தீ நாள்

என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை – பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.
செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால் இந்த நாட்டு மக்களுடைய மானம் – சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால் நாட்டுக்கு எவ்வளவு பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது.
சுயமரியாதைக்காரர்கள் – திராவிடர் கழகத்தார்களுடைய இந்த விளக்கம், தவறானது என்றோ, நியாயமற்றதென்றோ, உண்மைக்கு அப்பாற்றட்டதென்றோ எப்படிப்பட்ட ஒரு பார்ப்பனன் கூட இன்றுவரை மறுத்தது கிடையாது. ஆனால் எல்லாப் பார்ப்பனர்களும் கொண்டாடத்தான் செய்கிறார்கள். பார்ப்பனர் அல்லாதவர்களிலும் பலர் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஏன்?
பூமியைப் பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடையவன் மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே பார்க்காத – நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும் பேராசிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?
மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக் கொண்டுதான் கடலுக்குள் நுழைய முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும் போதே மகாவிஷ்ணுக்கு காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்! அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம் இந்துஸ்தானத்தின் மூலவிக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப் பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள் – நம்ப முடியாது.
ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர் முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். ஏன்? சுயமரியாதை இயக்கத்தின் தீவிரப் பிரசாரத்தினால், இன்று திராவிட நாட்டிலுள்ள பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்றாலும், படித்தவன் – பட்டதாரி – அரசியல் தந்திரி – மேடைச் சீர்திருத்தவாதி என்பவர்களிலேயே மிகப் பலபேர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றார்கள் என்றால், இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்றால் இவர்களுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் யார்தான் வயிற்றெரிச்சல்படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு விரோதமான இந்நாட்டுப் பழங்குடி மக்களை – மக்களின் தலைவர்களை அசுரர்கள் – அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப்பிட்டார்கள் என்பதையும், அப்படிப்பட்ட தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையே கருத்தில் கொண்டு புழுத்துப்போன போக்கினின்றெல்லாம் எழுதிவைத்தார்கள் என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில் பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும் – அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.
இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வர முடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப்படுவதா?
திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப்பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மான முள்ள திராவிடன் எவ னாவது இந்த பண்டி கையைக் கொண்டா டலாமா? என்று கேட்கிறோம்.
தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!
1949ம் வருடம் ‘குடி அரசு’ பத்திரிகையில் எழுதி இருக்கிறார். யாரென்ற அறிமுகம் எல்லாம் தேவை இல்லை.
இந்த கட்டுரை வெளிவரும் நாளில் நீங்கள் தீபாவளி கொண்டாடி முடித்திருக்கலாம். ’தீபாவளி வெறும் கொண்டாட்டம்தானே… அதை ஏன் எதிர்க்க வேண்டும்’ என்றெல்லாம் கூட யோசித்திருக்கலாம். நியாயம்தான்.
மதுரைக்கு பல முறை சென்றிருக்கிறேன். ஆனால் தீபாவளி சமயத்தில் மதுரைக்கு கடந்த வருடம்தான் சென்றிருந்தேன். ஊரெங்கும் கோலாகலம். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பட்டாசு, குடும்பங்களுக்கு ஆடைகள், பலகாரங்கள் என களை கட்டிக்கொண்டிருந்தது. கொண்டாட்டத்துக்கான முனைப்புதான் எங்கும். அதுவரையில் மதுரையை அக்கோலத்தில் நான் பார்த்ததே இல்லை.
சொந்த ஊர் மதுரை என்பதால் என் ஞாபகம் எல்லாமும் அப்பா சொன்ன ஊர்க்கதைகளும் ஊர்மாந்தர் கதைகளும்தான் நிரம்பி வழிந்தன. அதிலும் பெரும்பாலும் நிலம், விவசாயம், மாடு, கிடாவெட்டு, சாதி ஒடுக்குமுறை என்ற நினைவுகளின் வழிதான் மதுரையை அறிந்திருக்கிறேன். அந்த படிமங்களின் ஊடாகவே வளரும் காலத்தையும் செலவழித்ததால் நிலம் சார்ந்த முதலீடும் வாழ்க்கையும் மட்டுமே பெரும்பான்மையாக கண்களுக்கு தெரிந்திருந்தது. ஊடாக ராமரும் விநாயகரும் கிராமத்தின் மலைகளில் இடம்பிடித்த சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருந்தன.
தாராளமயமாக்கல் கொடுத்த வணிகப்பெருக்கத்தின் வசதி வழி, பார்ப்பனீயம் வெகு விமரிசையாக உள்ளே நுழையத் தொடங்கி இருந்தது. ராமேஸ்வரத்துக்கு ராமர் செல்கையில் கரடிக்கல், குன்னனம்பட்டி போன்ற கிராமங்களின் வழியாக சென்றதாக வரலாறு புனைந்தார்கள். நகைச்சுவையாக இருந்தது. மகாபாரத, ராமாயண இதிகாசங்கள் இப்படித்தானே வாய்வழியாக விரவியோடி உருவாகி இருக்க முடியும்?
கல்லூரிக்காலத்தில் எல்லாம் சென்னையில்தான் அதிகமாக சினிமாக்கனவுடன் சுற்றியிருந்ததால், மதுரை வட்டார கிராமங்களின் சூழலை அதிகம் அவதானிக்க முடியவில்லை. ரொம்ப நாள் கழித்தே கடந்த வருடத்திய தீபாவளியின் போது மதுரை விஜயம் நேர்ந்தது. கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்படுவதை பார்த்ததும் உண்மையில் விக்கித்துதான் போயிருந்தேன். இட்லிக்கு தயிரை தொட்டு சாப்பிட்டது போன்றொரு மனநிலை. சுத்தமாக ஒட்டவில்லை. ஆனால் மக்கள் ஒட்டியிருந்தார்கள்.
என் அப்பா கதைகளாக சொன்ன ஊர்மாந்தர்களை தாராளமயம் நகரங்களுக்கு சிதறடித்து அநாதரவான கடவுள்களுக்கு ஆதரவு அளிக்க வைத்திருந்தது. சம்பந்தமே இல்லாத விழாக்களை எல்லாம் தம் விழாக்களாக கொண்டாட வைத்திருந்தது. சென்னை நகரத்துக்குள் ராமகோபாலன் விநாயகரை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மதுரையில் இருந்தும் பிற கிராமங்களில் இருந்தும் வந்தவன் வாங்கிக் கொண்டான். நிலம் சாராத நகரத்து கார்ப்பரெட் முதலாளி தீபாவளிக்கு மட்டும் விடுமுறை கொடுத்தான். கிராமவாசி, ஊருக்கு சென்று குலதெய்வத்தை தரிசித்து தீபாவளி கொண்டாடினான். மாடசாமியும் கருப்புசாமியும் கிடா கிடைக்காமல் பொறியும் கொழுக்கட்டையும் உண்டு சோகத்துடன் வயிறை வளர்த்தார்கள்.
விவசாய நிலங்களை வாங்க வரும் ரியல் எஸ்டேட்காரர்களுக்காக விவசாயி காத்திருக்கத் தொடங்கினான். அரசும் நன்றாய் ஆசை காட்டி விவசாயியை மோசம் செய்யத் தொடங்கியது. மாடசாமி ராமனானதும் கிடாக்கறி வெண்பொங்கல் ஆனதும் விவசாயம் ப்ளாட்டுகளானதும் திராவிட நரகாசுரன் கொல்லப்பட்டது திராவிடர்களே கொண்டாடும் விழாவாக மாறிப் போனதும் யதேச்சானவை அல்ல.
நிலப்பிரபுத்துவமும் கார்ப்பரெட் முதலாளியமும் அதிகாரத்தின் வழியாக கைகோர்ப்பது இப்படித்தான் ஒவ்வொரு முறையும்.
இந்திய பார்ப்பனப்பனியா அதிகாரத்தின் ‘ஒற்றை ஆகுதல்’ திட்டத்தின் ஓர் உதாரணம்தான் தீபாவளி!
இந்திய பனியாக்களின் பன்னாட்டு கார்ப்பரெட் முதலாளியக் கூட்டுக்கு நுகர்வு தேவை. அதிக நுகர்வு, அதிக லாபம். பன்னாட்டு நிறுவனங்களுக்கோ இந்தியா மாபெரும் ஒற்றை சந்தை பரப்பு. இச்சந்தையை சிதறவிடாமல் இருக்க வைத்திட வேண்டிய அவசியம் பன்னாட்டு கார்ப்பரெட் முதலாளியத்துக்கு இருக்கிறது. பன்னாட்டு முதலாளியத்தின் ஒத்துழைப்பு இந்தியத் தரகு பனியா கூட்டத்துக்கு தேவையாக இருக்கிறது. இந்தியாவை ஒற்றையாக மாற்றி ஆரியத்தை வேரூன்ற வைக்க வேண்டிய தேவை பார்ப்பனீயத்திற்கு இருக்கிறது. பார்ப்பனீய அதிகாரத்துக்கு சேவகம் செய்ய வேண்டிய அவசியம் நிலவுடைமை ஆதிக்க சாதிகளுக்கு இருக்கிறது. இதுதான் இன்றைக்கும் என்றைக்குமான இந்திய அரசியல் சமன்பாடு.
இந்திய அதிகாரம் எப்போதுமே ஆரியத்துக்கான அதிகாரமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. தெற்கிலிருந்து ஏதேனும் ஒருவகை திராவிட பிரதிநிதித்துவம் இந்திய அதிகாரத்துக்குள் நுழைந்துவிட்டால், ஒன்று அதன் கொடுக்குகள் வெட்டப்படும். அல்லது முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும்.
முன்னெப்போதையும் விட தற்போது நடந்து வரும் பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் அதி தீவிரத்துடன் தேசிய இன அடையாளங்களை அழித்தும் மாநில உரிமைகளை பறித்தும் ‘ஒற்றை’த்தனத்தை நோக்கி இந்தியாவின் கழுத்தை பிடித்து இழுத்து சென்று கொண்டிருக்கிறது. பார்ப்பனீயத்தின் பல நூற்றாண்டு கனவான ‘ஆரிய இந்தியா’ இலக்கு வெகு வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.
எல்லா காலங்களிலும் அதிகாரம் தனக்கு பயன்படாத எந்த பண்பாட்டுக் கூறையும் விட்டு வைத்ததில்லை. சொல்லப்போனால் அதிகாரத்துடன் உறவாடாத எந்த பண்பாட்டுக் கூறும் வழக்கொழிந்து போகும். உலகளாவிய பல மொழிகள் வழக்கொழிந்து போனது அவற்றின் அதிகார அனுகூலம் இல்லாமல் ஆக்கப்பட்டதால்தான். பல இனங்கள், பழங்குடி மதங்கள், மக்கள் வரலாறுகள் காணாமலடிக்கப் பட்டதும் இப்படியாகத்தான்.
இந்தியாவின் பூர்வகுடிகளான திராவிட இனம் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் இதே பாணியில்தான். ஒரே வித்தியாசம், அழிவு வேலை பற்பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் இன்னும் முடியவில்லை. வட திராவிடர்களை பார்ப்பனீயப்பனியா காணாமல் அடிப்பதற்கு இவ்வளவு காலமும் தேவைப்படவில்லை. இத்தனை சிரமமும் இருக்கவில்லை. நாம் மட்டும்தான் அவர்களுக்கு பிரச்சினை. காரணம் ஒன்றே ஒன்றுதான்.
நாம்தான் நரகாசுரர்கள்!
ஆரியனை எதிர்த்து அன்று நின்ற நரகாசுரனும் நாம்தான். இன்று நிற்கும் நரகாசுரர்களும் நாம்தான். இந்தியா, பார்ப்பனீயாவாக மாறுவதற்கு தடையாக இருப்பவர்கள் நாம்தான்!
இப்போது சொல்லுங்கள், தீபாவளி வெறும் தீபாவளிதானா? வெறும் கொண்டாட்டம்தானா? இல்லை. நம்மை கொளுத்தி அழித்து ஆரியன் காண விரும்பும் இந்தியாவுக்கான கொண்டாட்டமே தீபாவளி!
இப்போது மீண்டும் முதலில் இருந்து படியுங்கள். 1949லேயே நம் தாத்தன் எழுதியதை நெஞ்சில் ஏற்றுங்கள். தாத்தன் பெரியார் சொன்ன வார்த்தைகளை உங்களுக்கு மீண்டும் கடத்துகிறேன். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கடத்துங்கள்.
’தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!’