தோழர் கயல்விழி தங்கையனுடன் ஓர் நேர்காணல்

முகநூலில் சிறப்பாக இயங்கும் தோழர் கயல்விழி தங்கையன் ஒரு முறை முகநூலில் தன் மகனிடம் தான் ஏற்படுத்தியுள்ள மாதவிடாய் பற்றிய புரிதலை பதிவிட்டிருந்தார். அவரின் அணுகுமுறை மற்றவர்களுக்கும் பயன் தரும் என்ற காரணத்தால், அவரிடம் ஒரு இணைய நேர்காணலில் சில கேள்விகள் அனுப்பப்பட்டு பதில் வாங்கப்பட்டது. அந்த பதில்களை உங்களோடு பகிர்ந்துகொண்டு அடுத்த தலைமுறை ஆண்களுக்கு  பெண் உடலின் புரிதலைப் பற்றி பரவலாக்கும் முயற்சி.
1. தங்களைப் பற்றி
நான் பிறந்து வளர்ந்தது திருச்சியாக இருந்தாலும் சொந்த ஊர் ஒரு கிராமம். அப்பா BHEL ஊழியர்(Rtrd). அம்மா படிப்பறிவில்லாதவர். பின்னாளில் அப்பாவின் மூலம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டாலும் கிராமத்துக் குணம் மாறாதவர். அந்த குணத்தாலயே எனக்கு   16 வயது முடியும் முன்னரே எனது எதிர்ப்பையும் மீறி தனது உறவினருக்கு திருமணம் முடித்து வைத்தார். திருமணத்திற்கு பின் படிக்கலாம் எனும் அவரின் வாக்குறுதி.. காரியம் முடிந்ததும் கழட்டிவிடப்பட்டது. படித்தால் திமிர் வந்துவிடும் எனும் வாதத்தை எதிர்த்து ஒரு வருடம் போராடி DECE govt polytechnicல படிச்சேன். Divorce கேட்டேன் முடிச்சிட்டு. வழக்கம்போல எங்கப்பாவின் சென்டிமென்ட் ட்ராமாவால இரண்டு மாதம் குடும்பம் நடத்தி வயிற்றில் கரு உருவான கையோடு வந்துவிட்டேன் தாய்வீட்டுக்கே. (இவ்வளவு விளக்கமா சொல்ல காரணம் இந்த மாதிரியான மனிதர்களை பார்த்ததாலயே என் மகன் பிறந்த போது “ச்சீ ஆண்பிள்ளையா” என நான் கேட்டதை நியாயப்படுத்த)
2.  தங்கள் மகனிடம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஏன் விளக்க வேண்டும்?  எனத் தோன்றியது
மாதவிடாய் பத்தி மட்டுமில்ல. பொண்ணுங்கறவளும் மனித இனம்தான். அவளுக்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் உண்டு. அவளுக்கு எதையும் நிராகரிக்கும் உரிமையும் உண்டுனு சொல்ல நெனச்சேன். ஒரு ஆண்பிள்ளை எப்படி இருக்கனும்னும் எங்க உறவினர்களுக்கு காட்டனும்னு நெனச்சேன். மற்றவர்களோடு சுமூகமான உறவு இல்லாததால மகனோடு நிறைய பேசுவேன். 6-7 வயதில் Napkin Pocket பார்த்து கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டான். அப்ப எங்கம்மா வேற சாமி ரூமுக்கு போகக் கூடாது குளிக்காம தொடக் கூடாதுனு Condition போடுவாங்க. அதுலாம் பார்த்து அவன் ஏன்னு கேட்டான். Napkin பொண்ணுங்க பயன்படுத்துற Diaperனும் ஆயாவின் செயல்கள் முட்டாள்தனம்னும் சொன்னேன்.
3. எந்த வயதில் மகனிடம் மாதவிடாய்
 பற்றி கூறினார்கள். ?
7ஆம் வகுப்பு  வந்த பிறகு அவனிடம் மாதவிடாய் பற்றி போதுமான அளவு சொல்லிவிட்டேன்.  மாதா மாதம் பெண்களின் பிறப்புறுப்பு வழியா ரத்தம் வரும். குழந்தை உருவாகத் தேவையான ரத்தம்தான் அது. அதோட ஆயுட்காலம் முடிஞ்ச வுடனே வெளிய வந்துடும். இவ்வளவு தான் சொன்னேன். ஏன் அப்ப சொல்ல நினைச்சேன்னா இந்த வயசுலதான் பொண்ணுங்க அந்த நிலைக்கு வருவாங்க. அதப் பார்த்து பயந்தோ அல்லது புரியாம கிண்டல் பன்னிடவோ கூடாதுன்னு.
4. மகனின் புரிதல் அந்த வயதில் எப்படி இருந்தது?
புரிதல் ஓரளவு பரவாயில்லை. 6 ம் வகுப்பிலேயே இந்த நிலையை அடைந்த பெண் இருந்தாள். இது ஆண்களுக்கு வருமா? ரத்தம் வருதுன்னா வலி இருக்குமா? இதுக்கு ஏன் சாமி கும்பிடக் கூடாதுனு சொல்றாங்க?? இதுலாம் கேட்டான் புரிய வச்சேன்.
5.  ஆண் குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றிய தெளிவு ஏற்படுத்துதலால் என்ன நன்மை என நினைக்கின்றீர்கள்?
5 அல்லது 10 நிமிசத்துக்கு ஒருமுறை உனக்கு Urine வந்துட்டேருந்தா உனக்கு எப்டி இருக்கும்னு கேட்டேன். அந்த நாட்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மனம் மற்றும் உடல் ரீதியா ஏற்படக்கூடிய ப்ரச்சனைகளை புரிய வைக்கறது மூலமா பெண்களோடு தோழமை உணர்வோடு பழகும் எண்ணத்தை ஏற்படுத்தலாம்.
6.    ஆண் பிள்ளைகளுக்கு எளிமையான விளக்கம் தர இயலுமா? மற்ற அம்மாக்களுக்காக
நமக்கு மாதவிடாய் பத்தின தெளிவு இருந்தா அதை முழுமையா உள்வாங்கிருந்தா தெளிவுபடுத்தறது எளிமையா இருக்கும்னுதான் நினைக்கிறேன்.
7.  ஆணாதிக்க மனோபாவம் பெண்களின் இயற்கை சுழற்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வதால் மாறும் என நம்புகின்றீர்களா? எனின் எப்படி?
நிச்சயம் மாறும். ஆண்தான் பலசாலி என்ற எண்ணமே முதல்ல மாறும். 12 வயதில் இருந்தே இயற்கையாகவே பெண்களின் உடல்மாற்றங்களால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏதும் ஆண்களுக்கில்லை. அந்த இயற்கை மாற்றத்தால் சமூகத்தில் அவள் எதிர்கொள்வது போல் பிரச்சனைகளும் ஆணுக்கில்லை. ஆக இயல்பாகவே பெண் உள்ளும் புறமும் போராடிக் கொண்டேதான் வாழ்கிறாள். இதைப் புரிஞ்சிக்கிட்ட எந்த ஆணும் ஆதிக்க மனப்பான்மையோடு இருக்க மாட்டான்னு நெனக்கிறேன்.
8.  தங்கள் மகனைப் பற்றி
கைலாஷ் தற்போது திருச்சியில் 10 ம் வகுப்பு Cbse வழியில் படிக்கிறார். தப்பித்தவறி கூட கடவுளை வணங்க மாட்டார். அதற்கு அவர் சொல்லும் காரணம் கல்லையெல்லாம் கையெடுத்துக் கும்புட முடியாது என்பதுதான்
இதைத்தவிர எதிர்பாலின ஈர்ப்பு, காதல் மற்றும் Porn Video பத்திலாம் என்னோடு பேசும் அளவு நட்புணர்வை ஏற்படுத்திருக்கேன். தற்போது மார்க்ஸ், அண்ணல், பெரியார் போன்ற தலைவர்களை அறிமுகப்படுத்தி அரசியலையும் கற்றுக் கொள்ள சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நன்றி : கயல்விழி தங்கையன்
இணைய வழி நேர்காணலில் உதவி:
-ம. வீ.கனிமொழி