முத்தமிழறிஞரும்… எழுச்சித் தமிழரும்…

அரசியல் களம் எத்தனையோ விசித்திர, வியப்பிற்குறிய ஆளுமைகளைப் பார்த்திருக்கிறது ஆனால் அரசியல் சூத்திரங்களையும் , தத்துவங்களையும் பிறப்பித்து மற்ற ஆளுமைகளுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்தவர்கள் சிலர் அவற்றில் மிக முக்கிய ஆளுமை முத்தமிழறிஞர் கலைஞர் என்றால் மிகையல்ல. மிகச் சிக்கலான சூழலில் திக்குதிசை அறியாது என்னசெய்வதென்று தெரியாமல் நாடே தவித்துக் கொண்டிருந்த வேளையிலும் சாதுர்யமாக முடிவெடுக்கும் வல்லமை பொருந்தியவர் கலைஞர் மட்டுமே. அரசியல் மட்டுமல்லாமல் கலை , இலக்கியம் போன்றவற்றிலும் தனது வெற்றி முத்திரையைப் பதித்த பன்முகத் திறமை கொண்ட கலைஞரிடம் அரசியலையும் தாண்டி தோழமை கொண்டவர்கள் பலர். சிலர் அரசியல் களத்திற்கு தொடர்பில்லாதவர்கள், ஆனால் அரசியல் களத்தில் மாற்று கட்சியிலிருந்தாலும் கலைஞர் மீது தீராது பற்றுக் கொண்டு தனது தந்தையைப் போன்று நட்புறவு கொண்டவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன். முத்தமிழறிஞருக்கும், எழுச்சித் தமிழருக்கும் இடையேயான கொள்கைப் பிணைப்பையும், நட்பையும் பற்றித்தான் இக்கட்டுரை விவரிக்கிறது. பொதுவாக தலித் தெருக்களில் அரசியல் செய்ய விரும்புவோர் முதலில் அவர்கள் கொண்டு வரும் அரசியல் அடையாள அட்டை அம்பேத்கரின் புகைப்படமும் அவர்கள் மேலோட்டமாக படித்து தெரிந்து கொண்ட புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளும்தான். திராவிட கட்சிகளின் துரோகம் என்ற பட்டியலையும் , தலித்திய தலைவர்களை ஒடுக்கியவர்கள் என்ற பெரும்பட்டியலையும் கூடவே கொண்டு வருவார்கள். ஆனால் முதல்முறையாக தலித்தெருக்களில் பெரியார், அம்பேத்கர் என்ற இரண்டு ஆளுமைகளையும் ஒருசேர ஒன்றிணைத்து திராவிட சித்தாந்தத்துடன் எதார்த்த அரசியல் பேச வந்தவர்தான் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன். மேடைத்தோறும் முழங்கிய இடிமுழக்க பேச்சைக்கேட்டு அவரின் கொள்கை, கோட்பாட்டை நோக்கி ஈர்க்கப்பட்ட பதின்பருவ இளைஞர்களில் நானும் ஒருவன். திருமாவின் சாதியொழிப்பிற்கு எதிரான பேச்சு, எழுத்து, களச்செயல்பாடுகள் அனைத்திலும் பெரியாரும், அம்பேத்கரும்தான் பளிச்சிட்டார்கள். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடுவதே பெரும் சவாலாக இருந்த காலகட்டத்தில் மூர்க்கமாக குரல் கொடுத்து விடாபிடியாக தேர்தலில் போட்டியிட வைத்தார். மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்ற தேர்தல்களில் தலித் வேட்பாளர்கள் போட்டியிடவே அஞ்சி ஒதுங்கும் பொழுது அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்து வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடவும் வைத்தார். அவ்வாறு தேர்த்தலில் போட்டியிட்டு வென்றதால் சாதியவாதிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டவர்தான் மேலவளவு முருகேசன், இவர் அடிப்படையில் திமுக உறுப்பினர். அன்றைய காலகட்டத்தில் அரசியல் சூழலால் திமுக இக்கொலையைக் கண்டிப்பதன் மூலம் மற்ற சாதி பகையை பரிசாக பெறுவதை தவிர்த்தது. இக்கொலையை கண்டித்து பெரும் போராட்டத்தை கையிலெடுத்தார் திருமா. மதுரையே அதிர்ந்தது. தனது கட்சியில் இதை கண்டிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் திருமாவின் கண்டன போராட்டம் கலைஞரை ஈர்த்தது. இதற்கு உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் திமுக- வின் பொதுக்குழுவில் முருகேசனின் கொலைக்கும் சாதியத்திற்கும் தொடர்பு உண்டா? என்று கலைஞர் கேட்கும் பொழுது, ஒரு திமுக உறுப்பினர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று சொன்னதும் கோபத்துடன் நீங்கள் சொல்வது உண்மையென்றால் உளவுத்துறையை கலைத்துவிடலாம் என்று சொன்னதாக தகவல். பொதுவாக ஒரு சமூகப்போராளிக்கு இன்னொரு போராளியின் போராட்ட குணம் பிடித்துபோவது இயல்பானதுதான் அதிலும் தான் ஏற்றுக் கொண்ட சித்தாந்தங்களையே ஏற்றுக் கொண்டிருக்கும் ஒருவரை பார்க்கையில் மனதிற்குள் பாசம் , பரிவு அனைத்தும் வருவது மிக இயல்பானது. இதன் அடிப்படையில்தான் 2001 சட்ட மன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகளை கூட்டணியில் சேர்த்து கொண்டதோடு மட்டுமல்லாமல் போட்டியிட பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கினார் கலைஞர். இந்த தேர்தலில் தொல்.திருமா அவர்கள் சமய நல்லூர் தொகுதியில்தான் போட்டியிட முடிவெடுத்திருந்தார் ஆனால் கடலூரில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொழுது திடீரென்று மங்களூர்( இன்றைய திட்டகுடி) தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவார் என்று அறிவித்தார். இவ்வாறு அறிவிப்பதற்கு காரணம் உளவுத்துறை மூலம் மங்களூர் தொகுதியில் திருமாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமென்பதை தெரிந்து வைத்திருந்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு. திருமாவின் தேர்தல் வெற்றியில் கலைஞரின் பங்கு மகத்தானது. இப்படியே தொடர்ந்த நட்பு நாளடைவில் மகன்  தந்தை உறவுபோல் மாறியது. ஒருவர் வார்டு கவுன்சிலராக வந்துவிட்டாலே தலித் ஆளுமைகளுடன் நட்பை துண்டிக்கும் அரசியல் களத்தில் மேடைத்தோறும்  கலைஞர் அவர்கள் தொல். திருமாவை புகழ்ந்து பேசியது ஏராளம். அதிலும் குறிப்பாக 2009 நாடாளுமன்ற தேர்தலின் பொழுது “நானும் திருமாவும் சம்பந்தி முறை, அவர் வீட்டு பெண் என் வீட்டில், என் வீட்டு பெண் அவர் வீட்டில்” என்று சொல்ல எத்தணை அரசியல் ஆளுமைகள் தயாராக இருப்பார்கள், அதுவும் தேர்தல் பொதுகூட்டத்தில். திருமாவை புகழ்ந்தால் மற்ற சாதிகளின் வாக்குகள் சிதறும் என்று கலைஞருக்கு தெரியாமலா இருக்கும்?. விடுதலை சிறுத்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருநாளில் அரசியல், கலை மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்த ஆளுமைகளை தேர்ந்த்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. இவற்றில் அம்பேத்கர் சுடர் விருது என்பது தலித்தல்லாத ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இதன் அடிப்படையில் தலித்தல்லாத ஆளுமைகளை தேர்வு செய்யும் பொழுது சிலர் விருதை வாங்குவதற்கு கூட சற்று யோசித்தது உண்டு. ஆனால் இந்திய அளவில் அரசியல் பிரபலம், மூத்த அரசியலறிஞர் கலைஞர் மிகவும் இன்முகத்தோடு இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். விடுதலை சிறுத்தைகளின் மேடையில் விருதை பெறும் பொழுது “ இந்த விருது என் தாய் வீட்டு சீதனம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இதைவிட ஒரு வார்த்தை பாராட்டுவதற்கு இருக்குமா?..இது போன்ற ஒரு வார்த்தையை மற்ற விருது வாங்கும் பொழுது உச்சரித்திருக்கிறாரா?… இதைவிட எழுச்சித் தமிழருக்கு வேறென்ன வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை வெளியிலிருந்து திமுக-வை ஆதரிக்கிறேன் என்று சொல்லும் பொழுது அருகிலே அழைத்து “நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் அங்கே ஈழத்தைப் பற்றி முழங்க வேண்டும்” என்று அறிவுரை கூறி திருமாவை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய பெருமை முத்தமிழறிஞரையே சாரும். அதேபோல தங்களை தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களெல்லாம் ஈழப்பிரச்சினையில் கலைஞரை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் பொழுதும் கூட எந்த இடத்திலும் விமர்சிக்காது , கலைஞரை விட்டுக்கொடுக்காது பேசி வந்தவர்தான் எழுச்சித் தமிழர். முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஏதாவது ஒன்றென்றால் ஓடோடி போய் பார்த்து பேசுவது, ஒவ்வொரு பிறந்த நாளின் பொழுதும் தவறாமல் சென்று அவரிடம் வாழ்த்து பெறுவது எல்லாம் சாதாரண அரசியல் நட்பு மட்டுமல்ல அதையும் தாண்டி அப்பா, மகன் உறவு போல. எழுச்சித் தமிழருக்கு தனது தலைமையில் திருமணம் நடத்தி வைக்க வேண்டுமென்ற முத்தமிழறிஞரின் ஆசை இறுதிவரை நடைபெறாமல் போனது. அரசியல் ஆசானாக இருந்த கலைஞர் இன்று இல்லை…இனி யாரிடம் சென்று ஆலோசனை பெறுவார் திருமா!…. முத்தமிழறிஞர் கலைஞரே, உங்கள் புகழ் நீடுழி வாழ்க…எழுச்சித் தமிழர் திருமா அவர்களே, நீங்கள் அரசியல் களத்தில் பெரியாரின் பிள்ளை கலைஞர் வழியில் பயணிக்க வாழ்த்துகள்….