உலக மகளிர் தினத்தைச் சிறப்பாகவும் பெருமையாகவும் கொண்டாடி முடித்த இரண்டு நாட்களுக்குள் நம் தலையில் இடியாக இறங்கியுள்ளது, பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பணிபுரியும் பெணகள் என இளம் பெண்களையும் பாலியல் வன்முறைக்குப்படுத்தியிருக்கும் அந்த கொடூர செய்தி. அரசியல்,பணம்,பதவி,சாதி, பாலினம் உள்ளிட்ட அனைத்து ஆதிக்கமும் ஒன்றாகச் சேர்ந்து இருநூறுக்கும் மேற்பட்ட இளம்பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல கடுமையாகத் தண்டிக்கக்கூடிய செயலாகும்.
பெண் என்பவள் வெறும் போகப்பொருளென்றும், ஆண்களுக்கு அடங்கிப்போகவேண்டிய தசைப்பிண்டமென்றும் இந்தச் சமூகத்தின் கற்பிக்கப்பட்டத்தின் விளைவாக மேலெழும் ஆணாதிக்கத் திமிரினால் நடைபெறும் இதுபோன்று வன்முறைகளுக்கு நம் சமூகம் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் மேலும் இதுபோன்ற குற்றங்கள் மேலும் நிகழாமல் தடுக்கும் விதமாக நீதித்துறை எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் தண்டனை வழங்க வேண்டும், எனினும் உச்சபச்ச தண்டனையில் நம்பிக்கை இல்லாத போதிலும் இது போன்ற பாலியல் வன்முறைகளை தடுக்க இதில் தொடர்படைய அனைவருக்கும் உச்சபச்ச தண்டனை வழங்குவதில் தவறில்லை என்று கருதி அதனையே வலியுறுத்திக்கிறோம். இதில் மனித உரிமைகள் பலவழிகளில் மீறப்பட்டுள்ளதால், மனித உரிமை ஆணையமும் விசாரிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பெண்கள் பாதுகாப்புடன் இருப்பதற்குப் பெண்களின் நடை, உடை ஆகியவை குறித்துப் பெண்களுக்குப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டுப் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வதற்குத் தேவையான தற்காப்பு வழிமுறையைக் கற்றுத்தர வேண்டும் மேலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஆண்களிடம் அதிகம் உரையாடவேண்டிய தேவையும் இங்குள்ளது.
இந்தச் சமூகத்தில் நிலவும் உடல் சார்ந்த கற்பிதங்களை உடைத்து நிர்வாணம் அவமானமுமில்லை, குற்றமுமில்லை என்று குழந்தைகளுக்குக் கற்றுத்தரவேண்டும் மேலும் “Good Touch & Bad Touch” குறித்துத் தொடர் உரையாடலை வெளிப்படையாக நிகழ்த்தவேண்டிய கடமையும் நமக்குள்ளது. பாலியல் வன்முறை என்பது ஒரு குற்றம், தண்டிக்கப்படவேண்டிய குற்றம். இதில் மானம், குடும்ப மரியாதையெல்லாம் அடங்கி இருக்கவில்லை என்பதையும் இதில் பாதிக்கப்பட்டவர் வெட்கப்படவோ அல்லது எதிர்மறையான தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை இல்லை என்று புரிதலையும் நாம் இந்தச் சமூகத்தில் கற்பிக்க வேண்டிய கடமை நமக்குள்ளது.
ஒருவேளை இதுபோன்ற பாலியல் வன்முறை நிகழும் பட்சத்தில், பாதிக்கப்பட்டோர் தையிரியமாகவும், வெளிப்படையாகவும் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லக்கூடிய சூழலை நமது குடும்ப அமைப்பிற்குள்ளும், இந்தச் சமூகத்திற்கும் நாம் கட்டமைக்கவேண்டும். இதில் காவல் துறைக்கும், அரசுக்கும் மிகப்பெரிய பங்குண்டு என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.
பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தகுந்த மனநல ஆலோசனையும் , சிகிச்சையும் அளிக்க வேண்டுமென்றும் இதில் குற்றம் புரிந்த அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டுமென்றும் “பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா” கேட்டுக்கொள்கிறது.
இதுபோன்ற குற்றங்கள் மேலும் நிகழாமல் தடுக்க, ஆண் என்ற ஆதிக்கத்தை தகர்க்க, பாலியல் கல்வி மிக அவசியமாகிறது, பாலின சமத்துவம் குறித்து தொடர்ந்து உரையாடவேண்டிய தேவையும் அதிகரிக்கிறது.
பெண்ணும் ஆணும் சமம் , அதைப் பேணிக்காப்பதே நம் அறம்.
@பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா