பெரியார் நெஞ்சில் தைத்த முள்

“எனக்கு 79 வயதாகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும். இல்லையென்றால், நம் மக்களுக்கு உணர்ச்சியூட்டுவிட்டுச் சாகவேண்டும். இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது. சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம்’ என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப்புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம்“ என்று தந்தை பெரியார் 1957 நவம்பர் மாதம் 4-ஆம் நாள் தனது சட்ட எரிப்புப் போராட்ட அழைப்பில் தெரிவித்தார். பெரியார் எந்த அரசியற்சட்டப் பிரிவு , சமூகத்தில் ஏற்றத் தாழ்வினை ஏற்படுத்துகிறது என்று சொன்னாரோ, அதே சட்டப்பிரிவுகள் தான் இன்று வரை தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுத்துக்கொண்டிருக்கின்றன. தந்தை பெரியார் அவர்கள் மறைந்த போது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக இயலவில்லை, தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளுடன் அவரைப் புதைக்கிறோம் என்றார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை நீக்க அரும்பாடுபட்டு, செயற்கரிய செயல்கள் பல புரிந்த தலைவர் கலைஞர் மறைந்த நிலையிலும், கேரளாவில் பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகர்களாக அமர்த்தப்பட்டிருக்கும் வேளையிலும் இவ்வழக்கு தமிழகத்தில் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது காலத்தின் தேவையாகும். தந்தை பெரியார் இந்தியாவில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் சட்டப்பாதுகாப்புடனும், சாஸ்த்திரப் பாதுகாப்புடனும் நிலைநிறுத்தப்படுகிறது என்று திண்ணமாக  எண்ணியதன் விளைவாகவே, சாதியொழிப்பிற்குச் சட்டமாற்றங்களும், சாஸ்த்திர நம்பிக்கை உடைப்பும் தேவை என்று தீவிரக் களப்பணியாற்றினார். அரசியறசட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு , சாதிப் படிநிலைகள் ஒழிப்பு கூறப்படவில்லை என்றும், சமூகமாற்றம் , சமதர்மம் என்பது சாதிகளை ஒழித்தால் தான் நிகழும் என்றும் கருதிய பெரியார், அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார், அந்தச் சட்டப் பிரிவுகளுக்காக இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார். தந்தை பெரியார் அவர்கள் 1957 இல் சட்டஎரிப்புப் போராட்டம் அறிவிக்கும்வரை , இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அன்றைக்குத் தமிழகத்தை ஆண்ட காமராஜர் தலைமையிலான அரசு சட்ட மாறுதல்களைக் கொணர அவசரக்கூட்டங்கள் நடத்தி, மிகத் தீவிரமாக வேலைகள் செய்தது – சாதிய ஏற்றத்தாழ்வினைத் தூக்கிப்பிடிக்கும் அரசியல் சட்டத்தினைத் மாற்றுவதற்காக அல்ல ; அரசியல் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பதைத்  தீர்மானிப்பதற்காக. அதன் பிறகுதான் தேசிய சின்னங்கள் அவமானப்படுத்துதல் தொடர்பான குற்றத்திற்குத் தண்டனைகள் தீர்மானிக்கப்படுகின்றன. கடவுள் இல்லை என்று தன் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டங் களும், அனைத்து சாதி யினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று நடத்திய போராட்டங் களும்  சாதியொழிப்புத் தளத்திலிருந்து நடத்தப் பட்டவை. சாதியப் படிநிலைகள் காக்கப்படும் கருவறைகளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று ஒலித்த பெரியாரின் குரல், மனித உரிமை மீறலுக்கு எதிரான ஒரு கலகக்குரல் என்றே நாம் கொள்ள வேண்டும். தற்போது கேரளாவில் நடைபெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் மிகுந்த வரவேற்புக்குரியது. திராவிடக் கட்சிகள் சாதிக்க முடியாததை கேரளம் சாதித்திருக்கிறது என்றும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் சிலர் வழக்கம்போல் கூவிக்கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் நடைபெற்ற சமூக மாற்றத்தினைத் மனமகிழ்வோடு வரவேற்கும் அதே வேளையில், தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த தளமும், கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த தளமும் வெவ்வேறானவை என்பதை நாம் உணரவேண்டும். 2017 நவம்பர் மாதம் Economic and Political Weekly இதழில் வெளியான When Anybody Can Be Brahmin என்ற கட்டுரை ” The appointment of Dalit priests to temples in Kerala has been engendered by the growing departure of Brahmin youth from priestly jobs, coupled with existing aspirations of the lower castes to become priests in Brahminical temples. This move is aimed at the formation of a Cohesive Hindu community through the reconfiguration of caste practices, not the eradication of caste” என்று தெரிவிக்கிறது. தமிழகத்தில் தந்தை பெரியார் எழுப்பிய கோரிக்கை சாதி ஒழிப்பிலிருந்து எழுப்பப்பட்டது ஆனால் கேரளாவில் அவ்வாறு நடைபெறவில்லை என்பது தான் இக்கட்டுரையின் கருத்து. நாம்  உற்று நோக்கவேண்டிய வேற்றுமையும் இதுவேயாகும். மேற்கண்ட கட்டுரையின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையில், யதுகிருஷ்ணா என்ற பட்டியல் சாதி அர்ச்சகரை அறிமுகம் செய்தபோது, அவரின் வேத ஆசிரியர், யதுகிருஷ்ணாவினை “For all purposes he is a Brahmin now” என்று சொல்கிறார். ஆக, கரு வறைக்குள்ளிருக்கும் பார்பனர் களுடன் சூத்திரப் பாப்பனர்களையும் நிறுத்தி, சாதிய ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்த ஏற்படுத்தப் பட்டிருக்கும் ஒரு அணுகுமுறையோ என்ற ஐயப்பாடு நமக்குள் எழுவதை நம்மால் தடுக்க இயலவில்லை. கேரளாவில் வேதங்களை ஏற்றுக்கொண்டு, சாதிய ஏற்றத்தாழ்வு களை நீக்குவதற்கு ஆன்மீகத் தீர்வினை முன்னிறுத்தியவர்களில் முக்கியமானவர் நாராயண குரு. அவர் தோற்றுவித்த Sree Narayana Dharma Paripalana Yogam (SNDP) கோவில்களில் ஈழவ மக்கள் அர்ச்சகர்களாக பலகாலமாக பணியாற்றி வந்திருக்கிறார்கள். வேத முறைகளை ஏற்றுக்கொண்ட காரணத்தினால், அவர்களுக்குள் சாதியொழிப்பு என்பது மேலெழும் பாமல், தங்களை அடக்குமுறை களுக்கு உள்ளாக்கிய கேரள உயர் சாதி இந்துக்களுடனே கரம் கோர்த்துவிட்டனர். SNDP-யின் நடேசன் என்பவர்தான் கேரளாவில் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு தற்போது கிடைத்திருக்கும் மிக முக்கியத் துருப்புச் சீட்டு.

தமிழகத்தில் 1970இல் கருவறை நுழைவுப் போராட்டத்தினை அறிவித்த தந்தை பெரியார், அப்போராட்டத்திற்குக் காரணமான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற கோரிக்கையினைச் சட்டமாக்குவ தாக தலைவர் கலைஞர், தந்தை பெரியாருக்கு உறுதியளித்ததின் விளைவாக அப்போராட்டத் தினைக் கைவிடுகிறார். அதன் பிறகு, தலைவர் கலைஞர் 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பார்ப்பனர் அல்லாதோரும் பயிற்சி பெற்று,  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் கள் ஆகலாம் என்ற சட்டத்தினைக் கொண்டுவந்தார். தலைவர் கலைஞர் இயற்றிய இச்சட்டத்தினை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றத்தினை அணுகினர், பன்னிரண்டு மனுக்கள் தாக்கல் செய்த பார்ப்பனர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கி யுள்ள மதச்சுதந்திரம் – வழி பாட்டுரிமை ஆகியவற்றில் தமிழக அரசு தலையிடுவதாக அந்த மனுக்களில் தெரிவித்திருந்தனர். தந்தை பெரியார் அரசியற் சட்டத்தினைக் கொளுத்தவேண்டும் என்று எந்த சட்டப் பிரிவுகளைக் காரணம் காட்டினாரோ, அதே பிரிவுகளைத் தான் பார்ப்பனர்கள் துணைக்கு அழைத்து வந்திருந்தனர். வழக்குத் தொடுத்திருந்தவர்களில் சேசம்மாள் என்ற பார்ப்பனரும் ஒருவர். சேசம்மாள் வழக்கு என்று அந்த வழக்கு இன்றளவும் வழங்கப் படுகிறது. அவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமைக்கோர முடியாது என்றும், அதே வேளையில், அர்ச்சர்கர் நியமனத்தில் ஆகம விதிகள் மீறப்பட்டால், அச் சட்டத்தினை எதிர்த்த பார்ப்பனர் கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பினைப் பற்றி தந்தை பெரியார் “ஆபரேஷன் வெற்றி ; நோயாளி மரணம்” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தலையங்கத்தை விடுதலையில் எழுதினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசியற் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானத்தையும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் உலகநம்பி மூலம் நாடாளுமன்ற தனிநபர் மசோதாவினையும் 1974 இல் தலைவர் கலைஞர் கொண்டுவந்தார். அதன் பிறகு, தி.மு.க வில் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பிளவு , நெருக்கடி நிலை, தலைவர் கலைஞர் ஆட்சிக் கலைப்பு என்று தமிழகத்தின் சமூக நீதி முன்னேற்றத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் அடுத்தடுத்த தடைக்கற்களை மத்திய ஆளும்வர்க்கம் ஏற்படுத்தியது.

அதற்குப் பின்னர் அமைந்த தமிழக அரசு, திராவிடக் கட்சியின் அரசாகவே இருந்தாலும், அதன் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் ” கடவுள் இல்லையென்று சொன்ன பெரியார் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டு மென்று கூறினாரா? ஆர்ச்சரியமாக இருக் கிறதே” என்று அறியாமை யாகக் கேட்டதாக திராவி டர் கழகத்தின் கவிஞர் கலி. பூங்குன்றன் பதிவுசெய்திருக்கிறார். தொடர்ச்சியாக, திராவிடர் கழகம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக எம்.ஜி.ஆர் ஆட்சியில் நீதியரசர் மகாராஜன் குழு என்றொரு குழு அமைக்கப்பெற்று , ஆகம விதிகள் மீறப்படாமல் அனைத்து சாதியினரும் எவ்வாறு அர்ச்சகர் ஆகமுடியும் என்ற ஆலோசனைகள் பெறப்பட்டன. அக்குழுவின், வேத, ஆகம பயிற்சிப் பள்ளிகளை நிறுவி அதன்மூலம் அனைத்து சாதியினரையும் பயிற்றுவித்து, அர்ச்சகர் ஆக்கலாம் என்ற பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டது.

1991 இல் ஜெயலலிதா தலைமையில் அமைந்த அண்ணா.தி.மு.க அரசு வேத பயிற்சி பள்ளிகள் நிறுவப்படும் என்று அறிவித்ததனைத் தொடர்ந்து , அவை அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் எனப் பெயர்மாற்றம் செய்யப்படவேண்டு மென்று திராவிடர் கழகம் வலியுறுத்தி வெற்றியும் பெற்றது. ஆனால், அன்றைய அரசின் அறிவிப்பு, அறிவிப்பாகவே நின்றுபோனது. 2006 இல் அமைந்த தலைவர் கலைஞரின் அரசு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை நிறுவியதுடன் 69% விழுக்காடு அடிப்படையில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அரசாணை வழங்கியது. இதனை எதிர்த்தும் பார்ப்பனர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவச் சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில் முதலில் இடைக்காலத் தடை வழங்கிய நீதி மன்றம், பின்னர் 2015இல் தமிழக அரசின் சட்டத்திற்கு ஆதரவாகத்  தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகள் கழித்து மாரிச்சாமி என்ற பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர் தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மதுரை அழகர் கோவிலுக்குட்பட்ட  அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக பணியமர்த்தப்பட்டார். தமிழக அரசின் முதல் பயிற்சி மாணாக்கரான 207 பேர்களில் ஒருவருக்கு மட்டுமே பணியாணை கிடைத்திருக்கிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மற்ற மாணாக்கரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மூன்றாண்டுகள் கடந்தும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டும், இன்னும் அதனைப் பரவலாக செயல்படுத்தாமல் இருப்பது தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையின் காரணமாகவும், தேவையற்ற பயத்தின் காரணமாகவும் ஆகும்..

ஆகமங்கள் என்று பார்ப்பனர்கள் செய்யும் புரட்டுக்குத் தமிழக அரசு செவிசாய்ப்பதோ, மிரளுவதோ ஏற்றுக்கொள்ளக் கூடியது அன்று. 2007 இல் தலைவர் கலைஞர் அமைத்த நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு ஆகமங்கள் என்பது பார்ப்பனர்கள் செய்யும் புரட்டு என்று தரவுகளுடனும் சான்றுகளுடனும் நிறுவியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலிலுள்ள நாற்பத்தியொரு அர்ச்சகர்களில் நால்வருக்கு மட்டுமே ஆகமங்கள் தெரியுமென்றும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நூற்றிப்பதினாறு அர்ச்சகர்களின், வெறும் இருபத்தியெட்டு பேருக்கு மட்டுமே ஆகமங்கள் தெரியுமென்றும் தெரிவித்திருக்கிறது. வடமொழி அறிந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் ஒரு முறை பார்ப்பன வைதீக முறையில் நடைபெற்ற திருமணத்தில் பங்குகொள்ள சென்றிருந்தார். அங்கே பார்பனரொருவர் சொல்லும் மந்திரத்தினைக் கேட்டு, திகைத்து, அப்பார்ப்பனரை உடனடியாக மந்திரத்தை நிறுத்தச் சொன்னார். பின்னர் கூட்டத்தினைப் பார்த்து, அப்புரோகிதர் இறப்புக்கு சொல்லும் மந்திரத்தைச் சொல்வதாகச் சொல்லி, அப்பார்ப்பனரின் புரட்டினை அம்பலப்படுத்தினார். ஆகவே, தந்தை பெரியார் வழி வந்தவர்களுக்கு ஏ.கே. ராஜன் குழுவின் கண்டுபிடிப்புகள் வியப்பினைத் தரவில்லை என்றே சொல்லவேண்டும்.

தலைவர் கலைஞர் சிதம்பரம் நடராசர் கோவிலை அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சிகளும் இன்று நீதிமன்றத்தின் துணைகொண்டு முறியடிக்கப் பட்டிருக்கிறது. அவ்வழக்கில், சிதம்பரம் நடராசர் கோவிலின் தீட்சிதர்கள், தாங்கள் மூவாயிரம் பேர் கைலாயத்திலிருந்து தில்லைக்கு வந்ததாகவும், அப்போது ஒருவர் மறைந்ததாகவும், பின்னர் ஒலித்த அசரீரி தான் தான் அந்த ஒருவர் என்று சொன்னதாகவும், தாங்கள் வேறு, சிவபெருமான் வேறு அன்று, இருவரும் ஒன்றே என்றும் பிரமான வாக்குமூலம் தந்தத்தின் அடிப்படையில் அத்தீர்ப்பு வழங்கப் பட்டது. இந்து மதக் கடவுளர்கள் எல்லாம் இந்திய சட்டத்தின் படி ஒரு “Legal Entity” என்றும் அவர்கள் “Minor” என்றும் அவர்களுக்கு நிலவுரிமை உண்டு என்றும் பார்க்கப்படுகிறது. ஆகவே தான், தான் இராமனின் பாதுகாவலர் (Guardian) என்றொருவர் தொடர்ந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம், அயோத்தி வழக்கில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தினை ராமருக்கு வழங்கியது. தற்போது நடைபெற்ற சபரி மலை அய்யப்பன் வழக்கில் கூட, அய்யப்பன் ஒரு மைனர், அவர் ஒரு பிரம்மச்சாரி, அவருக்கு பெண்களைப் பார்ப்பதற்குப் பிடிக்கவில்லை என்று தேவஸ்தானம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்து அறநிலையத்துறை யின் கட்டுபாட்டிலிருக்கும் கோவில்களை யெல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்குப் பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியும் கூட்டாக முயற்சி செய்து வருகின்றனர். அதனால் தான் தமிழக அறநிலைத் துறை கட்டுப் பாட்டிலிருக் கும் கோவில் களுக்குச் சொந்தமாக 4.7 லட்சம் ஏக்கர் விவசாய நிலங் களும், 2.6 கோடி சதுரடி கோவில் கட்டடங் களும்,  29 கோடி சதுரடி நகர நிலங்களும் இருப்பதாக சுப்ரமணியன்சாமி இந்து வில் கட்டுரை எழுதுகிறார். அவர்களின் நோக்கம், இந்தச் சொத்துகளும், கோவில்களையும் நிறுவனப்படுத்தி, அதன்மூலம் அரசியல் செய்வதே ஆகும். திருமலை நாயக்கர் காலத்தில், இராமப்பையன் என்ற பார்ப்பனர் மூலம் பழனி முருகன் கோவிலினைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர்கள் பார்ப்பனர்கள். அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் கூற்றின்படி மலைவாழ் மக்களின் கடவுளைப் புராணப் புரட்டுகளின் மூலம் அய்யப்பன் என்றும், காளி கோவிலினைத் திருப்பதி வெங்க டாசலபதி என்றும் மாற்றியவர்கள் பார்ப்பனர்கள். ஆகவே, இந்து அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள் என் பதினை நாமறிவோம்.

2002இல் வெளியான தீர்ப்பினை 16 ஆண்டுகள் கழித்து செயல்படுத்தியிருக் கிறது கேரளம். கேரளாவில் நடந்தது போல், அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத் தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூகநீதியாகும். அதனை நிலைநாட்ட தமிழக அரசு  உடனடி யாகச்  செயல்பட வேண்டுமென வலியுறுத்துவோம். தந்தை பெரியார் தன்னுடைய வாழ்நாளின் இறுதிப்பகுதியில் கூட தமிழர் சமூதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று 1973 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 8,9 ஆகிய நாட்களில் நடத்தினார். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கு இந்திய அரசியல் அமைப்பின் சட்டத்திருத்தமே வழி என்று உறுதிகொள்வோம்.