நெருக்கடி நிலை கால சவால்களைச் சமாளித்த தலைவர் மணியம்மை

தமிழக மக்களின் தன்மானத்தைத்தட்டி எழுப்பியது திராவிட கழகம் என்பது வரலாறு. அது முன்னெடுத்த சமத்துவ அரசியல் இயக்கத்தை வழிநடத்தச் சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர் எனப் பெரியாரால் அடையாளம் காணப்பட்ட தலைவர் மணியம்மையார். அவரது துணிச்சலையும், அரசியல் நன்மைக்காகக் கொள்கையைச் சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர் என்ற பண்பையும் பெரியார் சரியாகவே அறிந்து தனது துணையாகவும் தனக்குப்பின் இயக்கத்தின் தலைவராகவும் கருதியதை மணியம்மையாரும் தனது செயல்களால் நிரூபித்துக் காட்டினார்.

தியாகத் திருவுருவம் – தந்தை
ஆயுளின் இரகசியம்!
தீயில் மெழுகாம் – இந்தத்
தாயின் கதையடா!
போராட்ட குணமடா – நெஞ்சம்
புலிவாழும் குகையடா!
ஈரோட்டு எரிமலையில் – பூத்த
எழுச்சியின் சின்னமடா!
என்று கவிஞர் பூங்குன்றனாரால் மணியம்மை மீது எழுதப்பட்ட வரிகள் மணியம்மையாரின் குணநலன்களைச் சிறப்பாக விவரிக்கிறது.
திராவிட இயக்கம் தந்த பல பெண் ஆளுமைகளில் முதன்மையானர் மணியம்மையார் எனலாம். தள்ளாத வயதிலும் போராட்டம் மிக்க பெரியாரின் வாழ்வில் அவரது உயிருள்ள கைத்தடியாகப் பக்கபலமாக இருந்து பணியாற்றியவர் மணியம்மையார். பெரியார் மறைந்த பின்னர் (டிசம்பர் 24,1973), பெரியாரின் ஏற்பாட்டின்படி 1974 ஜனவரி 6 ஆம் தேதி மணியம்மை திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். தான் மறையும் வரை பெரியார் போட்டுத் தந்த பாதையில் வழித்தடம் மாறாமல் நடந்தார் மணியம்மை. அவர் தலைமைப் பொறுப்பேற்றுக்கொண்ட காலகட்டம் இந்திய அரசியலில் இருண்டகாலம் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் காலத்தின் துவக்கம். மக்களாட்சி முறையைக் கேள்விக்குறியாக மாற்றும் வகையில் மையத்தில் ஆட்சி செய்த இந்திரா காங்கிரஸ் பல அதிரடி நடவடிக்கைகளைத் துவக்கிய காலம். அதன் உச்ச காட்டமாக ஜூன் 25, 1975 – மார்ச் 21, 1977 இடைப்பட்ட காலம் நெருக்கடி நிலை என்ற அவசரகால ஆட்சிமுறை பிரகடனப் படுத்தப்பட்டது. இந்நிலை சீனப் போருக்கும், பாகிஸ்தான் போருக்கும் அடுத்து மூன்றாம் முறையாகச் சுதந்திர இந்தியாவில் பிரகடனப் படுத்தப்பட்ட அவசரகால நிலை. ஆனால் அக்காலமோ நாடு போரில் ஈடுபட்டிராத ஒரு காலம். தன்னை எதிர்ப்போரை ஒடுக்க, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது வால் நெருக்கடி நிலை பிரகடனம் படுத்தப்பட்டது.
இந்த 21- மாத காலத்திற்கு இந்தியாவில் கேட்பாரில்லாமல் அடக்குமுறை தலைவிரித்தாடியது. இந்திய விடுதலைக்காகப் போராடிய நாட்டின் நலம் விரும்பிகளே எதிர்ப்புக் குரல் கொடுத்தமைக்காகவும், எதிரணியில் இருந்த பெருந்தலைவர்களை முடக்குவதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கலாம் என்ற எண்ணத்திலும் இரவோடு இரவாகப் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்கள். கேள்விமுறையின்றி கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகள் பட்டியல் மிக நீளமானது. ஜெயப்பிரகாஷ் நாராயண், வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சரண் சிங், மொரார்ஜி தேசாய், மது தண்டவதே, ராமகிருஷ்ண ஹெக்டே, தேவே கவுடா, அருண் ஜெட்லி, சுப்பிரமணியன் சுவாமி, லாலு பிரசாத் யாதவ் எனப் பிற மாநிலங்களில் உள்ளவர்கள் இதில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள். சுமார் 3 லட்சம் பேர் இவ்வாறு ஏதேதோ காரணத்தைக் கூறி நாட்டின் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியவர்கள் என்று காட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் இந்தியாவில் நெருக்கடி நிலை காலத்தில் ஆட்சியிலிருந்த திமுக அரசும் கலைக்கப்பட்டது. திமுக உறுப்பினர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். திராவிடக்கழக தலைவராக இருந்த மணியம்மையாரும் அக்காலத்தில் சிறை சென்றவரே. தன்னை கவிழ்க்கக் கூடிய தேர்தலைத் தள்ளிவைக்க இந்திராகாந்தி கையாண்ட முறை இது. அவசர நிலை காலத்தில் நேர்ந்த நிகழ்வுகள், அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு எழுதிய ஒரு கட்டுரை நாடு இருந்த நிலையை நன்கு படம் பிடித்துக் காட்டும். இத்தகைய காலகட்டம்தான் பெரியார் மறைவுக்குப் பின்னர் மணியம்மையார் இயக்கத்திற்குப் பொறுப்பேற்ற காலம். பெரியாரின் கொள்கைகள், முழக்கங்கள், பத்திரிக்கைகள் எல்லாம் மணியம்மையாரின் கொள்கை தவறா நேர்மையால் தொய்வின்றி இக்காலத்தில் தொடர்ந்தன. அப்பொழுது மணியம்மை தனது ஐம்பது வயதுகளின் பிற்பகுதியிலிருந்தார்.
மக்களாட்சியின் காவலாக இருக்க வேண்டிய பத்திரிக்கைகள் பலவும் அக்காலத்தில் அடக்கப்பட்டன. அரசை எதிர்க்கக்கூடிய பத்திரிக்கைகள் தணிக்கையின்றி வெளிவர இயலாத சூழல் உருவானது. மத்திய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஊடகத்துறையில் எழுதப்பட்ட முதல் தலையங்கம் மணியம்மையுடையது. ஆகஸ்ட் 7, 1975 இல் நெருக்கடி நிலைக்கு எதிராக விடுதலையில் தலையங்கம் தீட்டினார். அவர் ஏற்கனவே ‘குடியரசு’ இதழில் 1958 ஆம் ஆண்டு, ஜனவரி 19 ஆம் நாளில் வெளியான, ‘இளந்தமிழா புறப்படு போருக்கு’ என்ற கட்டுரையை எழுதியவர்தான். அக்கட்டுரை இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் விதத்தில் உள்ளது என அரசாங்கம் வழக்கும் தொடுத்தது. பதிப்பாசிரியர் என்கிற முறையில் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டது. அதைக் கட்ட மறுத்து 15 நாள் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்தான் மணியம்மை. இருப்பினும்,தயக்கமின்றி அடக்குமுறை நிறைந்த நெருக்கடி நிலை காலத்திலும் தனது போராட்டக் குணத்தையும் துணிச்சலையும் சற்றும் கைவிடாது அதை எதிர்த்து தலையங்கம் எழுதினார். திராவிட கழகத்தின் விடுதலை ஏடு ஒவ்வொரு பதிப்பும் மத்திய அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. பத்திரிக்கை எழுத்துப்பணி முடிந்தவுடன் அதை சாஸ்திரிபவன் பரிசீலித்து அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இதை ஏற்காத மணியம்மை இந்நிலை தொடர்ந்தால் அரசு கடுமையான விளைவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற வரியை நீக்க வேண்டும் என்று தணிக்கை செய்தோர் அறிவுறுத்தினர். பெரியாரின் உயிர் மூச்சான கொள்கை வாசகத்தை நீக்கச் சொன்னது மணியம்மையை வெகுண்டெழச் செய்தது. அப்படியானால் “தமிழ்நாடு பார்ப்பனருக்கே” என்று எழுதிக் கொண்டு போய் கொடுங்கள் என்று பத்திரிக்கை ஊழியர்களிடம் உத்தரவிட்டார் மணியம்மை.
இத்தகைய நெருக்கடியான சூழலில் அடுத்து மத்திய அரசால் திராவிட கழகமும் கூட தடை செய்யப்படலாம் என்ற நிலை உருவாவதை மணியம்மை புரிந்து கொண்டார். இதனை எவ்வாறு எதிர்கொள்வது என நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி மத்திய அரசின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்த க. இராஜாராம் அவர்களை ஆலோசனை கேட்டு அணுகினார். க. இராஜாராம் பெரியாரின் தனிச் செயலாளராகவும் பணியாற்றியவர். டெல்லியிலும் தொடர்புகளுடன் இருந்தவர். அவர் அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த பிரமானந்த ரெட்டியிடம் நிலைமையைக் கூறலாம் என அவருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். பொறுமையுடன் மணியம்மையார் கூறியவற்றைக் கேட்ட பிரமானந்த ரெட்டி, இந்திரா காந்தியைச் சீண்டிவிடக்கூடிய பார்ப்பன எதிர்ப்பு , கடவுள் மறுப்பு, தமிழ்நாடு தமிழருக்குப் போன்ற கருத்தாக்கங்களைப் பொதுக்கூட்டங்களில் பேசுவதைத் தவிர்த்து நிலைமையைச் சமாளிக்கலாம் என்ற ஆலோசனை கூறுகிறார். மணியம்மையோ இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளே இவை. இவற்றைக் கைவிட வேண்டுமெனில் இயக்கம் என ஒன்று எதற்கு. திராவிட கழகத்தை மத்திய அரசு தடை செய்யும் முடிவை எடுப்பதாக இருந்தால் தடை செய்து கொள்ளட்டும் என்று துணிச்சலுடன் மறுமொழி கூறி உள்துறை அமைச்சருடன் நிகழ்த்திய சந்திப்பை முடித்துக்கொண்டார்.
நெருக்கடி உள்ள சூழ்நிலையில், சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் தலைவருக்கு உரிய பண்புகள் (Leadership in Crisis) எனப் பல நிர்வாக இயல் ஆய்வு முடிவுகள் கூறுவது: துணிச்சல் அல்லது அச்சமின்மை; உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பது; எத்தகைய இடையூற்றிலும் உறுதியான நம்பிக்கையுடன் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவது; எதிர்ப்புகளையும் ஏளனங்களையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் கொண்ட கொள்கையில் குறியாக இருப்பது; மக்களின் எதிர்பார்ப்பை ஏற்றுப் பொறுப்புடன் செயல்படுவது என்ற இந்த ஐந்து பண்புகளையும்தான். மணியம்மை சிறுவயதிலிருந்தே அத்தகைய பண்புகளைக் கொண்டிருந்தவராகத்தான் இருந்தார் என்பதை அவரது வாழ்க்கை வரலாறும் காட்டுகிறது.
காந்திமதியாகப் பிறந்து, அரசியல் மணி என்று தமிழறிஞரும் திராவிட இயக்கத்தலைவருமான அண்ணல் தங்கோ அவர்களால் பெயர் சூடப்பெற்றார். கே.அரசியல் மணி என்பதை கே.ஏ. மணி எனச் சுருக்கமாக அழைக்கப்பட்டு, பின்னர் கழகத் தோழர்களால் மணியம்மை என்று அன்புடன் குறிப்பிடப்பட்டார். தனது தந்தை கனகசபையால் சுயமரியாதை சிந்தனைகளுடன் வளர்க்கப்பட்டதாக மணியம்மை குறிப்பிட்டுள்ளார். 1930களில் தமது 16 வயதில் பள்ளியில் கடவுள் மறுப்புக் கொள்கை பேசியவர் மணியம்மை, இயக்கத்துடன் உள்ள தொடர்பின் காரணமாகப் பள்ளியிலிருந்து ஒருமுறை நீக்கப்பட்டு மீண்டும் பள்ளி அவரை கல்வியைத் தொடர அனுமதித்தது. உடல் நலிவுற்று இருந்த பெரியாரின் கடிதத்தைக் கண்ட மணியம்மையின் தந்தை மகளைக் கல்லூரியிலிருந்து அழைத்து வந்து பெரியாரிடம் பணிவிடை செய்ய ஒப்படைத்தார். மணியம்மையின் சம்மதம் அறிந்த பின்னர் பெரியாரும் அவரை தனது உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். தமது தந்தையின் மறைவிற்குப் பிறகு, 1943 ஆம் ஆண்டு முதல் கழகத் தொண்டராகவும் மணியம்மை திராவிட இயக்கப் பணிகளில் பங்கேற்க முடிவு செய்து இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். சமயப்பணியாளர்கள் போல, ஆண்களும் பெண்களும் திருமணம் தவிர்த்த சமயத் துறவியர் போல, இயக்கத் தோழர்களும் மக்களுக்காகப் பொதுநலப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கருதியவர் மணியம்மை.
இராமலீலா என்ற பார்ப்பன அடிப்படை விழாவை எதிர்க்கும் பொருட்டு, பெரியாரின் நினைவு நாளையொட்டி, 1974 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள், “இராவணலீலா” நடத்தி அதில் 18 அடி உயர இராமன், 17 அடி உயர இலட்சுமணன், 16 அடி உயர சீதை உருவ பொம்மைகள் கொளுத்த ஏற்பாடுகள் செய்தார். ‘இராவணலீலா’ தமிழ்நாட்டின் தேசிய விழா என்றும் அறிவித்தார். இப்போராட்டத்தை நிறுத்துமாறு மத்திய அரசு தமிழகத்தை ஆட்சி செய்த கலைஞர் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. “இராவணலீலா” வெற்றிகரமாக நடத்தப்பட்டு இராமர் சீதை இலட்சுமணன் பொம்மைகள் கொளுத்தப்பட்டு “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக் கங்களுடன் வெற்றியுடன் நிறைவு பெற்றது. இதற்காகச் சிறைத்தண்டனை பெற்றார் மணியம்மை. இவ்விழா நாடுமுழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. “தாழ்த்தப்பட்ட சம்பூகன் தவம் செய்தான் என்பதற்காக அவனை வெட்டிய, இராமனின் உருவத்தைத் தீயிட்டுக் கொளுத்திய நிகழ்ச்சிக்கு எங்களுடைய கழகத்தின் சார்பாகப் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று பஞ்சாப் அம்பேத்கரிய அமைப்பின் ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தவிர்த்து, 1977 ஆம் ஆண்டு தமிழகம் வந்த பிரதமர் இந்திராகாந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக்கொடி காட்டிக் கைதாகி சிறை சென்றார் மணியம்மை. பெரியார் தலைமையிலிருந்த பொழுதே சாதி ஒழிப்புப் போராட்டங்களிலும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும் பலமுறை பங்கேற்று சிறை சென்றவர்தான் மணியம்மையார் என்பதும் வரலாறு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என பெரும் போராட்டம் நடத்தியவர். தொடர்ந்து அடுத்து வந்த எம்ஜிஆர் ஆட்சியில், 1978 ஆண்டில் தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அரசிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். தமிழக அரசின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி அரசு ஊழியர்களுடன் தக்க உடன்பாடு காணவேண்டும் என அரசினை வலியுறுத்தி, ‘என்.ஜி.ஓ. பிரச்சனையும் அரசின் விசித்திர அணுகுமுறையும் ‘ என்னும் தலையங்கத்தினை விடுதலை இதழில் மார்ச் 9 ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில் அவர் எழுதிய தலையங்கமே மணியம்மை தம் வாழ்நாளில் எழுதிய இறுதித் தலையங்கமாய் அமைந்தது. அரசு ஊழியர்கள் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்து போராட்டமும் கைவிடப்பட்ட ஆறுநாட்களில் அவர் மறைந்தார்.
திராவிடர் கழகத்தின் தலைவராக நான்காண்டுகள் என்ற குறுகிய காலமே அவரது தலைமையை இயக்கம் பெற்றது. கெடுவாய்ப்பாகச் சிறையிலிருந்து வந்த பிறகு உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர், மாரடைப்பின் காரணமாக தமது 58 ஆவது வயதில், மார்ச் 16 ஆம் தேதி 1978 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். இருப்பினும் தக்கவாறு திட்டமிட்டு தாம் இறப்பதற்கு முன்பே, பெரியார் சுயமரியாதைப் பிரசார நிர்வாகக் குழுவின் செயலாளர் பதவியைத் தொடர திரு கி. வீரமணி அவர்களை நியமனம் செய்கிறேன் என்று எழுதி வைத்திருந்தார் அன்னையார். அவ்வாறே, தனக்குக் கிடைத்த சொத்துக்களையும், அதன் மூலம் வரும் வருமானங்களையும் ‘பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளை’ என்ற பெயரால் ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தி மக்கள் பணிக்கு வழிவகுத்திருந்தார். “நான் ஒரு இலட்சியத்திற்காகவே வாழ்கிறேன். உன்னையும் ஒரு இலட்சியவாதியாக ஆக்கவே விரும்பு கிறேன்,” என்று பெரியார் அவரிடம் கூறி அவர் மீது நம்பிக்கை வைத்ததை மணியம்மையார் பொய்யாக்கவில்லை. குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர், இயக்கத்தின் தலைவர், இயக்கத்தை தன் வாழ்க்கையாகவே ஏற்றுக் கொண்டவர் என்ற பன்முக பொறுப்பேற்று வழிநடத்தியவர் மணியம்மை. உலகிலேயே ஒரு நாத்திக புரட்சி இயக்கத்துக்கு ஒரு பெண் தலைமையேற்றார் என்ற சிறப்பும் இவருக்குண்டு. என்றாலும் அந்தச் சிறப்புகளைக் குறிப்பிடப்படாமல் பெரியாரை மணந்தது மூலம் தமிழக அரசியல் களத்தில் ஒரு திருப்புமையமாக இருந்தவர் என்றே இன்றும் பலர் கூறிவருவது அவரது பங்களிப்பை மறைக்கும் விதமாகவே உள்ளது.
குறிப்பு: கட்டுரைக்கான உதவி; அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவையும் அனைத்துலக மகளிர் தினத்தையும் ஒருங்கிணைத்து நடத்தப்படப் பொதுக்கூட்ட உரைகள் மற்றும் ந.க. மங்களமுருகேசன் எழுதிய “தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்” என்ற தென்றல் பதிப்பகம் வெளியீடு செய்த நூலின் வழி கிட்டிய தகவல்கள்.