாட்ராவின் வாழ்க்கை முடிவிற்கு வந்தது.

Stacy Schiff கிளியோபாட்ரா – வாழ்க்கை பற்றி எழுதிய நூல் 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த நூலில் தான் ஸ்டேசி ஸ்கிஃப் கிளியோபாட்ராவைச் சுற்றி கட்டப்பட்டுள்ள பொய்த்திரைகளை விலக்கி அவரின் அரசியல் திறனை எடுத்து எழுதி இருப்பார். கிளியோபாட்ரா ஆட்சிக்கு வரும் போது எகிப்தின் பொருளாதார நிலை கடுமையான வீழ்ச்சியில் இருந்தது ; நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது; இவரின் 22 ஆண்டு கால ஆட்சி முழுவதும் பண மதிப்பை கட்டுக்குள் வைத்திருந்தவர் கிளியோபாட்ரா. இவருக்கு முன்னிருந்த ஆட்சியாளர்கள் கிரேக்க வழி வந்த காரணத்தினால் அவர்களுக்கு எகிப்திய மொழியும் தெரியாது, அந்த மக்களின் பிரச்சனைகளும் புரியாது. ஆனால் கிளியோபாட்ரா தான் முதன் முதலில் அந்த மக்களின் மொழியை கற்று, அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வும் தேடினார். தங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ரோமானிய பேரரசை கட்டுக்குள் வைத்திருந்தார். கலைகள் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கலைகளை வளர்த்தார். எகிப்திய மக்களின் பெண் தெய்வமான Isis போல் உடை உடுத்தி மக்களை கவரும் வித்தையும் கற்றுவைத்திருந்தார். பலர் அறியாத செய்தி கிளியோபாட்ரா எழுத்தாளராக எழுதிய ஒரு நூல். அழகு குறிப்புகள் கொண்ட அந்த நூலில் தலை முடி உதிர்வை தவிர்ப்பது மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை என்று பல குறிப்புகள் உண்டு.

– வழக்கறிஞர் ம.வீ. கனிமொழி