செவ்விய தலித் பெண் என்பவள் யார்?

ஒடுக்குபவர்களையும் ஒடுக்கப் படுபவர்களையும் உள்ளடக்கிய கூட்டு நலம் என்பது அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களை ஒரு கருத்தாக்கமாய் கருதாமல் மனிதர்களாய் கருதும்போதே நடைபெறுகிறது. அதிலும் அவர்கள் இதுவரை அநீதி இழைக்கப்பட்ட, தனது வேலைக்கு தகுந்த கூலி தரப்படாத, குரல்கள் ஒடுக்கப்பட்டே இருந்திருக்கிறார் கள். ஒடுக்குபவர்கள் – விசுவாசமான, உணர்வுப்பூர்வமான அன்பார்ந்த செயல்கள் செய்யத் துணியவேண்டும். அத்தகைய அன்பார்ந்த செயல்களின் வீச்சு என்றைக்குமாய் நிலைபெறும்போது தான், உண்மையான ஒற்றுமை சாத்தியப்படும். ஒடுக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் மனிதர்களே என்றும், மனிதர்கள் அனைவரும் சுதந்திரமானவர் கள் என்று அறிந்தே அதனை உறுதிப்படுத்த நிஜத்தில் எதுவும் செய்யாமல் இருப்பது ஒரு கேலிக்கூத்தாகவே இருக்கும்.
-பாவ்லோ பிரைரே.
பல விஷயங்களின் ஊடாட்டம் என்பது அழகானது என்றே நினைக் கிறேன். மற்றவர்களின் பார்வையிலிருந்து அல்ல, என்னுடைய சொந்த அனுபவங்களின் வாயிலாக. நான் ஒரு தமிழ் பேசும் தலித் கிறிஸ்தவ பெண்ணாக இருப்பதால் அதன் ஒவ்வொரு கூறும், சிக்கல்களும் அதன் காரணமாய் நான் பெற்ற அனுபவங்களும் – என்னை ஒரு தனித்தன்மை கொண்ட மனுஷியாக உருவாக்கிய காரணிகளாகவே எண்ணுகி றேன். எனவே ஒரு சமகாலத்திய நகர்ப்புற தலித் பெண்ணாக, நான் இருக்கும் இந்த இடத்தை அடைய, என்னுடைய முன்னோர்களும் நானும் கடந்து வந்த பாதையை, அதன் வரலாற்றை நினைவுகூர்கிறேன். எல்லாரையும்போல என்னுடைய பாட்டியும் தாத்தாவும் பெற்றோரும் எங்கெங்கேல்லாம் குடிபெயர்ந்தார் என்னும் கதைகளை கேட்டு வளர்ந்திருக்கிறேன். தங்கள் மனிதத்தை மறுத்த ஒரு நாட்டில் – தொழிலை கண்டடைவதற்கு முன்னர் எப்படி வேலைபார்த்தார்கள், இந்துமதம் தர மறுத்த மரியாதையை தருவோம் என்று வாக்களித்த வேறு மதத்தை எப்படி கண்டடைந்தார்கள், பாகுபாடுகள் நிறைந்திருக்கும் சமூக, கல்வி, அரசியல் சூழ்நிலைகளில் எப்படி இயங்கினார்கள், பிழைத்திருந்தார்கள் என்பதையும், அந்த வெறுப்புக்கிடையில் எப்படி காதலித்தார்கள், மணந்துகொண்டார்கள், குழந்தைகள் பெற்றார்கள், செழித்தோங்கி னார்கள் என்பது பற்றியும் கதைகள் கேட்டிருக்கிறேன். இந்த உறுதியை என் பெற்றோர் வேலை செய்த இடத்திலும், சமூகத்திலும், தேவாலயங்களிலும், உறவுகளிடத்தும் கடைப்பிடித்தது அவ்வளவு எளிதல்ல.
நான் யார்? ஏன் நான் ஒரு தலித் பெண்?
நான் சென்னை புறநகர்ப்பகுதியில், கீழ் நடுத்தர வகுப்பில் பிறந்து வளர்ந்தவள். என்னுடைய மற்ற கிறிஸ்தவ நண்பர்களை போலல்லாமல் மிக சிறு வயதிலேயே என்னுடைய சாதி எனக்கு தெரியவந்தது. எனது முன்னோர்கள் பிழைப்புக்கு என்ன தொழில் செய்துவந்தார்கள் என்பதை அம்மா சொன்னபோது, எனக்கு ஐந்து வயதிருக்கும். “அவர்கள் இறந்தவர்களை புதைத்தார்கள்” என்று சொன்னார். இன்று இறுதி ஊர்வலங்களில் பறை வாசித்து ஆடுபவர்கள் எனது சகோதரர்களாய் இருக்கக்கூடும். அதனால் அவர்கள் ‘தீண்டப்படாத வர்கள்..’ – நாங்களும் தான். அது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை கொடுத்தது. அதை நான் நம்ப விரும்பவில்லை. அழுகை தான் வந்தது.
ஆனால் மற்ற தலித் (கிறிஸ்தவ) குடும்பங்களை போல என் குடும்பத்தினரும் சாதி அடுக்கில் நாங்கள் இருக்குமிடத்தால் எங்களுக்கு நேர்ந்திருக்கக்கூடிய கொடுமைகளில் இருந்து இயன்றவரை எங்களை பாதுகாத்தார்கள். மேலும், நான் மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவளாய் இருப்பதால் என்னுடைய முதன்மையான அடையாளம் ‘இந்திய கிறிஸ்தவர்’ என்பதாகவே இருந்தது. என்னுடைய வளரிளம் பருவம் முழுவதும் அந்த அடையாளத்திலேயே ஒட்டிக்கொண்டேன். என்னிடம் சாதி சான்றிதழ் கூட இல்லை. அதனால் எனக்கு கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீடும் கிடைக் காமல் நான் பொதுப்பிரிவி லேயே போட்டியிட நேர்ந்தது. எனது சாதியை உறுதிப்படுத்தும் அந்த சான்றிதழ் “அடையாளம்” இல்லாவிடினும், இட ஒதுக்கீடு கிடைக்காவிடினும், அது எனக்கொன்றும் சரியான சமூக மரியாதையை பெற்றுத்தந்துவிடவில்லை. இந்திய தேவாலயங்கள், அதிலும் குறிப்பாய் எங்களை உள்ளடக்கிய தமிழ் சிஎஸ்ஐ திருச்சபையைக்காரர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரின் சாதியை கண்டுபிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அதனால் என்னதான் உங்கள் சாதி அடையாளத்தை துறந்து வாழ நினைத்தாலும் அதை திருச்சபைகளின் உள்ளிருந்து உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். அதனால் சாதி மறுப்பு திருமணங்களுக்கு வழியில்லை. இதனால் ஒருவருக்கு சாதியை மீறுமளவுக்கு வசதி வாய்ப்பு இல்லாவிடில், அவர்களின் மரியாதையையும் சமூக அங்கீகாரத்தையும் சாதியே நிர்ணயிக்கிறது. என் தாத்தாவும் தாய் மாமாவும் திருச்சபை உறுப்பினர்களாய் இருந்தது எந்த விதத்திலும் அதை மாற்றவில்லை.
என்னுடைய சாதிய அடையாளத்தை கட்டவிழ்த்து நோக்குவதற்கு ஒரு தளம் கிடைத்தபோது எனக்கு இருப்பது வயது ஆகிவிட்டிருந்தது. தலித் என்கிற வார்த்தையை முதல்முதலாய் நான் கல்லூரியில் தான் கேள்விப்பட்டேன். அதை கேட்கத்தான் நான் இத்தனை நாள் காத்திருந்தேன் போலும்.. அதுபற்றி படிக்கவும் கேட்கவும் ஆரம்பித்தபின்னர் தான் சாதி எப்படி என்னுடைய, மற்றும் என் குடும்பத்தாரின் இருப்பையும் அனுபவங்களையும் வடிவமைத்தது என்பதை உணர்ந்துகொண்டேன். என்னை வகுப்பில் நிற்கவைத்து “நீ நிஜமாவே பொது பிரிவுல தான் வந்திருக்கியா? பட்டியல் சாதி இல்லையா? உறுதியாக தெரியுமா?” என்று திரும்ப திரும்ப கேட்ட அந்த உயிரியல் ஆசிரியை.. தேவாலயத்தில் என்னை சாதாரணமாய் ‘பறைச்சி’ என்றழைத்த அந்தப்பெண்.. சாதி சிறப்புரிமையை காட்சிப்படுத்தும் அந்த திருமணவிழாக்கள்.. அதற்கு செல்ல எனக்கிருந்த தயக்கம்… அந்த உயர்சாதி கிறிஸ்தவ குடும்பங்களின் பார்வை, அவர்களின் ‘கடவுளின் ஆசி’ பற்றிய பேச்சுக்கள்.. நாங்கள் என்றுமே பேசத்துணியாத மாட்டுக்கறி..
ஒடுக்கப்பட்ட அடையாளத்தை உரக்க சொல்லுதல், அதிலிருந்து தலித் பெண்ணாய் உள்ள அடையாளம், இவற்றையெல்லாம் எழுதச்சொல்லி வழிகாட்டிய கிறித்தவ மாணவர் இயக்கத்தின் அமைப்பாளர்கள், உலகம் பற்றிய எனக்கேயான பார்வையை எழுத தூண்டினார்கள். இந்திய பெணகளாத லால் – என்னுடைய கதையை சொல்வார் கள் என்று நம்பிய ராய் மற்றும் தேவகாருணியின் எழுத்துக்களிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு பாமா மற்றும் பவாரின் எழுத்தை வாசிக்க துவங்கினேன். அவர்கள் சொன்னது தான் என் கதை போலிருந்தது. இலக்கியத்தில் என்னுடையது போல் ஒலிக்கும் குரல்களுக்காய் ஏங்கினேன். வாழ்வு என்னை இட்டுச்சென்ற இடங்களில் எல்லாம் அதற்காய் ஏங்கினேன். என்னை தலித்தாய் அடையாள ப்படுத்திக்கொள்ளாத போதும், அது சரியானபடிக்கு நிகழ்வதாய் தோன்றியது. என்னுடைய சகோதரிகள் என்னை கண்டுகொண்டார்கள். தங்கள் எல்லைகளை தாண்டி அவர்கள் தங்கள் கதைகளை பகிர்ந்துகொண்டார்கள், என்னுடைய பெற்றோர் அவர்களுடைய கதைகளை பகிர்ந்துகொண்டது போலவே.. பனிமூட்டம் மெல்ல விலகத் தொடங்கியது.
அழகிய உடைகளும் வார்த்தை ஜாலங்களும் : “உயர்தர” விமர்சனங் கள்எனக்கு நினைவு தெரிந்தவரை, எங்கள் குடும்பங்களில் ஒன்று வலியுறுத்தப்படுகிறது: கடின உழைப்பு. கல்விகற்கும் போதும், வேலை தேடும் போதும் எங்கள் பாதைகள் கடினமானவையே. அதிலும் வாழ்வை நிமிரச்செய்யும் வகையிலான வேலை கிடைப்பதென்பது மிக அதிக உழைப்பை கோரக்கூடியது. கல்வியிலும் வேலை வாய்ப்பு வேண்டும் என்பதிலும் சமரசத்துக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. உன் இரண்டு பாட்டிமாரும் ஆசிரியைகள். ஒரு தாத்தா தத்துவம் படித்தவர், இன்னொருவர் ராணுவத்தில் இருந்தவர். நீ படி, வேலைக்கு போ. வேறு சிந்தனைக்கே இடமில்லை. அவ்வளவு தான். எங்கள் குடும்பத்தில் எந்த பெண்ணுக்கும் இல்லத்தரசியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயக்கூட துணிந்ததில்லை. ஏனென்றால் எங்களுக்கு அதற்கான வாய்ப்பே கிடையாது. எங்களுடன் பயிலும் ஆதிக்க சாதி சகாக்களை போல எங்களுக்கு பரம்பரை சொத்தோ நிலமோ கிடையாது, அதிகார வர்க்கத்துடனனான தொடர்புகள் கிடையாது, பணம் கொடுத்து சரிப்படுத்துமளவு வசதியும் கிடையாது. என் சகோதரியரும் நானும் எங்கள் பெற்றோர் வீட்டிலும், வேலை பார்க்குமிடத்திலும், மற்ற எல்லா இடங்களிலும் கடினப்பட்டு சோர்வடையும்வரை உழைப்பதையே பார்த்திருக்கிறோம்.
எங்களுடைய பெற்றோர் வாழ்க்கை இன்னும் கடினமாய் இருக்கப்போகிறது என்றே தெரிந்தும் நகர்ப்புறத்துக்கு குடிபெயர்ந்தார்கள். கட்டணம் அதிகம் என்று தெரிந்தும், அவ்வளவு எளிதில் அந்த சுமையை கடந்துவிட முடியாது என்று அறிந்தும், எங்களை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்தார்கள். அவர்கள் கோரிய மரியாதைக்குரிய வாழ்க்கையை ஈட்ட எங்களை உந்தித்தள்ளிக்கொண்டே இருந்தார்கள். நாங்கள் இன்று இருக்கும் நிலைக்கு அதுவே காரணம். என்னுடைய பெற்றோருக்கு அத்தகைய முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு இருந்தது – அதற்கு காரணம் அவர்களின் பெற்றோர் அதை விட கடினமான தேர்வுகளை அவர்களுக்காய் செய்தார்கள். அதை விட கொடுமையான போராட்டம் மேற்கொண்டார்கள். இதனை போராட்டங்களுக்கு பிறகும் எங்களை தகர்த்தெறிய காத்திருக்கும் அந்த புயலில் இருந்து எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை. இந்த பிளவு மிகவும் ஆழமானது. அதை கடந்துவிட ஒரு பாலம் தேவையாய் இருக்கிறது. அதை கட்டும்போதே அதன் மீது நடக்கவேண்டிய நிர்பந்தம் எங்களுக்கிருக்கிறது. இதனால் தான், நாங்களும் கடுமையான உழைப்பை செலுத்த வேண்டும், வாய்ப்புகளை கவனமாய் பயன்படுத்த வேண்டும், அங்கு போய் நின்றாள் மட்டும் போதாது, வழிநடத்தும் ஆற்றலுடன் எங்களை நாங்களே உணர்வுப்பூர்வமாய் உந்தித்தள்ளிக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஆங்கிலம் பேச கூச்சப்பட முடியாது. எங்கள் கதைகளை ஆங்கிலத்தில் சொன்னால் தான் உங்கள் காதுகளை எட்டும் என்றால் பேசித்தான் ஆக வேண்டும். அறிவுப்புலத்தில் ஆளுமையுடன் இருக்க வேண்டும், இதுவரை அங்கீகரிக்கப்படாத மக்களின் அறிவை இந்த நாட்டில் பார்வைக்கு கொண்டுவருவதற்கேனும். மாராப்பு மறுக்கப்பட்ட என் தாய்மார்களின் இந்த நிலத்தில், என்னிடமிருக்கும் நல்ல உடுப்புகளை உடுத்தி, ஞானச்செருக்குடன் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்.
(தொடரும்)