“தேன் கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்று, ஏனென்றால் அது நிரப்பியவர்க்குப் பயன்படுவதில்லை”
“படையல் வைக்கும் பண்டங்கள் எல்லாம் ஆண்டவன் உண்பதாக இருந்தால் பக்தன் ஒரு பருக்கை கூட ஆண்டவனிடம் காட்டமாட்டான்.”
“ஆமையைக் காக்க ஓட்டைப் படைத்த இறைவன், சாலையோரங்களில் வாழும் ஏழைக்கு ஏன் ஒரு வீட்டைப் படைக்கவில்லை?”
“விவேகம் என்னும் வெள்ளி முளைத்து சாதிப் பித்து எனும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்னும் ஞாயிறு தோன்றும்.”
“தலைமீது பலாக் கனியைச் சுமந்து கொண்டு தொங்கும் கயிற்றின் மீது நிலை தவறாமல் நடப்பதுதான் இல்லற வாழ்க்கை.”
(கலைஞரிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது ?)- கோவி . லெனின் :
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த கலைஞர் , ஆதிதிராவிட நல மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, “ஆதிதிராவிட மக்கள் ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனைத் தொழ வாய்ப்புண்டு . ஆனால் ஆராதனை அபிஷேகம் செய்வதற்கு அவர்களுக்கு இன்னமும் உரிமை இல்லையே “என்றார்.
உடனே ஓர் ஆளுங்கட்சி உறுப்பினர் இடைமறித்து, “கோயிலுக்குப் போகாத கருணாநிதி இந்த அபிஷேகம் , ஆராதனைகளை எப்படி அறிந்தார்? “என்று கேட்டார், உடனே கலைஞர் “கொலை செய்தவர் தான் கோர்ட்டிற்குப் போக வேண்டும் என்பதிலை, அதற்காக வாதாடும் வக்கீல்களும் , அதைக் கேட்க நீதிபதியும் கோர்ட்டுக்கு போகத்தானே வேண்டும் “ என்று பதில் கொடுத்தார்கள்.