சமத்துவ நாயகன்

கலைஞர் அவர்களின் சமூக நீதிக்கான பங்களிப்பின் சான்று – சமத்துவபுரம் திட்டம் .   கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் சாதனைகளாக பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படப்பட்டிருந்தாலும் சமத்துவபுரம் உருவாக்குவதற்கான காரணங்கள், கலைஞர் அவர்களின் மதிநுட்பத்துக்கும், நிர்வாகத்திறனுக்கும், தொலைநோக்கப்    பார்வைக்கும் , பற்றி எரியும்   ஒரு பிரச்சனையை ஒரு அரசு எப்படி அணுகி தீர்வு தந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வாய்ப்பாகவும் இருக்கிறது.  சமூக நீதிக்கான போராளியாகவே  ஆட்சியில் இருந்தபோதும் இல்லாத போதும் அவர் இருந்திருக்கிறார்.கொள்கைகளில் எந்த அளவுக்கு அவர் உறுதியாக இருந்தார் என்பதற்கு முன்னுதாரணமாய்  பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் உள்ளது.சாதி பிரிவினை காலங்காலமாக இருந்து , அக்ரகாரம் ,    ஊர் , சேரி , ஒவ்வொரு  சாதிக்குமான தெருக்கள்  என கிராமங்கள் இருப்பிட வாரியாக பிரிந்து கிடக்கையில் இந்தியாவில் எந்தத் தலைவரும்  யோசனைக்கூட செய்யாத திட்டமாக அனைவரும் ஓரிடத்தில் வாழ சமத்துவபுரத்தை முன்வைக்கிறார் கலைஞர். அதுவும் எப்போது? தென் மாவட்டங்களில் சாதி கலவரங்கள் கொழுந்து விட்டு எரியும் சமயத்தில் அதற்கு தீர்வாக வைக்கிறார். அவர்  வைத்த தீர்வு  இருநூறுக்கும்   மேலான சமத்துவபுரங்களாய், சமூக நீதிக்கும், சாதி ஒழிப்பிற்குமான  கலைஞர் அவர்களின் அர்ப் பணிப்பை   பறைசாற்றும் விதமாக இன்றளவும் இருக்கிறது. இந்த திட்டம் உருவான போது இருந்த கள நிலவரத்தை விரிவாக பார்ப்பது, எந்த சூழ்நிலை யிலும் சமூக நீதி என்பதில் இருந்து கலைஞர்   பின்வாங்கவில்லை என்பதை உணர்வதற்கு எளிதாக இருக்கும் . 1967 திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தபின் மெட்ராஸ் என்பது தமிழ்நாடாக பெயர் மாற்றம் செய்யப்படுகிறது . பின்  தமிழர் , அவர்தம் வரலாறு   இதனை தொடர்ந்து வலியுறுத்த  எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் என்ற முழக்கத்துடன்  கழக ஆட்சி பல்வேறு  பெயர் மாற்றங்களை முன்னெடுக்கிறது, சேர, சோழ, பாண்டிய போக்குவரத்துக் கழகங்கள் என்று பேருந்துகள் மன்னர் பெயர்களில் போக்குவரத்துக்கழகங்கள் என்று மாறியதை   உதாரணமாய் சொல்லலாம். பின் 1977 இல்  எம்ஜிஆர்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் ஆட்சியில் தமிழர் அடையாள பெயர்கள் என்றிலிருந்து தலைவர்களின் பெயர்களாக, பல்கலைக்கழகங்கள், மாவட்டங்கள் மாறுகின்றன. திண்டுக்கல் அண்ணா மாவட்டமாகவும், ஈரோடு பெரியார் மாவட்டமாகவும், திருச்சி, கோவை பல்கலைக்கழகங்கள், பாரதிதாசன், பாரதியார் என உருமாறி  பெயர் மாற்றம் தொடர்கிறது . தலைவர்கள் பெயர்களில் இருந்து தனிமனிதர் பெயராக எம்ஜிஆர் அவர்களின் அம்மா சத்யா பெயரில் போக்கு வரத்துக்கு கழகம் தொடங்க முன்னெடுப்புகள் நடக்கும்போது இது விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. பின்  இந்த பெயர் மாற்றங்கள் எதற்காக  தொடங்கின என்பதில் இருந்து விலகி, மாற்றம் பெற்று  சாதி  பெயர்களாக, வோட்டு அரசியிலை குறி வைத்து மாறுகிறது , ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் ஆட்சியில் , திருச்சி பிரிக்கப்பட்டு முத்தரையர் மாவட்ட மாகவும், விழுப்புரம் ராமசாமி படையாச்சி யாகவும் பெயர் மாற்றம் கொள்கிறது. பின் அந்த போக்கு , பேருந்துகளுக்கும் வந்து     அழகு முத்து கோண் போக்குவரத்துக்கழகம் தொடங்கப்படுகிறது . இப்படிப்  போகையில் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகத்தை ஜெயலலிதா அறிவிக்கிறார். அப்போது  தேர்தல் நேரம் அவரால் அதனை அறிவிப்பாக செய்ய முடிந்ததே தவிர செயல்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கலைஞர் அவர்கள் ஆட்சியில் அமர, ஏற்கனவே அறிவித்த  இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்து கிறார். வெடிக்கிறது தென் மாவட்டங்களில் கலவரம், மாற்றுச்   சாதி அதுவும் தான் கீழாக நோக்கும் சாதி, அந்த சாதியை சேர்ந்த ஒருவரின் பெயரில் இருக்கும் பேருந்துகளுக்கு நான் போவதா என்ற எரியூட்டப்பட்ட  ஆதிக்க வெறி பேருந்துகளை எரிக்க வைக்கிறது. சாதி கலவரங்கள் தேனீ, விழுப்புரம் மாவட்டங்களில் பரவுகிறது, இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட  இரு தரப்பு சாதிகள், பிரச்சனையை மேலும் பெரிதாக்கும் வண்ணம்   இமானுவேல் போக்குவரத்து கழகம் , புலித்தேவன் போக்குவரத்துக்கழகம் வேண்டும்  என்று அரசை நிர்பந்திக்கின்றன . இந்த சிக்கலான சூழ்நிலையில்  இதனை முடிவுக்கு கொண்டுவர  , மதிநுட்பத்துடன், கலைஞர் ஒரே நாளில்  பத்தொன்பது மாவட்டங்களின் பெயர்களையும், இருபத்தி ஒன்று போக்குவரத்துக்கழகங்களின் பெயர்களையும் அதிரடியாக சாதி அடையாளம் , கட்சி அடையாளம் இல்லாமல்   மாற்றுகிறார்.   இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பினாலும் அவரின் உறுதியில் இருந்து பின் வாங்கவில்லை . கலவரம் முடிவுக்கு வருகிறது , பிரச்சனை முடிந்தது என்று அப்படியே விட்டு இருந்தால் இது ஒரு சம்பவமாகத்தான் இருக்கும், ஆனால்   ஒரு சம்பவத்தை வரலாறாக மாற்ற  கலைஞரை போன்ற  தலைவர்களால்  தான் முடியும் . கலவரம் அடங்கினாலும் , பதட்டத்தை  தணிக்கவும், சாதி போக்கு ஒழியவும், கலைஞர் அவர்கள் முன் வைத்த மகத்தான திட்டம்தான் சமதுவுப்புரம் .  அவர்  இந்த திட்டத்தை முன்வைத்தபோது  அவரைத் தவிர அனைவராலும் காகிதத்தில் நன்றாக உள்ளது,  ஆனால் நடைமுறை சாத்தியம் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது .   ஓரே ஆண்டில் அதற்கு செயல் வடிவம் கொடுத்தார் கலைஞர். ஏனோதானோ  என்று அவசரகதி யில் இவர் இந்த திட்டத்தை முன்வைக்கவில்லை, எவ்வளவு விரிவாக திட்டம் தீட்டியிருக்கிறார் என்று பார்த்தால் வியப்பாக உள்ளது.  இந்த திட்டத்தின் பெயரையே பார்ப்போம் – சாதி பிரிவினையே ஒழிக்க வேண்டும் என்பது  இந்த திட்டத்தின் நோக்கம், இதற்கு சாதி ஒழிப்பிற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட  பெரியாரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் திட்டத்தின் பெயர்   “பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் “சமதுவுப்புரத்தில் 1. அனைத்து சாதிகளுக்கும் சமஉரிமை2. அனைவரும், விழாக்களையும், திருமணங்களையும் நடத்துவதற்கு ஒரே  மண்டபம்.3 . அனைத்து சாதிக்கும் ஒரு மயானம்தான்.4. சாதித்தலைவர்களின் சிலைகள் கூடாது5. ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 100  வீடுகள் இருக்கும் .அந்த நூறு வீடுகளுக்கும் வரைமுறையும் வகுத்துள்ளார்6. 40 % தலித்துகளுக்கு7. 25 % பிற்படுத்தப்பட்டோருக்கு8. 25 % மிகவும்  பிற்படுத்தப்பட்டோருக்கு9. 10 % மற்றவர்க்கு இந்த விதிகளை மீறுபவர்களுக்கு , சமத்துவபுரத்தில் இடம் கிடையாது , வெளியேற வேண்டும். இதில் அதற்கும் மேல் என்னும் சொல்லும்படியாக இன்னொரு விதியையும் வைத்திருக்கிறார் , அதுதான் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு , இத்தனை விரிவாக   ஒரு திட்டத்தை  எந்த தலைவரும் மக்களுக்காக செய்தார்களா என்பது சந்தேகமே . 145  சமத்துவபுரங்கள் 1997 முதல் 2001 வரையிலான கலைஞரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டன . தேர்தல் வர ஆட்சி மாறுகிறது , ஜெயலலிதா இந்த திட்டத்தை முடக்குகிறார். இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம், தோழர் ஆளூர்  ஷா நவாஸ் அவர்கள் முன்வைக்கும் கோணம், கலைஞர் அறிவித்த அனைத்து திட்டங்களையும் ஜெயலலிதா அவர்கள் முடக்கவில்லை, அவர் தினமும் சென்று வந்த பாலம் கலைஞர் கட்டியதுதான் அதனை அவர் முடக்கவில்லை, எந்த எந்த திட்டங்களை முடக்குகிறார்?  சமத்துவ புரத்தை, சமச்சீர்கல்வியை, அண்ணா நூலகத்தை முடக்குகிறார். எங்கெல்லாம் சமூக நீதிக்கென திட்டம் வகுக்கப்பட்டதோ,  அந்த திட்டங்களை அவர் முடக்கியிருக்கிறார். இந்தப் போக்கினை இனப்பகையின் நீட்சியாகவே நாம் காண வேண்டும் . அவர் தொடங்கியதை இவர் எதிர்த்தார் என்று நாம் இதனை காண இயலாது, பின் 2008 ஆட்சிக்கு வந்த கலைஞர் சமத்துவபுரத்தை மீண்டும் முன்னெடுக்கிறார். 95  சமத்துவுப் புரங்கள் தொடங்கப்படும் என்றும் அறிவிக் கிறார்.  ஏன்   குறிப்பாக  95 ?  பெரியாரின் பெயரை திட்டத்திற்கு  வைத்த கலைஞர் ,  பெரியார் வாழ்ந்த ஆண்டுகளான 95  ஐ  நினைவுப்படுத்தும் வண்ணம் 95  சமத்துவுப்புரங்களை அறிவித்து, அறிவித்த தோடு   நில்லாமல்  தனது  ஆட்சி காலத்தில் அமைத்தும் வைக்கிறார்.கலைஞர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து சொன்னது ,  “இந்த சமத்துவபுரங்கள், தமிழ்நாட்டை ஒரு பெரிய சமத்துவபுரமாக மாற்றும் , நாடு முழுவதும் மாற்றம் உண்டாக இது முன்னோடியாக இருக்கும்“. அவரின் கனவு நினைவாவதற்கு நடைமுறை சிக்கல்கள் உள்ளன , ஏனெனில் இன்றும்  பரவலாக மனிதர் நெருங்கினாலும், மனம் நெருங்காமல் இருக்கிறது . மனங்களை நெருங்க வைக்க திராவிடக் கொள்கை  பெரியார் , அண்ணா , கலைஞர் வழியில்   சமத்துவத்துக்கும் , சமூகநீதிக்கும்  தொடர்ந்து பயணிக்கும். – வினோத்சந்தர்