குரல் அல்ல குமுறல் !

ற்போது சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பெரிதும் பேசப்படும் சமூக சிக்கல் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் சீண்டல்களும்! கடந்த காலங்களில் தங்கள் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்காளான பெண்கள், தற்போது துணிவோடு முன்வந்து #MeToo மூலம், தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களை உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார்கள். அந்த ஆண்கள் தற்போது சமூகத்தில் பதவி அந்தஸ்து அதிகாரம் பெற்று விளங்கினாலும் அவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்கள்.
#MeToo என்பதை பலரும் பலவாறு அவரவர் எண்ணப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள். பெருவாரியான மக்கள் ஒருவாறும்,  இதன் தேவையை உணர்ந்தவர்கள் ஒருவாறும் புரிந்து வைத்திருக்கிறார்கள். எந்தவொரு முற்போக்கு கருத்துக்கும் பெருவாரியான மக்கள் எப்படி தங்கள்  நம்பிக்கை  சார்ந்து  பழக்க வழக்கம் சார்ந்து  நியாய அநியாயங்களை சீர்தூக்கி பார்க்காமல் எதிர்பார்ப்பார்களோ அவ்வாறு #MeToo விடயத்திலும் காணலாம்.
பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, கொலை செய்யப்பட்ட செய்திகள் வரும்போதெல்லாம் வன்புணர்ந்த மிருகத்தை கொல், தூக்கிலிடு, அந்த ஆணின் உறுப்பை துண்டி என்று கொதித்தவர்கள் தற்போது அதற்கு நேர் எதிராக செயல்படுகிறார்கள்.
அடித்தட்டு மக்களை அழைத்து அவர்களின் வீட்டு பிரச்சனையை பொதுவெளியில் பேசி நிகழ்ச்சி நடத்திய போது மேல்தட்டு மக்களை வைத்து இதுபோல் கேள்வி எழுப்புவார்களா? நிகழ்ச்சி நடத்துவார்களா? அந்தத் துணிவு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியவர்கள் #MeTooவில் அப்படிப்பட்ட மேல்தட்டு மக்களிடையே நடந்த பாலியல் சீண்டல் பற்றி பேசினால் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகிறார்களே, ஏன்?
பெருகி வரும் பாலியல் வன்புணர்வு குற்றங்களைக் கண்டு, பசுக்கள் எல்லாம் இந்திய நாட்டில் பாதுகாப்பாய் உள்ளது. பெண்களுக்கு பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட இல்லை. பெண்கள் பாதுகாப்பாய் இருக்க அவர்கள் பசுவைப்போல் முகமூடி அணிந்து சென்றால் தான் உண்டு என்று கேலி சித்திரம் தீட்டி அறச்சீற்றம் அடைந்தவர்கள் #MeTooவை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது வேதனைக்குரியதாய் உள்ளது.
சிலர், குற்றம் சாட்டிய பெண்களின் தொழிலை சமூக பின்புலத்தை காரணம் காட்டி #MeTooவை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
சிலர், #MeTooவை  முன்னெடுப்பவர்கள் அரசியல் காய் நகர்வுக்காக முன்னெடுக்கிறார்கள் என்கிறார்கள். மத சாயம் பூசுகிறார்கள். சாதி சாயம் பூசுகிறார்கள்.
சிலர், குற்றம்சாற்றப்பட்டவர்கள் தங்களின் மனம் தொட்டக் கலைஞர்கள் என்பதால்  எதிர்க்கிறார்கள்.
சிலர், #MeToo என்பது என்ன மாதிரியான தண்டனையை பாலியல் சீண்டல் செய்த அந்த ஆணுக்கு பெற்றுத்தரும் என்று கேட்கிறார்கள்.
சிலரோ ஏன் இத்தனை காலம் கடந்து இந்தப் பெண்கள் எல்லாம் இப்படிச்  சொல்கிறார்கள் இவர்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கலாம் என்கிறார்கள்.
சம்பவம் நடந்தபோது ஏன் கத்தி ஊரை கூட்டவில்லை என்று கேட்பவர்கள் யாரும் கண்ணகியைப் பார்த்து நீ ஏன் உன் கணவன் கோவலனை அவன் மாதவி வீட்டுக்கு சென்ற போதே தடுக்கவில்லை என்று கேட்பதில்லை. அவ்வாறு  ஊர் திரிந்த கணவனை, மீண்டும் ஏற்று நீதி காக்க மன்னவனையே எதிர்த்ததால் மட்டுமே கண்ணகிக்கு பத்தினி பட்டம் கொடுத்து இருக்கிறார்கள் போலும்,  வீட்டிற்கு சென்ற கணவனை மன்னவனிடம் முறையிட்டு இருந்தால் தண்டனை வழங்கி இருந்தால் கண்ணகிக்கு கதை வடித்திருப்பார்களா?
இந்தக் கேள்விக்கு பின்னால் எல்லாம் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி ஆராய்வதை விட இதில் ஏன் இவர்கள் இப்படி பதறுகிறார்கள்? எதற்காக கேலி செய்கிறார்கள்? ஏன் கொச்சையாய் பேசுகிறார்கள் ? ஏன் அப்படியாமே என்று சிலாகித்து சிரிக்கிறார்கள்? என்பதைத்தான் ஆராய வேண்டும்.
உழைக்கும்  நடுத்தர மற்றும் அடித்தட்டு பெண்களுக்காக உருகியதாக காட்டிக் கொண்ட சமூகம், #MeToo திரைத்துறையில் இருந்து எழுந்த குரல் என்பதாலேயே ஏளனமாய் பார்க்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. காலங்காலமாக நாம் ஆடல் மகளிரை எப்படி நடத்திருக்கிறோம் பழித்திருக்கிறோம் என்பதில் இருந்து இந்த மனநிலை தொடங்குகிறது. ஒரு பெண் வெற்றியடைந்தால், அவள் எப்படி அந்த இடத்தை அடைந்தாள் தெரியுமா என்று கேட்டு நகைப்பது பரவலாக இருக்கிறது. திரைத்துறையில் இருக்கும் நீ பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றிப் பேசத் தகுதியற்றவள் என்று நினைக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.
இவ்வாறு கருதுபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் பதவி என்று பலவும் பெற்று இருப்பவர்களையே, ஆண்டாண்டு காலமாய் தங்களால் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த பெண்கள் கை நீட்டி குற்றம் சாட்டுகிறார்களே, தாங்கள் தங்கள் வாழ்வில் செய்த தவறுகளை எங்கே தங்களை சுற்றியுள்ள தங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியிட்டு விடுவார்களோ என்ற அச்சமாக இருக் கலாம்.
சிலர் #MeToo என்று வெறுமனே அவதூறு பரப்புகிறீர்களே ஆதாரம் இருந்தால் வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தாருங்கள் என்று சவால் விடுகிறார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும் இந்த சீண்டல்களுக்கு எல்லாம் பல நேரங்களில் சாட்சிகளே இருக்காது. அவ்வாறு சாட்சிகள்  இல்லாத போது தான் ஆண்கள் இதை நடத்துகிறார்கள். அப்படி மீறி சாட்சிகள் இருந்தால் தங்கள் அதிகாரத்தை பலத்தைப் பயன்படுத்தி கலைத்து விடுவார்கள்.
சாட்சிகள் இல்லை என்பதால் நீதிமன்றம் கேட்கும் தரவுகளைத் தர முடியாது என்பதால் குற்றமே நடக்கவில்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? சாட்சிகள் இல்லாமல் இது போன்றக் குற்றங்களில் ஈடுபடுவதில் ஆண்கள் கைதேர்ந்தவர் களாக இருக்கிறார்களே.
#MeToo தண்டனை வாங்கி தராது, வழக்கும் நீதிமன்றமும் மட்டுமே ஒருவருக்கு தண்டனையை பெற்றுத் தரும். அப்போது #MeToo என்பது வீணா என்கிற பெரிய கேள்வி எழுகிறது. இல்லை. #MeToo வீணல்ல! அது ஒரு பெண் தனக்கு நடந்த அநியாயத்தை ஊரறிய முறையிடுவது. தனக்கு நடந்த கொடுமையை தனக்குள்ளேயே புதைத்து இத்தனை ஆண்டுகளாய் வாழ்ந்தவள் அதனை வெளியிட்டு ஆறுதல் தேட முயல்கிறாள். நடந்த அநியாயத்திற்கு நீதி தேட முயலுகிறாள்.  தன் போன்று மற்ற பெண்கள் பாதிப்படையாமல் இருக்க வைக்க முனைகிறாள். ஆனால் வழமைபோல் இந்த ஆண் ஆதிக்க சமூகம் தட்டிக்கழிக்கப் பார்க்கிறது. அவளது குரல்வளையை நசுக்கப் பார்க்கிறது.
ஒரு மேம்பாடடைந்த சமூகம் அந்த பெண் யார்? எப்படிப்பட்டவர்? என்ன சமூக பின்புலம் கொண்டவர்? என்ன துறையில் இருக்கிறார்? அவளின் மதநம்பிக்கை என்ன? அரசியல் நிலைப்பாடு என்ன? என்பதை பற்றி எல்லாம் ஆராயாமல் அவள் சொல்லும் குற்றம் நடந்ததா? என்பதை மட்டும் ஆராய முனைய வேண்டும். அதற்கு அவளுக்குத் துணை நிற்க வேண்டும். அரசு முன்வந்து புலனாய்வு செய்து உண்மையை அறிவிக்க வேண்டிய அவசியம் பற்றி பேச வேண்டும். வளர் இளம் பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள ஏதுவான அமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றி பேச வேண்டும். #MeToo நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ஆண்களில் பலர் பாலியல் சீண்டல் என்றால் என்ன? பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? என்பதை அறியாமல் இருக்கிறார்கள். அனைத்தையும் பாலியல் வன்புணர்வு குற்றமாகவே கருதுகிறார்கள். பாலியல் சீண்டலும் பாலியல் வன்புணர்வும் ஒன்றாகாது. அந்த எளிய புரிதலும் பலருக்கு இங்கு இல்லை என்பது வருந்தத்தக்கது. அந்தப் புரிதல் இந்த  #MeToo மூலம் கொண்டுவர முயலலாம். பணியிடங்களில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க சட்டங்கள் இருந்தாலும்  நடைமுறையில் இருக்கிறதா என்பது கேள்வியாகிறது. பணியிடங்களில் நடைபெறும் பாலியல் சீண்டல்களை எப்படி அணுகுவது என்பது பற்றி மக்களிடையே பேசலாம்.
பெண்கள் யாவரும் கல்விக்காவும் பொருளீட்டவும் வெளியில் செல்வது பெருகி வரும் இக்காலத்தில் ஆண்களால் ஆண்களுக்காக கட்டமைக்கப்பட்ட இச்சமூகத்தை  பெண்கள் தங்களின் முழு உரிமையோடும் பாதுகாப்போடும் வாழ ஏதுவான சமூகமாக மாற்றியமைக்க வேண்டும்.
#MeToo பெண்களின் குரல் அல்ல, குமுறல்! அதனை வெளியிட தடுப்பதும், காரணங்களை அடுக்கி வீழ்த்துவதும், வசவு வார்த்தைகள் சொல்லி நகைப்பதும், நாம் எப்படிப்பட்ட பண்பட்டவர்களாக வளர்ந்திருக்கிறோம். எப்படிப்பட்ட பண்பட்ட சமூகத்தை நம் பிள்ளைகளுக்கு கையளிக்கப் போகிறோம் என்பதை காட்டுகிறது. #MeToo எதிர்பார்ப்பது சமூகத்தின் காதுகளைத்தானே தவிர, வசவுகள் நிரம்பிய வாய்களை அல்ல!