மாதொருபாகன் நாவலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

  • Post category:General

மாதொருபாகன் நாவலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

வணக்கம், ஒரு மொழியின் தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார். மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும் என்றும் பெரியார் விரும்பினார். மதம், கடவுள் தொடர்பற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும். அப்படியாக யாவரும் மறுக்க முடியாத அறிவியலும் சமூக மேம்பாடும் குறித்தான இலக்கியம் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை அடைய முடியும். அத்துடன் அதனைக் கையாளும் மக்களும் அறிவுடையவராவர் என்றும் பெரியார் கருதினார். பெரியாரின் இப்படியான கூற்றுகளுக்கு வலுச்சேர்க்கும் வண்ணம், படைப்பாக்கக் களத்தில் செயற்பட்டு வருபவர்தான் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள்.

கூளமாதாரி, கங்கணம், மாதொருபாகன், ஏறுவெயில் முதலான அவரது நாவல்கள் சமூகத்தின் பொதுப்புத்திக்கு அகப்படாதவற்றையும் சமூகத்தில் நிகழும் அவலங்களையும் சுட்டிக் காட்டிப் பேசுகின்றன. இயற்கைக்கு மாறாக நிகழ்த்தப்படும் சடங்கு சம்பிரதாயங்களையும் கட்டமைக்கப்பட்ட மரபுகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. அதுகண்டு அதிகார வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் பதட்டமுறுகின்றன. ஊடகமும், படைப்பாளிகளும் சுதந்திரமாகச் செயற்படுவது நாட்டிற்கு மிக முக்கியமென்பதையுணர்ந்து அதற்கான சட்டப் பாதுகாப்பினை உறுதி செய்தவர் அம்பேத்கர். அதற்கொப்ப, எந்தவொரு படைப்பாளிக்கும் தம் தனித்தன்மையோடு தங்குதடையின்றிச் செயற்படுவதில் எவ்விதக் குறுக்கீடுகளும் இடம் பெறக்கூடாதென்பதையே பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டமும் விரும்புகின்றது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள், அமெரிக்காவுக்குச் சிறப்பு விருந்திநராக வந்திருந்து, நியூயார்க் புரூக்ளின் புத்தகத் திருவிழாவில் திராவிட மொழி தமிழென அறிமுகம் செய்து, தமிழிலேயே பேசித் தமிழுக்குப் பெருமை சேர்த்தமைக்கு பாராட்டுகளை உரித்தாக்குகின்றோம். எழுத்தாளரின் உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பேசியது நம் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் கனிமொழி அவர்கள் என்பதிலும் படிப்பு வட்டம் பெருமை கொள்கின்றது.

அமெரிக்கத் தமிழர்களில் சிலர் எந்த நாவலைக் குறிப்பிட்டு அடக்குமுறையை ஏவினரோ அந்த நாவல், அமெரிக்க நேசனல் அவார்டுக்கான இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றது என்பதும் மகிழ்ச்சிக்குரியதாகும்.

தம் பணிகளைச் செவ்வனே செய்து வரும் பண்பினை மெச்சி, தம்முடைய அமைப்பின் துணைத்தலைவர்களுள் ஒருவராக பெருமாள் முருகன் அவர்களைப் பணித்துச் சிறப்புச் செய்திருக்கின்றது சர்வதேச எழுத்தாளர் அமைப்பு (PEN International). அதன் நிமித்தம், சக தமிழரும், சக சமூகச்சீர்திருத்தக் களப்பணியாளருமான எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா

http://www.nationalbook.org/nba2018-tl-murugan-one-part-woman.html#.W7OM32QpB-E