நன்றி மர்வானா !!

னக்குத் தெரியாது
இது நான் தானாவென
மர்வானாவை புகைத்து
உள் நுழையும் வரை

ஆணின் விலா எலும்பிலிருந்து
படைக்கப்பட்ட
எனதுடலில் சிறகொன்று முளைக்குமென
எனக்கே தெரியாது
தொண்டைக்குள் வாளின் கூர்மையோடு
இறங்கும் புளிப்பேறிய வைனின் சுவையில்
எனதுடல் ஒரு பருந்தென

நள்ளிரவின் சுடர் இருளை
முழு நிர்வாணத்தினால் கிழித்து
எறிய முடியுமென

மூளையில் பதுங்கியிருந்த
பைசாசுகளின் சுமையை
சில முத்தங்களால்
இறக்கி வைப்பேனென
யாரோ சொன்னது போலன்றி

எனது இந்த உடல்
நிலத்தின் அழுக்காலானது
கலைந்து திரியும்
மேகத்தையும் போல
தீவிரமானது

இன்றிரவு
முதல் முறையாக
நானறியாத
எனதுடலை
என்னோடு
அழைத்து
வருகிறேன்
அறிந்துகொள்ளச் செய்த
மர்வானாவிற்கு
நன்றி!