நாம் தமிழரல்லர்!

“வேதம் உணர்ந்தவன் அந்தணன் – இந்த
மேதினியை ஆளுபவன் சத்திரியனாம் – மிக
நீதமுடன் வைசியன் என்று உயர்வு செய்தார் – மிக
நாதியற்று வேலைகள் செய்தே – முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே – சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் – இவை
அன்றியும் பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம்”
பலதரப்பட்ட தேசிய இனங்கள், பல்வேறுபட்ட பண்பாடு, பலதரப்பட்ட மொழி, பல்வேறுஇனக் குழுக்கள் வாழும் பல தேசங்களை உள்ளடக்கியதுணைக்கண்டத்தில், இந்திய ஒன்றியம் (India, that is Bharat, shall be a union of states and the territory of India is composed of territories of states, the union territories and any acquired territories as listed in Schedule 1 per Article 1 (3))தன்னுரிமை பெற்ற, தனதுஎழுபத்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்தத் தருணத்திலும், புரட்சிக் கவி மேலே எடுத்துரைத்தது போல் மனுவின் வருணங்கள், வர்க்கங்கள், குலங்கள், கோத்திரங்கள் போன்ற குப்பைகளும், அக்குப்பைகளின் மேல் மொய்க்கும் ஈக்களினைப் போன்ற சாதிகள் மற்றும் சாதிப்பிரிவுகளின், பகுத்தறிவுக்குச் சிறிதும் ஒவ்வாதசடங்குகளும், சம்பிரதாயங்களும் நாளுக்கு நாள் வளர்ந்தும், வலுப்பெற்றுக் கொண்டும்தான் இருக்கின்றன.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியப் பார்ப்பனீயத்தால் தந்திரமாக உருவாக்கப்பட்ட வர்க்க, வருண, சாதியம் புகட்டும்மனு நிறுவன அமைப்பானது, இந்தியாவில் இன்றுள்ள மூவாயிரம் எண்ணிக்கைகளுக்கும் அதிகமான சாதிகளையும், இருபத்தி ஐயாயிரத்திற் கும் அதிகமான அவற்றின் உட் பிரிவுகளையும் படி நிலையில் ஒன்றன் கீழ் ஒன்றாக, எவ்வகையிலும்ஒன்றிக்கொன்று சமம் இல்லாதவைகளாக நிறுவி, உருவாக்கி விட்டுவிட்டதன் விளைவே, இன்றும் சாதியத்தின் மற்றும் அதனைக் கட்டிக் காத்திடும் பார்ப்பனீயத்தின் அட்டூழியங்கள் ஏன் ஒழிந்தபாடில்லை என்பது உள்ளங்கை கைப்புண்.
இனச் செருக்கும்சாதீய வெறியும் இன்னமும் மிகுதியாய், ஒழிக்கப்படமுடியா நிலைக்கு, படிநிலையில் தனது சாதிக்கு மேல்நிலையில் உள்ளவர்கள் தம்மை அடக்கி ஆதிக்கம் செலுத்துவோரே, எனும் இழிநிலை மறந்து, தான் அடக்கி ஆதிக்கம் செலுத்த, தனக்கும் கீழே ஆயிரம் சாதியினர் உள்ளனரே எனும் அலட்சிய ஆணவ மனப்பான்மையினை, இந்தச் சாதீயப் படிநிலைகள் கட்டமைத்திருப்பதே இத்தகைய சமூக அவலங்களுக்குக் காரணம் என்பது நாம் உணர்ந்ததே!
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டு வாக்கினில் அடியெடுத்து வைக்கத்தொடங்கிய இத்தகைய சமூக வேறுபாடுகள் உலகினில்வேறு எங்கும்உண்டா எனில்,  வர்க்க அல்லது நிறப் பாகுபாடுகள் உண்டேயன்றி நம்மிடையே காணப்படும் சமூக வேறுபாட்டு சாதியக் கட்டமைப்புச் சீர்கேடுகளினைப் போன்று காண முடியாது.
இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், இன்றைய இந்தியா, பண்டைய இந்தியா (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்) மற்றும் அவற்றிலிருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் வாழும் நாடுகளிலுமே இந்தச் சாதியச் சீர்கேடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றனஅல்லது இன்னமும்கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவ்வகையான சாதியப் போக்குஅகமனைத் திருமணத் தகவல் தளங்கள், அளவளாவும் இனக்குழுக் கூட்டங்கள், வேத விளக்கக் கூட்டங்கள், சமூக வலைத்தளக் குழுக்கள் போன்ற வகைகளில் கடல் கடந்தாலும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வலுவாக கட்டிக் காக்கப்பட்டுகிறதென்பது அனைவரும் அறிந்ததே!இது சாதி நம்மைப் பிடிக்கவில்லை, சாதியைத்தான் நாம் பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதனையே எடுத்துக்காட்டுகிறது.
ஒரு குறிப்பிட்ட இனத்தவர், நூறில் மூன்று பேர் மட்டுமே உள்ள மிகச் சிறிய அளவிலான பார்ப்பனர், மீதமுள்ள தொண்ணூற்றியேழு பேரையும் சாதியின் பெயரால்,தனது குறுகிய கூர்க்கமனப்பான்மையினால், இல்லாத கடவுளுக்கிணையாக தங்களைப் பாவித்துக்கொண்டு, ஒரு பெரிய சிறுபான்மையராக இருக்கின்ற பிற்படுத்தப் பட்டோரையும், ஒரு சிறுபான்மையாக இருக்கிற ஆதி திராவிடரையும், இன்னொரு சிறுபான்மையினராக இருக்கிற மதச் சிறுபான்மையினரையும், மிகச் சிறுபான்மையினராக இருக்கிற பழங்குடி மக்களையும் தனக்குக் கீழான சூத்திரர்களாக்கி, தாழ்த்தி வஞ்சித்தல் எப்படி முறையாகும்?தன்னுரிமை பெற்றவிட்ட நாட்டினிலே, அந்நாட்டு மக்களில் பலர் எப்படி அடிமைகளாகவும், சூத்திரர்களாகவும் இருக்க முடியும்?
அறிவியல், இணைய, தகவல் தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சி கண்டுவிட்ட போதும், அண்டவெளிக்கு ஆட்களை அனுப்பும் நிலைக்கு முன்னேற்றம் கண்டுவிட்டபோதும் வகுப்புவாதப் போராட்டங்கள், சாதிய அக்கிரம அடக்குமுறைகள், ஆணவக் கொலைகள் போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆரோக்கியமான தன்றதல்லவே?
இச்சமூகத்தில் ஆழமாய் ஊன்றி விட்டஅக இறுமாப்புதானே, “தீண்டாமை ஒரு பாவம்!, தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!!, தீண்டாமை ஒரு பாவச்செயல்!!!” என்று பகுத்தறிவித்து, பள்ளி மாணவர்களை பண்படுத்த வேண்டிய பள்ளிக்கூட ஆசிரியரினைபாப்பம்மாள் என்கிற தாழ்த்தப்பட்ட பெண் பள்ளியில் சத்துணவு சமைப்பதற்கு எதிராக பள்ளி மாணவர்களின் பால் மனதைப் பாழடையச் செய்திருக்கிறது? அவரின் ஆளுமைச் செருக்குத்தானே பாப்பம்மாளுக்கு எதிராகச்சதி செய்து, பொய் வழக்குப் போட்டு, தன் சாதிய வெறியைத் தணித்துக்கொள்ளச் செய்திருக்கிறது?  அவ்வூர் மக்களின் அறியாமைப் பின்பற்றுதல்தானே பாப்பம்மாளுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய வைத்திருக்கிறது?
நம்மில் ஒருவர், அறிவுக்கூர்மை உடையவராகவோ, அபார திறமை வாய்த்தவராகவோ, அரிய பல செயல்கள் செய்த வெற்றியாளனாகவோ, சாதனையாளனாகவோ இருந்துவிட்டால் முதலில் அவர் என்ன சாதியினைச் சார்ந்தவர் என்றல்லவோ அறிய முற்படுகிறோம்? தங்க மங்கை ஹிமா தாஸ் இந்தத் தரணி வியக்க தடகளம் வென்ற உடன் கூகிள் இணையதள தேடலில் அவருடைய சாதி என்ன என்ற தேடல் தானே அதிகம்? ஒலிம்பிக்-இல் வெள்ளி வென்றவுடன் பி வி சிந்துவுக்கு நடந்ததும் இதுதானே?
இத்தகைய தேடல்களில், அந்தச் சாதனையாளர் நமது சாதியினராக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். இருந்தால் பெறுமைப்படுகிறோம். இல்லையெனில், சிறுமையும் பொறாமையும் கொள்கிறோம், அவரது திறமையினைக் குறைத்து மதிப்பிடுகிறோம். இன்னும் ஒருபடி மேலே சென்று, அவரி டத்து ஏதேனும் குறைகள் இருக்காதா என்று நுண் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறோம். இல்லாத குறைகளைக் கண்டு பிடித்து அந்தச் சாதனையாளரின் சாதனையையும், எதிர்காலத் தினையும் கேள்விக்குள்ளதாக்கு கிறோம். ஆசிய தடகளப் போட்டி களில் இந்தியாவின் சார்பாக முதன் முதலில் பதக்கம் வென்ற சாந்தி சௌந்தர்ராஜனுக்கு இந்த கதி தானே நேர்ந்தது? அவரைக் கத்தக் குறிச்சியின் செங்கற்ச் சூளைக்கு திருப்பி அனுப்பும் வரை அவர்கள் ஓயவில்லையே? சமூக நீதி காத்த கலைஞர் அல்லவே கைகொடுத்து தவினார்?
சற்று உற்று நோக்கினால், மூன்று விகிதமே இருக்கும் அந்த மக்களிடம் இத்தகைய சாதிய இழிநிலைச் சண்டைகள் நடப்பதில்லை. ஏனெனில், அவர் களுக்கு மீதமுள்ள தொண்ணூற்று ஏழு பேரும் சூத்திரர்களே!  அவர் களுக்குள்ளேயும் குல, கோத்திர வேறுபாடுகள் இருந்தாலும், இந்த குல, கோத்திர, சூத்திரச் சண்டைகள் அவர்களிடையே இருப்பதில்லை. மாறாக, அவர் களுக்குள்ளாக எவருக்கேனும் ஒரு சிறு கடுகளவு திறமை வாய்த்து விட்டால், கடுகைத் துவரையாக்கி, துவரையை அவரையாக்கி, அவரையைச்சுரையாக்கி விடுவார். ஒரு தனியார் தொலைக் காட்சியின் பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில், போட்டியாளர் களுக்கு அந்த நடுவர்களின் விமரி சனங்களை உற்று நோக்கினாலே இது நன்குவிளங்கும்.
ஆனால், இந்த மீதமுள்ள தொண்ணூற்று ஏழு விகித மக்களோ, இதை உணராது சண்டைச் சச்சரவுகளில் ஈடுபடுவ தும், ஒருவர் பிறர் முதுகில் குத்த முனைவதும், சாதியச் சாக்கடைக் குழிகளுக் zகுள் உழன்று தங்களுக்குள்ளா கவே தங்களைத் தாழ்த்திக் கொள்ளும் போக்கும், அவற்றையே தலை முறைச் சொத்தாக, பல தலைமுறை தலைமுறை யாக, தனது இளைய தலைமுறைகளுக்கு கடத்திக் கொண்டு வரும் பாங்கும் மிகுந்து காணப்படுகிறது.எல்லாத் தகுதி களும் இருந்தாலும், ஒரு சூத்திர னால் இசைக் கல்லூரிக்கு முதல்வ ராக முடியவில்லையே? இது ஏன், பாட்டுப் போட்டிக்குக் கூட நடுவர் ஆக முடியாது என்று நீங்கள் எள்ளி நகைப்பதுஎனக்குத் தெரியாமலில்லை!
உண்மையில் பார்ப்பனர்கள் நம்மை அடிமைப்படுத்தவில்லை, பார்ப்பனீயம் தான் அடிமைப் படுத்தியுள்ளது என்பதை நாம் நன்குஉணரவேண்டும்.இந்த தொண்ணூற்றேழு விகித மக்களில்சிலர், பார்ப்பனீயப் பாதுகாப்பில், பார்ப்பனீய ஏவலுக்கு, பணிவிடை செய்யும் நவ பார்பனர்களாக மாறிப்போவதும், மேலும் சிலர், பார்பனீயக் கொடுமைகளுக்கு ஆட்பட்டு, அதிலிருந்து விடுபட பல போராட்டங்கள் நடத்தி பொருளாதார சுதந்திரமும் அதன்மூலம் சமுதாய அங்கீகாரமும் அடைந்தும் கூட பார்ப்பனீயப் பணியாளர்களாய், சற்சூத்திரர்களாய் மாறிப்போவது ஒருவகை உளவியல் நகைமுரண். பார்ப்பனீயம், தனது வேலைக்கு இவர்களைப் பயன்படுத்திக் கொள்வதும், அவர்கள் வேலைமுடிந்தவுடன் இவர்களைக் கைகழுவி விடுவதும் கண்கூடு.பார்ப்பனீயம் என்றுமே நேரடியாகச் செயல்படுவதில்லை!
இத்தகைய மூவாயிரம் ஆண்டு சமுதாயச் சீர்கேட்டினை, முன்னேற்ற முட்டுக்கட்டை யினை, ஊர்ப்படர் தாமரையினை, உள்ளத்து ஒட்டுண்ணியினை, மத மாயையினை, சாதியச் சாத்தானை ஒழிக்கும் பணியினில் சமூக விடுதலை விடிவெள்ளிகளும், பகுத்தறிவுப் பகலவன்களும் பாங்காய் சாதியுணர்வு ஒழித்து அனைத்துத் தமிழரையும் புது மாந்தர் இனத்துள், பார்ப்பனீய ஒட்டுண்ணி படர்ந்த மறைத்த பழந்தமிழர் மரபில் தம்மை இணைத்துக்கொள்ளவைத்த போதிலும், அவர்களில் சிலர், வஞ்ச நெஞ்சம் கொண்டோர், காரறிவுடையோர், சாதி ஒழிய வேண்டாம் எனும் கருத்துக் கொண்ட கயவர், இன்னமும் இருக்கவே செய்கின்றனர். உன் எதிரி யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன் என்பதைப் போல், உன் சாதி என்ன வென்று சொல், நீ தமிழனா இல்லையா என்று சொல்கிறேன் எனச்சொல்கின்றனர். தமிழர்களை மீண்டும் பல்லவர் காலத்திற்கு இழுத்துச் செல்லும் முயற்சியில், ஆயிரம் டன் அரிசி நிரப்பிய அம்புவிகலத்தினுள் ஆயுதப்பயிற்சி செய்யும் முனைப்புடன் செயல்படுகின்றனர் என்பதில் நமக்குச்சற்றும் ஐயமில்லை தான்!அதேபோல், அந்தக் கலமும் கரை சேராது என்பதில் சற்றும் ஐயமில்லை!
சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான சமுதாயப் போராட்டங்கள், ஆலய நுழைவுப் போராட்டங்கள், பகுத்தறிவுப் பரப்புரைகள், சுமரியாதைத் திருமணச் சட்டங்கள், கலப்புமண ஊக்குவிப்புகள், காதல் திருமணங்கள், கல்வியின் மூலமான மனமாற்றங்கள் போன்ற பல சமுதாயச் சீர்திருத்த திட்டங்களினை சமூக சீர்திருத்தவாதிகளும் அதனைத் தொடர்ந்து அரசாங்களும் சீரிய முறையினில் செயற்பட்டு வந்திருந்தாலும், இனியும் இன்னும் தீவிரத்துடனும் இக்களத்தினில் தொடர்ந்து பணியாற்றவேண்டியது அவசியமாகிறது. பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கும், பிரிவினைச் சக்திகளின் பொய்ப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் விழிப்புணர்வினை இன்றைய இளைய தலைமுறையினரிடையே ஏற்படுத்தும் செயல் தொடர்ந்திட வேண்டும். இல்லையேல், எத்தகைய சாதனைகள் செய்திருந்தாலும், எத்தனைப் பெரிய பதவிகள் வகித்திருந்தாலும், சூத்திரனெனில், இறந்தாலும் நாம் எங்கு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதனைக் கூட பார்ப்பனீயமே முடிவு செய்யும்!
தமிழ் நாட்டில் பிறந்து, தமிழே பேசினாலும் – மக்கள் நலனுக்கு எதிராக, இன, மத, வர்க்க, சாதியப் பிரிவினைகளால் அடக்குமுறை மற்றும் ஆதிக்க ஒடுக்கு முறைகளால் ஏற்றத் தாழ்வுகளைப் போதிக்கும் பிற்போக்கு எண்ணமுடைய எவரும் தமிழராய் இருக்க முடியாது. “ஒவ்வொரு அந்நீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீ ஏன் தோழனே” என்றானே “சே” என்றதொரு உலகப் புரட்சியாளன் – அர்ஜென்டினாவில் பிறந்திருந்தாலும் கியூபா, பொலிவியா நாடுகளின் விடுதலைப் புரட்சிகளில் பங்கெடுத்தானே, ஒருவகையில் அவனும் தமிழனே!
“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால், உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது” என்று அறைகூவல் விடுத்தானே மூலதனம் படைத்த கார்ல் மார்க்ஸ், ஜெர்மனியில் பிறந்திருந்தாலும் பிரான்ஸ், இத்தாலி என்று பலமுறை நாடுகடத்தப்பட்டபோது “எல்லா நாடும் என் நாடே! எல்லா மக்களும் என் மக்களே!! நான் ஓர் உலக மகன்!!!” என்றானே, ஒருவகையில் அவனும் தமிழனே!
வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர், அதே காலகட்டத்தில் அதே சமுதாய விடுதலைக்கும், சமத்துவத்துக்கும் பாடுபட்ட பெரியாரும் தமிழர்களே!
ஆம், இதைத்தானே நம் பண்டைத் தமிழனும் கனிவாய்”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று எடுத்துரைத்துவிட்டு சென்றிருக்கிறான்! அதுவே நம் வாழ்வியல் முறை. இதை விடுத்து,
“துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் — என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென்று உமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் — சிலர்
ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்!”
அன்றேல், நாம் தமிழரல்லர்!